Posted on March 15, 2016 18:27:20
இலங்கையில், ஒரு முறை ஓரு வீட்டின் இரண்டாவது மாடியை வாடகைக்கு எடுத்திருந்தோம். அவ்வீட்டிற்கு அதன் உரிமையாளர் தண்ணீர் தாங்கியொன்றை உயரத்தில் அமைத்திருந்தார். ஆனால் அதின் தொட்டியோ வெடிப்புள்ளதாயிருந்தது. இதனால் தண்ணீரும் மின்சாரமும் விரையமானது. இதை அவரிம் முறையிட்டேன். அவரோ அதைத் திருத்துவதற்கு காலம் தாழ்த்தினார். இறுதியில் தண்ணீர் கட்டணமோ சில ஆயிரம் ரூபாக்களைத் தாண்டியது. இப்போது அதை யார் செலுத்த வேண்டும்? அது ஒரு விரும்பத்தகாத நேரம். இறுதியில் அவர் தனது தவறிற்க்கும் அலட்சியத்திற்கும் விலை கொடுக்க வேண்டியதாயிற்று.
தண்ணீரைத் தொட்டியில் நிறைத்து வைத்த ஓருவர், அதைக் காணவில்லையே, யார் எடுத்தார்கள்? அதற்கு என்ன ஆயிற்று? எனது தேவையை அது நிறைவேற்றவில்லையே, எனது பணமும் பிரயாசமும் வீணாகின்றதே. தண்ணீர் இருந்தது ஆனால் எனக்கு தேவையான போது அதைக் காணவில்லையே என்று கோபமடையலாம். அல்லது இதுவே தொடர் கதையாயுள்ளது என்று விரக்தியடையலாம். கோபமடைவதாலோ அல்லது விரக்தி அடைவதாலோ என்ன பயன் உண்டாகப் போகிறது? மாறாக, தண்ணீர்த் தொட்டியை ஆராய்ந்து, அது வெடிப்புள்ளது என்று அறிந்து அதைப் பழுதுபார்த்தால் வீணான துன்பத்தைத் தவிர்த்துக் கொள்ளலாம் அல்லவா?
மனிதர்களின் வாழ்வில் அவர்களின் பிரயாசங்கள் விருதாவாய்ப் போவது துக்கமானதும் விரும்பதகாததுமான நிகழ்வு. இவ்விரயம் பல வேறுபட்ட வடிவங்களில் வாழ்க்கையில் இடம் பெறுகின்றது. உழைத்த பணம் விரையமாகுதே. தொடங்கிய வாழ்வு விரையமாகுதே. வளர்த்த பிள்ளைகளின் வாழ்வு விரையமாகுதே. இப்படி பல விரையங்கள் வாழ்க்கையில் வருவதேன் என்று ஓருவர் கலங்கலாம். இதன் அடிப்படை காரணம் தான் என்ன?
பொருளாசை: வருட இறுதியில் வரி அறிக்கை செய்வது இந்நாட்டின் சட்ட ஒழுங்கு. ஓருவர் தவறான வரி அறிக்கையை சமர்ப்பித்தால் இறுதியில் அதிக பணம் தண்டனையாக செலுத்த வேண்டிவரும். பொருளாசையை சார்ந்து வரி ஏய்ப்பு செய்பவர்கள் இறுதில் துன்பப்படுவார்கள்.
கெட்ட நடக்கைகள்: சூதாட்டம் பல நாடுகளில் சட்டப்படி அங்கிகரிக்கப்பட்டாலும் மிகவும் தவறான பழக்கங்களில் ஓன்று. இதைப் போன்றே மது அருந்துதல். இவற்றை தொட்டு வேறு பல கெட்ட பழக்கங்களும் கெட்ட நண்பர்களும் சேர்ந்து மனிதரின் பிரயாசங்களை அழிந்து போகப்பண்ணும்.
இப்படியே பல நிகழ்வுகளையும் அதன் தோற்றுவாயையும் பட்டியலிடலாம். இவை எல்லாவற்றுக்கும் மூல காரணமுண்டோ? இது இயற்கையானதா? அல்லது, இது ஒருவரின் தெரிந்து கொள்ளுதலா?
ஏரேமியா என்ற தீர்க்கதரிசி ஊடாக தேவன் “என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள், ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள், தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக் கொண்டார்கள்.” என்று கூறியுள்ளார்.
ஓழுக்கமுள்ள வாழ்வை வாழும்படி ஒருவன் தனது வழிகளை மாற்றிக்கொண்டு ஜீவனுள்ள தேவனைப்பற்றிக் கொண்டு வாழத் தன்னை ஒப்புக் கொடுப்பானாகில், அவன் இவ்விரு தீமைகளையும் விட்டு நீங்கியிருப்பான். பரிசுத்த வேதாகமத்தில் “நீயோ மனந்திரும்பி, கர்த்தரின் சத்தத்திற்குச் செவிகொடுத்து, நான் இன்று உனக்குக் கற்பிக்கிற அவருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் செய்தால், அப்பொழுது உனக்கு நன்மை உண்டாகும்படி உன் தேவனாகிய கர்த்தர் உன் கைகள் செய்யும் எல்லா வேலைகளிலும், உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருக ஜீவனின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரணமுண்டாகச் செய்வார்.” என்று எழுதப்பட்டுள்ளது. இது தேவன் அருளும் ஆசீர்வாதமாயுள்ளது. ஓருவன் ஆசீர்வதிக்கும் தேவனை தனது தாபரமாய்க் கொண்டிருந்தால், அவர் அவன் கைகளின் பிரயாசத்தை ஆசீர்வதித்து அவனை நடத்துவார்.
மனித வாழ்வு இவ்வுலக வாழ்வோடு ஓழிந்து போவதில்லை. அவனவன் தன் தன் கிரிகைகளைக் குறித்து சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு கணக்கு ஓப்புவிப்பான். நல்ல கணக்கை ஓப்புவிக்கத்தக்கதாய் இப்போதே பிரயாசப்படுவது புத்தியுள்ள செயலாகும். தேவபக்தியானது இவ்வுலக வாழ்விற்கும் இனிவரும் வாழ்விற்கும் பிரயோசனமுள்ளதால் அதைப் பற்றிக் கொள்ளுவதே சிறந்தது.
இன்று உனது வாழ்க்கை மாறவேண்டும், வேண்டாத பாவ பழக்கங்களிலிருந்து விடுதலை வேண்டும் என்று விரும்பினால், இயேசுவே என் வாழ்வில் வாரும். என் பாவங்களை மன்னித்து எனக்கு பாவ பழக்கங்களிலிருந்து விடுதலை தாரும் என்று கூறுவாயாக. அவரே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருகின்றார். தம்மிடத்தில் வருகிற ஒருவனையும் இயேசு புறம்பே தள்ளுவதில்லை, மாறாக அவனை ஏற்றுக் கொண்டு ஆசீர்வதிக்கின்றார்.