Bilingual (Tamil and English) Worship Service in Toronto

Posted on March 26, 2017 02:04:21

தீமையை விட்டு விலகு..

ஒரு மேசையின் மேல் உள்ள கண்ணாடிப் பாத்திரம் ஒன்றில் தெளிந்ததும், சுத்திகரிக்கப்பட்டதுமான தண்ணீர் இருந்தது. அது பார்ப்பதற்கு தெளிவாக இருந்ததுடன், அதை அருந்துவதற்கும் ஏற்ற தாகவே இருந்தது. இப்போது எந்த வாசனையும் அற்ற, தெளிவுள்ள ஒரு துளி விஷம் அந்த பாத்திரத்திற்குள் போடப்பட்டது. இப்போது அந்த பாத்திரத்திலுள்ள தண்ணீர் பார்வைக்கு தெளிவாக இருந்தது, ஆனால் குடிப்பதற்கு ஏற்புடையதல்ல. ஒரு துளி விஷம் விழுந்ததால் என்ன? அது 99.99மூ சுத்தமாக இருக்கின்றது என சொல்லிவிட முடி-யாது. அந்த ஒரு துளி விஷம் முழுத் தண்ணீருடனும் கலந்திருப்பதால் இப்போது அந்த பாத்திரத்தில் இருப்பது விஷமாக இருப்பதினால் அதை யாரும் தாகத்திற்கு அருந்த முடியாது.

விரும்பின போது தாகம் தீர்க்கும் பானமாகவும், மற்றும்படி அது ஒரு ஆட்கொல்லி விஷமாக பாவனை செய்து கொள்ளலாம் என்றும் சொல்ல முடியாது.  நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளு க்கும் ஐக்கிய மேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங் கேது? தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களு க்கும் சம்பந்தமேது? (2 கொரி 6:14-16) 

என்று வேதாகமத்தில் குறிப்பிட ப்பட்டது போல, தேவன் உத்தமரும் நீதி நிறைந்தவருமாயிருக்கின்றார் (சங் 92:14-15). அவரிடத்தில் எந்த இருளின் கிரியைகளும் இல்லை. ஒரு சமயம் இயேசு பிசாசு பிடித்த குருடும் ஊமையுமான ஒருவனை சொஸ்தமாக்கினார்.  பரிசேயரோ அவரை எதிர்த்து இவன் பிசாசுக ளின் தலைவனாகிய பெயல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறானே யல்லாமல் மற்றப்படியல்ல என்றார்கள்.  இயேசு அவர்கள் சிந்தனை களை அறிந்து, அவர்களை நோக்கி: தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போம்; தனக்குத்தானே விரோத மாய் பிரிந்திருக்கிற எந்த பட்டணமும் எந்த வீடும் நிலைநிற்கமாட்டாது.  சாத்தானைச் சாத்தான் துரத்தினால் தனக்கு விரோதமாகத் தானே பிரிவினை செய்கிறதாயிருக்குமே அப்படிச் செய்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்? என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிரு க்கிறான்; என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான் என்றார். (மத்தேயு 12:22-26) எனவே ஒருவன் இரண்டு எஜமானுடையவனாக இருக்க முடியாது. நாங்கள் தேவனை சார்ந்தவர்களாக இல்லாவிட்டால், இந்த உலக போக்கிற்கு உட்பட்டவர்களாக இருப்போம். அங்கு கொஞ்சம் இங்கு கொஞ்சம் என்று இருப்பது மாய்மாலமான வாழ்க்கையாக இருக்கும். (யாக்கோபு 4:4, யோவான் 15:19, 1 யோவான் 2:15)

கர்த்தராகிய இயேசு இந்த உலகத்தை விட்டு பரலோகத்திற்கு எழுந்தருளும் நாட்கள் சமீபித்தபோது, தன்னுடைய சீஷனாகிய பேதுரு வை நோக்கி என்னுடைய ஆடுகளை மேய்ப்பாயா என்று கேட்டார். 

ஏனெனில் தேவனுடைய செயல்கள் மனிதர்கள் ஊடாகவே இந்த உலகிலே நடத்தப்படுகின்றது. இந்த மனிதர்கள் தேவனுடைய சித்தத்திற்கு தங்களை ஒப்புக் கொடுக்கின்றார்கள். இவர்கள் தேவ ஆவியினாலே நடத்தப்படுகின்றார்கள். 

அதே பிரகாரமாக பிசாசின் செயல்களும் மனிதர்கள் ஊடாகவே நடப் பிக்கப்படுகின்றது. இந்த பிசாசின் செயல்கள் எங்கள் உடல் இச்சை களை நிறைவேற்றுவதாகவும், அவைகளின் செயற்பாடுகளை இந்த உலகத்திலே காணக் கூடியதாகவும், அவற்றை அனுபவிக்க கூடியதாக வும் இருப்பதால் மனிதர்கள் அவைகளை நம்பி ஏமாற்றமடைந்து விடுகின்றார்கள். 

ஒரு ஊருக்கு பல மைல்களுக்கு அப்பால் புறம்போக்கான இடத்தில் பெரிய எல்லை ஒன்று கம்பிகளால் அமைக்கப்பட்டிருந்தது. எல்லைக்கு அப்பால் இருந்த ஏரியில் பயங்கரமான முதலைகளும், ஆட்கொல்லி ஜீவஜந்துக்களும் இருந்ததால், எல்லைக்கு ஒரு மைல் தூரத்தில், அந்த எல்லையைத் தாண்டுவதாலோ, அல்லது அதற்கு அருகில் செல்வதாலோ வரக்கூடிய உயிர் ஆபத்தை குறித்து எச்சரிக்கை அடையாளம் படங்களோடு போடப்பட்டிருந்தது. பல ஆண்டுகளாக யாரும் அவ்விடத்திற்கு போகாதிருந்தார்கள். எந்த ஆபத்தும் நடக்கவில்லை. அங்கு ஒருவரும் செல்லாதபடியால் ஒரு ஆபத்தையும் குறித்து சாட்சி பகர அங்கு யாருமில்லை. இதனால் அங்கு போனால் உண்மையாக ஆபத்து வருமோ இல்லையோ என்ற கேள்வி சிலருடைய உள்ளத்தில் எழ ஆரம்பித்தது. சில கீழ்படிவற்ற மனிதர்கள் அந்த ஏரியில் நீந்தும் படியாக அந்த எல்லையருகே நோக்கி சென்றார்கள். அந்த ஊரின் மூப்பரில் ஒருவர் அந்த மனிதர்களை தடுக்க முயன்றார். அதற்கு அந்த மனிதர்களில் ஒருவன் அவரிடம் சில கேள்விகளைக் கேட்டான்.மனிதன்:  யாரும் எப்போதாவது அந்த ஏரிக்கு சென்றிருக்கின்றார் களா? என்று கேட்டான். 

ஊரின் மூப்பர்: இல்லை தம்பி,  அங்கு ஆபத்து இருக்கின்றபடியால் தான் எங்கள் முந்னோர்கள் நாங்கள் அழிந்து போகாதபடி எல்லையையும் போட்டு எச்சரித்திருக்கின்றார்கள் என்றார். 

மனிதன்: யாருக்கும் ஏதாவுது ஆபத்து வந்ததை உங்கள் வாழ்நாட்களில் நீங்கள் கண்டீர்களா அல்லது முன்பு எப்போதாவது யாருக்கும் சேதங்கள் வந்ததாக கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? 

ஊரின் மூப்பர்: அவர் இல்லை மகனே, என் சொல்லை கேள் என்றார். 

அந்த மனிதர்களோ அந்த மூப்பரின் சொல்லை பொருட்படுத்தாமல் எல்லையை தாண்டி சென்றார்கள். கடலில் இறங்கு முன்பே, அவர்கள் யாவரும் முதலைகளால் கொடூரமாக கொல்லப்பட்டார்கள். 

பிசாசானவன் ஸ்திரியாகிய ஏவாளை வஞ்சிக்க முன், தேவன் மனித ர்களுக்கு தீமை விளைவிக்கும் அந்தக் கனியை குறித்து எச்சரித்து அதை விலக்கி வைத்திருந்தார். ஏனெனில் தேவன் அன்புள்ளவர், அப் படி அந்த கனியை புசிப்பதால் வரும் விளைவு மனிதர்களுக்கு தீமை யானது என்று அறிந்திருந்தார். அந்தக் கனியை முன்பு எந்த மனிதரும் உண்டதுமில்லை, அதனால் வரும் தீமையை யாரும் இன்னும் காணவு மில்லை. கனி முன்பாக இருக்கின்றது, அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தி யைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டாள். பிசாசானவன் ஏவாளை வஞ்சித்தான். 

இதே பிரகாரமாகத்தான் இந்த உலகில் பிசாசானவன் போடும் வஞ்சகமான வலைகள் இருக்கின்றது. அந்த வஞ்சகத்தின் தற்காலிக இன்பங்களை கண்டும் தொட்டும் உணரக்கூடியதாக இருப்பதால் அவைகளை இச்சித்து வஞ்சக வலைக்குள் மனிதர்கள் சிக்கி விடுகின்றார்கள்.

ஆனால் தேவனுடைய ஈவுகள் பல வேளைகளில் கண்டு, தொட்டு உணரமுடியாததால் அதன் நன் மைகள் மறைபொருளாகவே இருக்கின்றது.

உதாரணமாக, திருமணமாக இருக்கும் ஒரு பெண், சொற்பனம் ஒன்றைக் காண்கின்றாள். உனக்கு பேசப்படும் திருமண ஒப்பந்தத்தில் அநேக பிரச்சனைகளும் பின் விளைவுகளும் உண்டு, எனவே இந்த ஒப்பந்தத்தை விட்டுவிடு. அவளும் அந்த சொற்பனத்திற்கு கீழ்ப்படிந்து அதை விட்டு விடுகின்றாள். பின்பு தேவ சித்தத்தின்படி ஒருவரை திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்கின்றாள். தேவன் இவளுக்கு முன்பு காட்டிய சொற்பனத்தைக் குறித்ததான தீமை அவள் வாழ்க் கையில் நடைபெறாதபடியாலும்,   அந்த திருமணத்தை செய்திருந்தால் அதனால் வரும் விபரீதங்களை வாழ்க்கையில் அனுபவிக்காதபடி யாலும், அந்த தீமையின் விளைவின் தார்ப்பரியத்தை இப்போது அவள் உணர்ந்து கொள்ள முடியாதவளாக இருக்கின்றாள். அந்த சொற்பனத் தால் வந்த நன்மை அவளுக்கு இப்போது மறைபொருளாகவே இருக்கி ன்றது. இப்படியாக மனிதர்கள் வாழ்வில் தேவனால் உண்டான நன்மை கள் அதிகமதிகம் ஆனால் அவை யாவற்றின் பலனை மனிதர்கள் உற்று நோக்குவதில்லை. தேவன் தரும் ஆவிக்குரிய பிரகாசமுள்ள மனக் கண்களால் தேவனுடைய ஞான நன்மைகளின் பலனை நாங்கள் அறிந்து கொள்ள முடியும்.

தேவன் எப்போதும் எங்கள் ஆத்துமாவிற்கு நன்மை செய்கின்றார். பிசாசானவன் கொல்லவும் அழிக்கவுமேயன்றி வேறொன்றுக்கும் வரான். (யோவான் 10:10).

எந்த ஒரு மனிதனும் தேவனைப் பிரியப்படுத்துகிறவனாகவும், பிசாசின் கிரியைகளுடன் ஐக்கியமுள்ளவனாகவும் இருக்க முடியாது. ஒருவன் தேவனை பிரியப்படுத்தாவிட்டால், அவனுடைய வாழ்க்கையில் பிசாசின் அடிமைத்தனம் இருக்கும். 


தேவன் தமது சித்தத்தின்படி நித்தியமான ஞான நன்மைகளை, தாம் அன்பு செய்கிற தேவ பிள்ளைகள் ஊடாக வெளிப்படுத்துகின்றார்.  அதே போல வஞ்சகமுள்ள பிசாசு தன்னுடையவர்கள் ஊடாக மனிதர்க ளுடைய ஆத்துமாவிற்கு நித்தியமான தீமையை உண்டுபண்ணுகின் றான். எனவே நாங்கள் தீமையை விட்டு விலகி, நன்மை செய்கின்ற தேவனை பற்றிக் கொள்ள வேண்டும். தீமையை விட்டு விலகுவதெ ன்பதை குறித்து அவதானமாக இருக்க வேண்டும். தீமையானது மனிதர்கள், ஸ்தாபனங்கள், அமைப்புக்கள் வழியாக வசீகரமான இச்சி க்கத்தக்க தோற்றதுடன், இனிமையான சொற்கள் நிறைந்தவைகளாவும் அவற்றினுள் வஞ்சனையுள்ள விஷம் நிறைந்ததாகவும் இருக்கும். எனவே நீங்கள் யாருடைய அபிமானிகள், யாருடைய ரசிகர்கள்  எனஆராய்து பார்க்க வேண்டும். 

இன்றைய உலகிலே, மனிதர்கள் பலதரப்பட்ட துறைகளிலே உலக பிரசித்தி பெற்ற நட்சத்திரங்களின் அபிமானிகளாக இருக்கின்றார்கள். விளையாட்டுத் துறை, திரையுலகம், அரசியல், மற்றும் சமயம் சார்ந்த நட்சத்திரங்களின் வாழ்க்கை முறை தேவ வழிமுறைகளுக்கு அப்பாற் பட்டதாக இருப்பதை பொருட்படுத்தாது, அவரின் திறமைகளை அல்லது தோற்றத்தை மெச்சிக் கொள்வார்கள். “அந்த நட்சத்திரத்தின் வாழ்க்கை முறை எனக்கு விருப்பமில்லை ஆனால் அவருடைய பேச்சு த்திறமை அபூர்வமானது, அவர் உரையாற்றும் போது நான் தவறாமல் பார்ப்பேன்” என்று கூறுபவர்கள் பலர்.

இந்த உலகிலே நாங்கள் வாழும் காலம் மட்டுப்படுத்தப்பட்டது. அந்த கால எல்லைக்குள் எங்கள் வாழ்க்கையில் தேவன் தரும் அறிவு, நேரம், ஐசுவரியம் (பணம், பொருள்) போன்றவைகளை எப்படி செலவு செய்கின்றோம் என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். அவைகள் யாவும் தேவனுடைய நாமத்திற்கு மகிமையை கொண்டு வர வேண்டும். உதாரணமாக இன்று மனிதர்கள் தங்கள் நேரத்தையும், பணத்தையும் செலவு செய்து தொலைக் காட்சி மற்றும் இன்ரநெற் ஊடாகவும் பல காட்சிகளையும், சம்பவங்களையும்,  திரைப்படங்களையும் பார்க்கின்றார்கள். மதுபானத்தை உட்கொண்டு வெறி கொள்கின்றார்கள். இவைகள் யாவும் பக்திவிருத்திக்கு ஏற்றவைகளா? தேவ உறவில் வளர இவை உதவி செய்கின்றதா? அல்லது  இவைகளால் மாம்ச இச்சைகளை மட்டும் திருப்தியாக்கின்றனவா? இதிலே செலவு செய்யும் பணம், நேரம் தேவனுடைய நாமத்திற்கு மகிமையை கொண்டு வருகின்றதா? இவைகளை பார்ப்பவர்களும், உட்கொள்பவர்களும், யாரை ஊக்குவிக்கின்றார்கள்? எப்படிப்பட்ட ஸ்தாபனங்கள் வளரும் படியாய் ஒத்தாசையாக இருக்கின்றார்கள்? இவைகளை நடப்பிக்கும் நபர்களும் ஸ்தாபனங்களும் அவர்களுடைய கிரியைகளும் உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் தேவ நன்மைகளை தருவதாக அமையுமா? பிரியமானவர்களே, சிந்தியுங்கள்! எதனால் உங்கள் சிந்தையை நிறைக்கின்றீர்களோ, அதனால் நீங்கள் நிறைந்திருப்பீர்கள், காலப்போக்கில் அவைகள் உங்கள் வாழ்க்கையை ஆண்டு கொள்ளும்.

மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.தன் மாம்சத் திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்;  ஆவிக்கென்று  விதைக்கிறவன்  ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான். (கலாத்தியர் 6:7-8) 

எந்த நபரையோ, எந்த ஸ்தாபனத்தையோ நியாந்தீர்ப்பது என்னுடை யதோ உங்களுடையதோ பொறுப்பு அல்ல. தேவன் ஒருவரே நீதியுள்ள நியாயதிபதி! ஆனால், தீமை என்ன என்பதை அறிந்து, தீமையை உண்டு பண்ணுகிற மனிதர்களையும், அந்த தீமையை நன்மை என சொல்லி வசீகரமாக அவற்றை சந்தைப் படுத்துபவர்களையும் (ஆயசமநவiபெ) இனங்கண்டு அவைகளில் ஒரு துளியைக் கூட உள்வாங் கக் கூடாது. தேவன் எங்களை நன்மையால் நிரப்பி இருக்க நாங்கள் தீமையானவைகளை எங்கள் வாழ்வில் வரவேற்கக் கூடாது. எந்த மனிதனும் அழிந்து போவது தேவனுடைய சித்தம் அல்ல, ஆகவே அவர்களும் இரட்சிப்பை காணத்தக்கதாக நாங்கள் அவர்களுக்காக ஜெபம் செய்ய முடியும்.


நாங்கள் எப்படி தீமையை அறிந்து கொள்ளலாம்?

நன்மையாக தோன்றாததெல்லாம் தீமையாகவே இருக்கின்றது. நன்மையானதை கண்டடையாதவன் தீமையோடு வாழ்ந்து வருகின்றான். நன்மையை கண்டடைகின்றவனுடைய வாழ்க்கையிலும், நன்மையை அறிவிப்பவனின் வாழ்க்கையிலும், அவன் துன்மார்க்கருடைய ஆலோச னையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருப்பான். இப்படிப்பட்டவன் பாக்கியவான்.

இவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான் அவன் செய்வதெல்லாம் வாய்க்கும். ஆகவே இப்படிப்பட்ட நன்மை நிறைந்த வாழ்க்கை வாழாதவர்களின் அபிமானிகளாகவோ, ரசிகர்களாகவோ இருக்க வேண்டாம். 

ஒரு காரியம் தீமை என்று கண்டால், அல்லது அது பொல்லாப்பாய் தோன்றினால், அதை இச்சித்து, அதில் ஒரு நன்மையை எப்படியாவது காண முயற்சித்து, அதை நியாயப்படுத்த முனையாதிருங்கள். நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தம் இல்லை! ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியம் இல்லை! கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் (துன்மார்க்கர்) இசைவேது மில்லை! இயேசு என்னும் ஞான நன்மையை பற்றிக் கொள்ளுங்கள்!

கர்த்தரில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்து விடுங்கள் அவர் தம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களைக் காப் பாற்றி, துன்மார்க்கரின் கைக்கு  அவர்களைத்  தப்புவிக்கிறார்.(சங்கீதம் 97:10) 

தீமையை வெறுத்து, நன்மையைப்பற்றிக்கொண்டிருங்கள். (ரோமர் 12:9)

நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்; அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய கர்த்தர் உங்களோடே இருப்பார். (ஆமோஸ் 5:14)

தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம். (நீதிமொழிகள் 8:13)

பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள். (தெசலோனிக்கேயர் 5:22)

 

பிரியமானவர்களே இன்று உங்கள் வாழ்க்கையை ஆராய்;ந்து பாரு ங்கள். கிறிஸ்துவாகிய ஞான நன்மையை அறியாதவர்களே, இயேசு கிறிஸ்துவிடம் உங்கள் வாழ்க்கையை இன்று ஒப்புக் கொடுங்கள்!கிறிஸ்துவை அறிந்தும் இன்னும் தீமைகளுடன் ஐக்கியமாக இருப்பவ ர்களே, தேவனுக்கு பிரியமில்லாத கிரியைகளைவிட்டு மனந்திருப்பு ங்கள். அவர் மன்னிப்பதில் தயை பெருத்தவராக இருக்கின்றார். இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் மீட்கப்பட்டு, அவருக்கு பிரியமாக வாழ்பவர்களே, பிசாசின் தந்திரமான வலைக்குள் சிக்காதபடி அவரை இன்னும் இறுகப் பற்றிக் கொள்ளுங்கள். அவர் உங்களைக் கைவிடமாட்டார்.


கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதாமே உங்களை வழிநடத்துவாராக! ஆமேன்.