Christian Tamil Articles - என்னைக் காக்கும் கேடகம்

Posted on February 26, 2017 20:28:34

என்னைக் காக்கும் கேடகம்


வெடி மருந்துகளின் பாவனைக்கு முற்பட்ட காலங்களில் யுத்த முனையில் நிற்கும் போர்வீரர்களுக்கு கேடகம் ஓர் அத்தியவசியமான உபகரணமாயிருந்தது. எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து தங்களைப் பாதுகாக்க கேடகங்களை அவர்கள் பாவித்தார்கள். பல திசையிலிருந்து எதிரிகளின் தாக்குதல், அம்புகள், கணைகள் வரும்போது கேடகத்தின் பின்னே தங்களை மறைத்துக் கொள்வார்கள். யுத்தமுனைக்கு சென்ற அத்தகைய வீரர்கள் தங்களது யுத்த அனுபவங்களைக் கூறக்கேட்டால், தங்களுக்குண்டான இக்கட்டு வேளைகளையும் எவ்விதமாக கேடகம் தமக்கு உதவியதென்பதையும் கூறுவார்கள். எதிரியின் தாக்குதல் அதிகரிக்கும் போதும், அது பலமாயுள்ள போதும் கேடகமானது அவர்களுக்கு முன்பாக நிமிர்ந்திருக்கும். எதிரியின் தாக்குதலின் உக்கிரம் குறையும் வரை கேடகம் நிமிர்ந்து முன்னிருக்கும். அதினாலே அவர்கள் அழிவுக்குத் தப்பி பெலன்கொண்டு தங்கள் தலையை நிமிர்த்தி யுத்தத்தில் முன் சென்று எதிரியை மடங்கடிப்பார்கள்.


கேடகமானது அழிவிலும் மரணத்திலுமிருந்து வீரனை பாதுகாக்கின்றது.


தாவீது இராஜா மிகவும் சாதுரியமான யுத்தவீரன். அவன் சென்ற எல்லா யுத்தத்திலும் வெற்றி பெற்றிருந்தான். அவனது பிற்பட்ட நாட்களில் அவனது குமாரன் அவனுக்கு விரோதமாய் சூழ்ச்சி செய்து இராச்சியத்தைக் கைப்பற்றினான். இது முன்னதாகவே தீர்க்கதரிசனமாய் தாவீது இராஜாவுக்கு  அறிவிக்கப்பட்டிருந்தது. அவன் தன் வாழ்க்கையில் அநியாயத்தை நடப்பித்து, பாவம் செய்து யாரும் அதை அறியவில்லை என்று இருந்தபோது தேவன் தீர்க்கதரிசி மூலமாக அவனுக்கு அதை அறிவித்திருந்தார். அதன் நிமித்தம் அவன் மனம் வருந்தி அழுதான், பாவ மன்னிப்பை வேண்டி மன்றாடினான். அவனது குமாரன் அவனுக்கு விரோதமாய் எழுந்து இராச்சியத்தைக் கைப்பற்றிய போது அவன் மிகவும் நெருக்கப்பட்டான். ஓருபுறம் பிள்ளைப் பாசமும் மறுபுறம் உயிராபத்தும் அவனை நெருக்கியது. அவன் நிர்க்கதியானான்.


தன் மீறுதலின் நிமித்தம் அது உண்டாயிற்று என்று உணர்ந்து தன் முகத்தை கைகளினால் மூடிக்கொண்டு அழுதவாறு தன் குமாரனுக்குத் தப்பி ஓடினான். அவமானம், துக்கம், மரண பயம் நிறைந்தவனாய் ஓடியவனின் வாழ்க்கையில் ஓர் உறுதியான அசையாத நம்பிக்கை இருந்தது. தேவன் எனக்கு இரங்குவார். இதுவரை என்னைக் காத்த தேவன் எனக்கு இரங்குவார் என்று தனது இக்கட்டில் பாடினான். அதிலே, கர்த்தாவே நீர் என் கேடகமும், என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்.


நான் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன், அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் செவிகொடுத்தார். நான் படுத்து நித்திரை செய்தேன், விழித்துக்கொண்டேன், கர்த்தர் என்னைத் தாங்குகிறார். எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்து வருகிற பதினாயிரம் பேருக்கும் நான் பயப்படேன். கர்த்தாவே, எழுந்தருளும், என் தேவனே, என்னை இரட்சியும். நீர் என் பகைஞர் எல்லாரையும் தாடையிலே அடித்து, துன்மார்க்கருடைய பற்களைத் தகர்த்துப் போட்டீர். இரட்சிப்பு கர்த்தருடையது. என்று பாடியுள்ளார். 


பிரியமான சகோதரனே சகோதரியே, தேவனாகிய கர்த்தர் உன்னைக் காத்து உன் தலையை நிமிரப் பண்ணும் கேடகமாயிருக்கிறார். ஆபிராகாமே, நீ பயப்படாதே. நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்ற தேவன் தம்மிடத்தில் விசுவாசமாயுள்ள ஒவ்வொருவருடைய வாழ்விலும் அவர்களைத் திடப்படுத்தி அவர்களுக்குக் கேடகமும், மகா பெரிய பலனுமாயிருக்கிறார். அவரை நோக்கிப் பார்த்தவர்களில் ஓருவனேனும் வெட்கப்படவில்லை. மாறாக அவர்களின் முகங்கள் பிரகாசமடைந்தன. இன்று நீ அவரி டத்தில் கேட்பாயானால் தம்மிடத்தில் வருகின்ற யாரையும் புறம்பே தள்ளாத தேவன் உனக்கு கேடகமாவார்

இயேசு சொன்னார் என்னிடத்தில் விசுவாசமாயுள்ளவனுக்கு நித்திய ஜீவனுண்டு.