உன் இருதயத்தை எனக்குத் தா

Posted on March 15, 2016 01:42:04

மனிதர்கள் மற்றவரின் இருதயத்தை வென்றிட விரும்புவார்கள். அதை வென்ற பின்பு பின் விளைவுகளின் தாக்கத்தை உணராது மற்றவரின் இருதயத்தோடு விளையாடுவார்கள். இதனால் பலரின் வாழ்க்கை சீரழிந்து போய்யுள்ளது.

இது 17 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு சம்பவம். நான் வேலை செய்த அலுவலகத்தில் சில மாதங்களாய் எல்லோரும் ஊக்கமாய் வேலை செய்து, ஓரு வேலைத் திட்டத்தை வெற்றிகரமாய் முடித்தோம். அதை கொண்டாடும் முகமாக அலுவலகத்தை அலங்கரித்தார்கள். ஓவ்வொருவருடைய மேசையும் அலங்கரிக்கப் பட்டது. அதில் வாயு நிரப்பிய பலூன்களை இணைத்திருந்தார்கள். இடம் அழகாயிருந்தது. நாட்கள் செல்லச் செல்ல பலூன்கள் சுருங்கிப் போக ஆரம்பித்தன. அவை இப்போது அலங்காரம் இழந்து காணப்பட்டன. அதனால் அந்த பலூன்களை குப்பையிலே போட்டார்கள். ஆனால் ஓருவர் மாத்திரம் தனது மேசையிலே அதைத் தொடர்ந்து வைத்திருந்தார். நாளுக்கு நாள் அந்த பலூன் மென்மேலும் சுருங்கிக்கொண்டே சென்றது. ஆனால் அவரோ தனது மேசையை விட்டு அதை அகற்றவில்லை. சில மாதங்களுக்கு பின்பு, ஓர் நாள் நான் அந்த பலூனை என் கையிலேடுத்தபடி அவரிடம் ஏன் இதை இன்னமும் உமது மேசையில் வைத்திருக்கின்றீர் என்று கேட்டேன். அவரோ மிகவும் பதைத்தபடி, அது தனது இருதயத்தை பிரதி பலிப்பதாயும், அதை எறிந்துவிட வேண்டாம், அது தனக்கு வேண்டுமென்றும் சொன்னார். அவரிடம் ஏன் உம் இருதயம் அப்படியாயிற்று? யாரிடத்தில் அதை கொடுத்தீர் என்று கேட்டேன்.

“எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதனிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.” என்று நீதிமொழி 4:23 இல் கூறப்பட்டுள்ளது. இருதயத்தைக் குறித்து பரிசுத்த வேதாகமம் பல உண்மைகளை எடுத்துக் கூறியுள்ளது. அதில் எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்? (ஏரேமியா 17:9) என்று எழுதப்பட்டுள்ளது. இயேசுக்கிறிஸ்துவும் “வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும், அவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும். எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபச்சாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும். இவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.”  (மத்தேயு 15:18-20) என்று கூறியுள்ளார். தேவன் “கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும் செய்கைகளின் பலன்களுக்கும் தக்கதைக் கொடுக்கும்படிக்கு, இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவரு மாயிருக்கிறேன்.” (ஏரேமியா 17:10) என்று கூறியுள்ளார். சில மனிதர்கள் எப்பவுமே பொல்லாதவைகளையே சிந்திக்கின்றார்கள். அதை அவர்களும் அறிந்திருக்கின்றார்கள், ஆயினும் விடுதலையில்லாது வாழ்கின்றார்கள். இதனால் மனிதர்களிடையே நம்பகத்தன்மை அற்றுப்போகின்றது. பொல்லாத சிந்தனை, குடும்ப வாழ்விலும்  நம்பிக்கையின்மை, சந்தேகம், அன்பின்மை போன்றவற்றை கணவன் மனைவிக்கிடையே  தோற்றுவிக்கின்றது. பெற்றோர் பிள்ளைகள் இடத்திலும் இவை காணப்படுகின்றன. இவற்றின் விளைவுகள் மிகவும் வேதனையையும் அழிவுகளையும் உண்டுபண்ணுகின்றன.

மனிதர்கள் தங்கள் வாழ்கையில் வேஷம் போடுவதுண்டு. அவர்கள் பிறர் முன்பாக நடிப்பதுமுண்டு. ஆனால் “தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை. சகலமும் அவருடைய கண்களுக்குமுன்பாக நிர்வாணமும் வெளியரங்கமுமாயிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.” (எபிரேயர் 4:12-13) தேவனுக்கு மறைவானவை ஓன்றுமில்லை. அவர் எல்லாவற்றையும் அறிகிறவராயுமுள்ளார்.

இருதயமானது வாழ்க்கைப் பாரத்தினால் அமிழ்ந்து வேதனைப் படுவதுமுண்டு. தேவனோ “இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறார்” அவர் இரங்குகின்றவரும் ஆறுதல் அளிக்கின்றவருமாக உள்ளார். அவர் காயங்கட்டுகின்றவரும் குணப் படுத்துகின்றவருமானவர். அவர் “என் மகனே, உன் இருதயத்தை எனக்குத்தா: உன் கண்கள் என் வழிகளை நோக்குவதாக.” என்று ஒவ்வொருவரையும் அழைக்கின்றார். “என் மகனே, உன் இருதயம் ஞானமுள்ளதாயிருந்தால், என்னிலே என் இருதயம் மகிழும். உன் உதடுகள் செம்மையானவைகளைப் பேசினால், என் உள்ளிந்திரியங்கள் மகிழும். உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமை கொள்ளவிடாதே: நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு. நிச்சயமாகவே முடிவு உண்டு: உன் நம்பிக்கை வீண்போகாது. என் மகனே, நீ செவிகொடுத்து ஞானமடைந்து, உன் இருதயத்தை நல்வழியிலே நடத்து. மதுபானப்பிரியனையும் மாம்சப்பெருந்தீனிக்காரரையும் சேராதே. குடியனும் போஜனப்பிரியனும் தரித்திரராவார்கள்: தூக்கம் கந்தைகளை உடுத்துவிக்கும். உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயது சென்றவளாகும்போது அவளை அசட்டை பண்ணாதே. சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே, அப்படியே ஞானத்தையும் உபதேசத்தையும் புத்தியையும் வாங்கு.  நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்: ஞானமுள்ள பிள்ளையைபப் பெற்றவன் அவனால் மகிழ்வான். உன் தகப்பனும் உன் தாயும் சந்தோஷப்படுவார்கள்: உன்னைப்பெற்றவள் மகிழ்வாள்.  என் மகனே, உன் இருதயத்தை எனக்குத்தா: உன் கண்கள் என் வழிகளை நோக்குவதாக.” என்று தேவன் சொல்லுகின்றார். இன்று இருதயம் குணமடைய வேண்டுமானால், உன் இருதயத்தை அவரிடம் கொடுத்து, இயேசுவே எனக்கு இரங்கும் என்று கேட்பாயாக.