புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 31, 2025)

மனப்பூர்வமாக நன்றி!

சகரியா 4:6

பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.


கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை. நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் என்று தீர்க்கதரியாகிய மோசே, தேவ ஜனங்களுக்கு கூறியது போல, நேற்றும் இன்றும் என்றும் மாறாத தேவன் இன்றும், இனியும் இருக்கின்றவராய் இருக்கின்றார். உங்கள் வாழ்விலே பெருமழை போன்ற அனுபவங்களும் புயல் காற்று மோதுவதைப் போன்ற போராட்டங்ளும் ஏற்பட்டும், இன்னும் நீங்கள் விசுவாசத்திலே நிலைத்திருக்கின்றீர்கள் என்றால் அது எத்தனை மேன்மையானது. அது கர்த்தருடைய செயல். கன்மலையாகிய கர்த்தர் நம்மோடு இருக்கின்றார். எனவே, இந்த நாளிலே இன்னும் அதிகமாக நன்றி சொல்லுங்கள். மனதார நன்றி சொல்லுங்கள். என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி. என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே. அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி, உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி, நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வாலவயது போலாகிறது. ஒடுக்கப்படுகிற யாவருக்கும், கர்த்தர் நீதியையும் நியாயத்தையும் செய்கிறார். அவர் தமது வழிகளை மோசேக்கும், தமது கிரியைகளை இஸ்ரவேல் புத்திரருக்கும் தெரியப்பண்ணினார். கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர். அவர் எப்பொழுதும் கடிந்துகொள்ளார்; என்றைக்கும் கோபங்கொண்டிறார். அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார். பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது. மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார். தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார். (சங்கீதம் 103:1-13).

ஜெபம்:

என்னுடைய சுய ஞானத்தினால்ல தேவனே, என்னுடைய பலத்தினாலும் அல்ல ஆண்டவரே, உம்முடைய சத்திய ஆவியினாலே நான் இன்னுமொரு ஆண்டை முடிக்க தந்த கிருபைக்காக நன்றி. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 தெச 5:18