புதுத் தீர்மானம்

Posted on March 19, 2016 01:59:52

புது வருடம் பிறந்துள்ளது. கடந்த வருடம் வேகமாய் கடந்து போனது போல் ஓரு உணர்வு. அது எமது வாழ் நாட்கள் வேகமாக செலவழிந்து போகின்றதை விளக்குகின்றது. பொதுவாக மனிதர்களுக்கு ஏதாகிலும் ஓன்றில் தாம் சிறந்து விளங்கவேண்டும் அல்லது ஓரு சாதனையை செய்ய வேண்டும் என்று விரும்புகின்றார்கள். இதனால் புது வருடத்திலே மனிதர்கள் புது தீர்மானங்களை எடுத்துக் கொள்ளுகின்றார்கள்.

பரிசுத்த வேதாகமத்திலே புது தீர்மானத்தை தங்கள் வாழ்க்கையில் செய்தவர்கள் சிலரை பார்ப்போம்.

லூக்கா 18:35-43

“இயேசு எரிகோவுக்குச் சமீபமாய் வரும்போது, ஒரு குருடன் வழியருகே உட்கார்ந்து பிச்சைகேட்டுக் கொண்டிருந்தான். ஜனங்கள் நடக்கிற சத்தத்தை அவன் கேட்டு, இதென்ன என்று விசாரித்தான். இயேசு போகிறார் என்று அவனுக்கு அறிவித்தார்கள்.

அப்பொழுது அவன்: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிட்டான். முன் நடப்பவர்கள், அவன் பேசாமலிருக்கும்படி அவனை அதட்டினார்கள்.

அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று மிகவும் அதிகமாய்க் கூப்பிட்டான்.

இயேசு நின்று, அவனைத் தம்மிடத்தில் கொண்டுவரும்படி சொன்னார். அவன் கிட்டவந்தபோது, அவர் அவனை நோக்கி: நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்று கேட்டார்.”

அதற்கு அவன்: ஆண்டவரே, நான் பார்வையடைய வேண்டும் என்றான்.

இயேசு அவனை நோக்கி: நீ பார்வையடைவாயாக, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். உடனே அவன் பார்வையடைந்து, தேவனை மகிமைப்படுத்திக் கொண்டே, அவருக்குப் பின்சென்றான், ஜனங்களெல்லாரும் அதைக் கண்டு, தேவனைப் புகழ்ந்தார்கள்.

இம் மனிதன் தன் வாழ்வின் குறை நீங்க வேண்டும் என்று விரும்பினான். ஆண்டவராகிய இயேசுவிடத்தில் அதை பெற்றுக்கொள்ளத் தீர்மானித்தான். அவரைக் கூப்பிட்டான். அங்கிருந்தவர்கள் அவனைத் தடை பண்ணினார்கள் ஆனால் அவனோ, மிகவும் அதிகமாய் கூப்பிட்டான். நன்மையை பெற்றுக் கொண்டான்.

மாற்கு 5:22-29

“அப்பொழுது, ஜெபஆலயத்தலைவரில் ஒருவனாகிய யவீரு என்பவன் வந்து, அவரைக் (இயேசுவைக்) கண்டவுடனே, அவர் பாதத்திலே விழுந்து. என் குமாரத்தி மரண அவஸ்தைப்படுகிறாள், அவள் ஆரோக்கியம் அடையும்படிக்கு நீர் வந்து, அவள்மேல் உமது கைகளைவையும், அப்பொழுது பிழைப்பாள் என்று அவரை மிகவும் வேண்டிக்கொண்டான். அவர் அவனோடேகூடப்போனார். திரளான ஜனங்கள் அவருக்குப் பின் சென்று, அவரை நெருக்கினார்கள்.

அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ, அநேக வைத்தியர்களால் மிகவும் வருத்தப்பட்டு, தனக்கு உண்டானவை களையெல்லாம் செலவழித்தும், சற்றாகிலும் குணமடையாமல் அதிக வருத்தப்படுகிறபொழுது, இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டு, நான் அவருடைய வஸ்திரங்களையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று சொல்லி.

ஜனக்கூட்டத்துக்குள்ளே அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள். உடனே அவளுடைய உதிரத்தின் ஊறல் நின்று போயிற்று, அந்த வேதனை நீங்கி ஆரோக்கியமடைந்ததை அவள் தன் சரீரத்தில் உணர்ந்தாள்”;.

திரளான ஜனங்கள் நெருக்கினார்கள். ஆனாலும் தனது பெலவீனத்தை பொருட்படுத்தாது ஆண்டவராகிய இயேசுவின் பின்னால் வந்து, அவர் வஸ்திரத்தை தொட்டு விடுதலையானாள்.

பிரியமான சகோதரனே, சகோதரியே!

உனது புதிய தீர்மானம் என்ன? மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நட்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் (இவ்வுலக தேவைகள்) உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும், என்று ஆண்டவராகிய இயேசு கூறியுள்ளார்.

இன்று உனது வாழ்க்கை மாறவேண்டும், வேண்டாத பாவ பழக்க ங்களிலிருந்து விடுதலை வேண்டும், தேவனுடைய இராச்சியத்தை தேட வேண்டும் என்று விரும்பினால், பாவங்களை மன்னிக்கும் இயேசுவே என் வாழ்வில் வாரும். என் பாவங்களை மன்னித்து எனக்கு பாவ பழக்கங்களிலிருந்து விடுதலை தாரும் என்று கூறுவாயாக.