Posted on March 27, 2016 01:47:04
பொன் மங்கிப் போகுமோ? பசும்பொன் மாறிப் போகுமோ? வெள்ளி களிம்பாகுமோ?
இஸ்ரவேல் தேவனை விட்டு பின்வாங்கி பாவ வழிகளில் சென்று தங்களைக் கெடுத்துக் கொண்ட போது அவர்கள் தேவனுடைய பாதுகாப்பை இழந்து போனார்கள். அவர்கள் வாழ்வில் துன்பங்களும் அழிவுகளும் பெருகியது. அந்த நிலைமையை குறித்து தேவனுடைய தீர்க்கதரிசியான ஏரேமியா கூறிய வார்த்தைகள்:
“ஐயோ! பொன் மங்கி, பசும்பொன்மாறி, பரிசுத்த ஸ்தலத்தின் கற்கள் சகல வீதிகளின் முனையிலும் கொட்டுண்டுபோயிற்றே. ஐயோ! தங்கத் துக்கொப்பான விலையேறப்பெற்ற சீயோன் குமாரர் குயவனுடைய கைவேலையான மண்பாண்டங்களாய் எண்ணப்படுகிறார்களே.”
ஆம் அவர்களது மகிமை அவர்களை விட்டு போனது. அவர்களது மேன்மை அவர்களிடத்திலிருந்து அகற்றப்பட்டது. தங்கத்துக் கொப்பானவர்கள் மட்பாண்டங்களாய் எண்ணப்பட்டார்கள். இஸ்ரவேல் பாவ வழிகளில் சென்ற போது தேவன் தமது தீர்க்கதரிசியான ஏசாயாவினுடாக அவர்களைக் குறித்து:
“உன் வெள்ளி களிம்பாயிற்று, உன் திராட்சரசம் தண்ணீர்க் கலப்பானது. உன் பிரபுக்கள் முரடரும் திருடரின் தோழருமாயிருக்கி றார்கள், அவர்களில் ஒவ்வொருவனும் பரிதானத்தை விரும்பி, கைக்கூலியை நாடித்திரிகின்றான், திக்கற்ற பிள்ளையின் நியாயத்தை விசாரியார்கள், விதவையின் வழக்கு அவர்களிடத்தில் ஏறுகிறதில்லை.” என்று கூறியுள்ளார்.
தங்கமே, தங்கமணியே என்று தாலாட்டிய பிள்ளைகள் ஏன் இப்படியானார்கள்? கடவுளை நம்பித்தானே இருக்கிறேன். பின்ன ஏன் இப்படியாயிற்று? என்ற கேள்விகளும் கேட்கப்படுவதுண்டு.
சோம்பேறியாக உள்ளவன் சோம்பலின் அப்பத்தைக் புசிப்பான். அவனைக் குறித்து பரிசுத்த வேதாகமத்திலே இவ்விதமாய் கூறப்பட்டு ள்ளது.
“சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது.” என்றும் “சோம்பேறி தன் கையைக் கலத்திலே வைத்து, அதைத் திரும்பத் தன் வாயண்டைக்கு எடுக்காமலிருக்கிறான்.” என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் “சோம்பேறியின் வயலையும் மதியீனனுடைய திராட்சைத்தோட்ட த்தையும் கடந்துபோனேன். இதோ, அதெல்லாம் முள்ளுக் காடாயிருந்தது: நிலத்தின் முகத்தைக் காஞ்சொறி மூடினது, அதின் கற்சுவர் இடிந்து கிடந்தது.” என்றும் கூறப்பட்டுள்ளது. அவனிடத்தில் வயலிருந்தும் வேலை செய்யாதவனாய் வாழ்கிறான். அவன் வாழ்வில் “அவன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலும் அவன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலும் வரும்.”
இன்று கடவுளை நம்பித்தானே இருக்கின்றேன் என்பவன், கருத்தோடு மெய்யான தேவனுக்கேற்றபடி வாழாவிட்டால் அப்படிப்பட்டவன் மேற் கூறப்பட்ட சோம்பேறியைப் போலவே காணப்படுகின்றான். அவனுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது. அவன் வாழ்க்கையானது காஞ்சொறி மூடிய நிலத்தைப் போலவும், இடிந்து போயுள்ள கற்சுவர் போலவுமிருக்கும்,
மனிதர்கள் தேவனை அறியவும், அவர்கள் பரிசுத்த வாழ்வை வாழவும், அவர்களை மோட்சத்தில் சேர்க்கவும் இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்தார். இயேசு கிறிஸ்து சொன்னார் “நானோ அவர்களுக்கு (இயேசுவை ஏற்றுக் கொண்டவர்களுக்கு) ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். நான் அவர்களுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன், அவர்கள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவர்களை என் கையிலிருந்து பறித்துக் கொள்வதுமில்லை.”
தங்கத்திலும் மேலானதும் கிடைப்பதற்கரிய பொக்கிஷமான மனித வாழ்வு மங்கிப் போகாமலும் வாழ்வின் மேன்மை ஓங்கியிருக்கவும் தேவனுடைய திவ்விய வசனம் கால்களுக்கு தீபமும் பாதைக்கு வெளிச்சமுமாயுள்ளது.
பிரியமான சகோதரனே, சகோதரியே!
பொன் மங்கிப் போயிற்றோ? பசும்பொன் மாறிப் போயிற்றோ? வெள்ளி களிம்பாயிற்றோ?
உன் பாவங்களை மன்னித்து உன் சாபங்களை நீக்கி உனக்கு புது வாழ்வு தந்து உன்னை புது மனிதனாய் மனுஷியாய் மாற்ற இயேசு இருக்கிறார். இன்று நீ அதை விரும்புவாயாகில், இயேசுவே என் வாழ்வில் வாரும். என் பாவங்களை மன்னித்து என்னை உம்முடைய பிள்ளையாய் எற்றுக்கொள்ளும் என்று கூறுவாயாக. இயேசு சொன்னார் “என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”