Posted on March 21, 2016 02:12:55
Man who lost his way - Christian Article in Tamil - Toronto, Ontario, Canada
பொதுவாக எவரும் தமது வாழ்வில் பாதை தவறுவதை விரும்புவதில்லை. பாதை தவறுவதற்கு பல காரணங்கள் உண்டு. அதற்கு அடிப்படை என்னவென்றால் ஒருவர் எவற்றை தனது வாழ்வில் முன்னுரிமைப் படுத்துகின்றார் என்பதே. இதை அவர் தனது சொந்த விருப்பு என்று கூறலாம், ஆயினும் அதன் முடிவானது அவர் தெரிந்து கொண்ட வழியை விபரிக்கும்.
பரிசுத்த வேதாகமத்திலே, ஒருநாள் வாழ்வை இன்பமென்றெண்ணி, கறைகளும் இலச்சைகளுமாயிருந்து வாழ்பவர்களைக் குறித்து கூறப்ப ட்டுள்ளது. வயிற்றுக்குப் போஜனமும் போஜனத்திற்கு வயிறும் ஏற்கும். ஆனாலும் தேவன் இதையும் அதையும் அழியப்பண்ணுவார். ஓருவன் தான் சென்றடைய வேண்டிய இடத்தைவிட்டு விலகிச்செல்வானானால், அவன் பாதை தவறிய மனிதனாகின்றான்.
பாதை தவறிய மனிதன் தொலைந்து போகின்ற வழியில் செல்கின்றான். தனது வாழ்வில் நிம்மதியை இழந்து போகின்றான். அவனைச் சார்ந்து இருப்போருக்கும் அவனை நேசிப்போருக்கும் அவன் மனமடிவாகவும் வேதனை உண்டுபண்ணுபவனாகவும் இருக்கின்றான்.
இயேசு கிறிஸ்து சொன்னார்;
லூக்கா 15:4-7
உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டு பிடிக்கும ளவும் தேடித்திரியானோ?
கண்டுபிடித்தபின்பு, அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின் மேல் போட்டுக்கொண்டு, வீட்டுக்கு வந்து, சிநேகிதரையும் அயலகத்தா ரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித் தேன் என்னோடுகூடச் சந்தோஷப்படுங்கள் என்பான் அல்லவா?
அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயி ருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
காணாமற் போன ஆட்டைப்போல பாதை தவறியவர்களை அன்போடு தேடி, விடுதலையாக்கி, அவர்களை பாதுகாப்பான ஆசீர்வாதமான இடத்துக்கு கொண்டு வரும்படி இயேசு கிறிஸ்து இருக்கிறார். அவர் அதற்காகவே இவ்வுலகிற்கு வந்தார்.
ஓருவன் தன் ஆத்துமாவைக் குறித்து அக்கறையற்றவனாய் இருப்பானானால் அவன் ஆத்துமா இருளடைந்து நித்திய மரணத்தை நோக்கி செல்லுகிறதாயுள்ளது. அத்தகைய மனிதன் தொலைந்த ஆட்டைப்போல பாதை தவறிச் செல்பவனாக இருக்கின்றான். ஒருநாள் வாழ்வை இன்பமென்றெண்ணி வாழ்ந்து தகாத காரியங்களினால் தன்னை அசுத்தப்படுத்திக் கொள்கின்றான்.
பாவம் வஞ்சனையுள்ளது. வெளித் தோற்றத்திலே அது கவர்ச்சியாயுள்ளது. ஆனால் அதன் முடிவோ கசப்பானது. தேவன் பரிசுத்தர். பாவ செயல்கள் மனிதனை தேவனிடத்தில் இருந்து பிரிக்கின்றது. ஆம், பாவ த்தின் சம்பளம் மரணம். அந்த மரணம் நித்தியமானது. தேவனுடைய கிருபை வரமோ நித்தியஜீவன்.
பிரியமான சகோதரனே, சகோதரியே!
நீ போகின்ற உனது வழியை நீ அறிந்துள்ளாய். அதை நீ இதுவரை அறியாதிருந்தால் சற்று தரித்திருந்து அதை அறிந்துகொள். இவ்வுலகில் எமக்கு கொடுக்கப்பட்டுள்ள வாழ்நாட்கள் மிகவும் ஆசீர்வாதமான பொக்கிஷம். அதை பயனுள்ளதாய் காத்து வாழ்வதே புத்தியுள்ள வழியாகும். ஓருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டிருந்தாலும் அவன் நித்திய நரகத்தை நோக்கி செல்பவனாக இருப்பானென்றால் அதினால் என்ன பயன்?
இன்று உனது தேவை என்ன. இன்று உனது வாழ்க்கை மாறவேண்டும், வேண்டாத பாவ பழக்கங்களிலிருந்து விடுதலை வேண்டும், உனது வாழ்க்கை சரியான பாதையில் செல்லவேண்டும் என்று விரும்பினால் பாவங்களை மன்னிக்கும் இயேசுவே என் வாழ்வில் வாரும். என் பாவங்களை மன்னித்து என்னை உமது பாதையில் நடத்தும்; என்று கூறுவாயாக.
இயேசு சொன்னார்: “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.”