பழுவும் விடுதலையும்

Posted on April 08, 2016 01:04:53

எந்தக் காரியமானாலும் அது ஓருவரின் பெலத்திலும் அதிகமாகும் போது அது அவருக்கு பழுவாகி விடுகின்றது. வேலை செய்ய வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற விருப்பம் எல்லோரிட த்திலும் உண்டு. அவ்விருப்பம் உள்ளவர்களும் விடுமுறையை விரும்புகிறார்கள். காரணம் ஓய்வு தேவை.

சிலருக்கு அவர்களது வாழ்க்கையே அவர்களுக்கு பழுவாகி விடுகின்றது. நீச்சல் தெரியாதவர்கள் சில வேளைகளில் தவறி ஆழத்தில் விழுந்து விடுவதுண்டு. நீச்சல் தெரிந்தவர்களும் வெகு தூரம் நீந்திச் சென்று ஆழத்தில் களைத்து போய்விடுவதுமுண்டு. இவ்விரண்டு நிலையிலும் அவர்களுக்கு கால தாமதமின்றி உதவிக்கரம் கிடைக்காவிடின் முடிவு மிகவும் வேதனை நிறைந்ததாகவே இருக்கும்.

பரிசுத்த வேதாகமத்திலே இரண்டு சகோதரிகளின் தெரிவைக்குறித்து கூறப்பட்டுள்ளது. ஓருத்தி பெயர் மார்த்தாள், மற்றவள் மரியாள். இயேசு பிரயாணமாய்ப் போகையில், அவர் ஒரு கிராம த்தில் பிரவேசித்தார். அங்கே மார்த்தாள் அவரைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டாள். அவளது சகோதரி மரியாள், இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள். மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தம டைந்து, இயேசுவினிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டுவந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி செய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள். இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: மார்த்தாளே, நீ அநேக காரியங்க ளைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.

நாம் வேலை செய்ய வேண்டும். எமது கடமைகளை நிறைவேற்ற வேண்டும். சில சமயங்களில் அவை எமக்கு பெரிதான பழுவாகி விடுகின்றது. ஆனால் ஆறுதல் தரும் இடமொன்று உண்டு. அது இயேசுவின் பாதமே. இயேசு சொன்னார் “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கி றவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்க ளுக்கு இளைப்பாறுதல் தருவேன்.” என்று. ஆம் இயேசுவின் பாதத்தில் இளைப்பாறுதல் உண்டு.

தேவன் தன்னிடத்தில் நம்பிக்கையாயிருந்த இஸ்ரவேல் ஜனங்களை நோக்கி, “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன், திகையாதே, நான் உன் தேவன், நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன், என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன். உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணை நிற்கிறேன் என்று சொல்லுகிறேன்.” என்று கூறி அதை நிறைவேற்றினார். அதே தேவன் மாறாதவராய் இருக்கின்றார்.

பரிசுத்த வேதாகமத்திலே பின்வருமாறு தேவனைக் குறித்து எழுதப்பட்டுள்ளது.

தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான். அவர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவையும் உண்டாக்கினவர், அவர் என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர். அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார், பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங் கொடுக்கிறார், கட்டுண்டவர்களைக் கர்த்தர் விடுதலையாக்குகிறார். குருடரின் கண்களைக் கர்த்தர் திறக்கிறார், மடங்கடிக்கப்பட்டவர்களைக் கர்த்தர் தூக்கிவிடுகிறார், நீதிமான்களைக் கர்த்தர் சிநேகிக்கிறார். பரதேசிகளைக் கர்த்தர் காப்பாற்றுகிறார், அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார், துன்மார்க்கரின் வழியையோ கவிழ்த்துப்போடுகிறார்.

மடங்கடிக்கப்பட்டவர்கள் எனப்படுவோர் முற்றிலுமாய் தோல்வியுற்று எழுந்திருக்க முடியாதபடி விழுந்து போனவர்கள். அவர்களை தேவன் தூக்கி விடுகின்றார். இங்கு தூக்கி விடுவதென்பது மீண்டும் பெலன் கொடுத்து, வெட்கத்திலும் தோல்வியிலும் நிந்தையிலிருந்தும் விடுதலை கொடுப்பதாகும். தேவன் எமது தலையை நிமிரச் செய்கின்றவர்.

பிரியமான சகோதரனே, சகோதரியே!

இன்று தேவன் உனது வாழ்கையின் ஆறுதல் தரும் வழிகாட்டியாக வேண்டும் என்று விரும்பினால், பாவங்களை மன்னிக்கும் இயேசுவே என் வாழ்வில் வாரும். என் பாவங்களை மன்னித்து எனக்கு பாவ பழக்கங்களிலிருந்து விடுதலை தாரும், எனக்கு ஆறுதல் வேண்டும் என்று கூறுவாயாக.

இரட்சிப்பு கர்த்தருடையது, தேவரீருடைய ஆசீர்வாதம் உம்மு டைய ஜனத்தின்மேல் இருப்பதாக.