வழியும் சத்தியமும் ஜீவனும்

Posted on March 17, 2016 21:28:49

பல நூறு மைல் தொலைவிலுள்ள ஊருக்கு செல்லுவதற்காக ஓர் முதியவர் வழியோரமாய் காத்திருந்தார். அவரை அழைத்துச் செல்ல ஒருவர் வேண்டும். அந்த முதியவருக்கோ தான் போக வேண்டிய ஊருக்கு வழி எதுவென்று தெரியாது. அவ்வேளையில் அவரின் நண்பன் அவரிடத்தில் அவருக்கு உதவி செய்யக்கூடிய ஓருவரைப்பற்றி கூறினார். அவ்வேளையில் முதியவர் தனது நண்பனிடம் தனது சந்தேகங்களை தெளிவுபடுத்த சில கேள்விகளைக் கேட்டார்.

  • கேள்வி 1: மெய்யாக அவருக்கு போகிற வழி தெரியுமோ?
  • கேள்வி 2: அவர் எப்படிப்பட்டவர், உண்மையான ஆளோ?
  • கேள்வி 3: அவர் பத்திரமாய் கொண்டு போய் சேர்ப்பாரோ?

இவை தெளிவு படுத்த வேண்டிய கேள்விகளே. மார்கழி மாதம் என்றவுடன் கிறிஸ்மஸ், இயேசு கிறிஸ்துவின் பிறப்பு எல்லோருடைய ஞாபகத்திலும் தோன்றிவிடும். இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் விஷேசம் தான் என்ன?

பரிசுத்த வேதாகமத்திலிருந்து சில சம்பவங்களைப் பார்ப்போம்.

லூக்கா 2:8-14

அப்பொழுது (இயேசு இவ்வுலகில் பிறந்த போது) அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள். அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது, அவர்கள் மிகவும் பயந்தார்கள்.

தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள், இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.

பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள், இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்.

அந்தசஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி: உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.

ஆம், இயேசு கிறிஸ்துவின் பிறப்பானது எல்லோருக்கும் மிகுந்த சந்தோஷத்தைத் தரும் செய்தியே. ஏனென்றால் அவரே இரட்சகர், பாவங்களை மன்னித்து பாவங்களிலும் பாவ பழக்கங்களில் இருந்தும் விடுதலை தருபவர். ஓருமுறை யூதர்கள் அவரிடத்தில் வினவியபோது “குமாரன் (இயேசு) உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்” என்று யோவான் 8:36 இல் கூறியுள்ளார். மெய்யான விடுதலை இயேசு கிறிஸ்துவினால் கிடைக்கின்றது.

மேலும் இயேசு, “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் (பரலோகம்/மோட்சம்) வரான்.” என்று (யோவான் 14:6) கூறியுள்ளார்.

 பிரியமான சகோதரனே, சகோதரியே!

  • இயேசு ஒருவரே பரலோகம் செல்லும் வழி.
  • இயேசு ஒருவரே சத்தியம்.

இயேசு ஒருவரே ஜீவன் தருபவர்;. மனித வாழ்வு மரணத்தோடு முடிந்து போவதில்லை. உன் ஆத்துமாவை அழியாது காத்து ஜீவன் தந்து மோட்சத்தில் சேர்ப்பவரும் அவரே. இவ்வுலக வாழ்விலும் கூட இருந்து ஆறதல் தந்து வழி நடத்துபவர் இயேசு.

இன்று உனது வாழ்க்கை மாறவேண்டும், வேண்டாத பாவ பழக்கங்களிலிருந்து விடுதலை வேண்டும், தேவனுடைய இராச்சியத்தை தேட வேண்டும் என்று விரும்பினால், பாவங்களை மன்னிக்கும் இயேசுவே என் வாழ்வில் வாரும். என் பாவங்களை மன்னித்து எனக்கு பாவ பழக்கங்களிலிருந்து விடுதலை தாரும் என்று கூறுவாயாக.