நல்லதும் கெட்டதும் வகுப்பதும் யார்?

Posted on March 06, 2016 02:29:37

“பணம் பாதாளம் மட்டும் பாயும்” இது மூத்தோர் வாக்கு. பணமானது மனித வாழ்வில் தேவையானதொன்றே. ஆயினும் அது மனித வாழ்க்கையில் ஆளுகை செய்யும் நிலை தோன்றும் போது மனித வாழ்வு மெய் நிலையிழந்து போகின்றது. மெய் நிலை இழத்தல் என்பது பொய் நிலை அணிதலின் ஆரம்பம். தேவை, ஆசை, விருப்பம் என்பன மனித வாழ்வில் இலக்கை நாடித்தேட ஓர் உந்துவிசையாயுள்ளது. வாழ்வில் தேவையை உணராதவன் தான் செய்ய வேண்டிய கடமையை  அறியாத வனாயிருக்கின்றான். இறுதியில் அவன் தன் வாழ்வில் பொறுப்பற்றவனாகி விடுகின்றான். ஆசை, விருப்பம் என்பன இலக்கை நோக்கி முன்னேற உந்துகின்ற உணர்வாயுள்ளது. நீரானது பூமியின் சிறப்பியல்புகளில் இன்றியமையாததொன்று. உயிர் வாழ்வுக்கு மாத்திரமல்லாது புவியின் வெப்பநிலையைப் பேணுவதற்தும் நீர் அவசியமானது. நிலமானது பனி, மழை, ஆறுகளினால் நீரை பெற்று வளமடைகின்றது. இவற்றில் ஏதாகிலும் ஓன்று அளவுக்கு அதிகமாகும் போது அதன் விளைவுகள் விரும்பத்தக்கவையல்ல. காட்டாறு வெள்ளத்திற்கு அணைகட்டப் பட்டால் அது அதிக நன்மைகளை தருவது நிச்சயம். அதற்கொப்ப மனித வாழ்வில் தேவை, ஆசை, விருப்பம் என்பவை எல்லையுடையதாயிருக்க வேண்டும் என்பதும் மூத்தோர் வாக்கு. இதை “அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு” என்று அழகாயுரைத்தனர். இவை எல்லை கடக்கும் போது மனித வாழ்க்கையில் பணம் ஆளுகை செய்யும் நிலை தோன்றுகின்றது. அது உண்டுபண்ணும் தாக்கத்தின் அளவை “பணம் பாதாளம் மட்டும் பாயும்” என்று விளக்கியுள்ளார்கள். இதை இவ்வுலக வாழ்க்கையில் காண்கின்றோம்.  பணத்திற்கு பாதாளம் மட்டும் பாயும் பெலனுண்டு. இதற்கு மோட்சத்தில் அதிகாரம் உண்டோ?

இயேசு சொன்னார் (லூக்கா 12):

ஐசுவரியமுள்ள ஒருவனுடைய  நிலம் நன்றாய்  விளைந்தது. அப்பொ ழுது அவன்: நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் சேர்த்து  வைக்கிறதற்கு இடமில்லையே, நான்  ஒன்று  செய்வேன், என் களஞ்சியங்களை   இடித்து, பெரிதாகக் கட்டி, எனக்கு விளைந்த தானியத்தையும் என் பொருள்களையும் அங்கே சேர்த்து வைத்து, பின்பு:  ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது, நீ   இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான். தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்த வைகள் யாருடையதாகும் என்றார். தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கிறவன் இப்படியே இருக்கிறான்  என்றார்”. 

 

 தேவனிருக்கும் இடமே மோட்சம். இதை பரலோகமென்றும் சொல்வார்கள். தேவனிடத்தில் ஐசுவரியவானாயிருக்க வேண்டிய அவசியத்தைக் குறித்து இயேசு சொன்னார். அந்த ஐசுவரியம் என்ன? எப்படி பெற முடியும்? யார் அதை பெற முடியும்? அதை பெற்றுக்கொள்ளும் விருப்பம் எனக்கு இருக்கின்றதா?

 

இயேசு சொன்னார் “ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவதண்ணீருள்ள நதிகள் ஓடும்”

ஓருவன் தாகமாயிருந்தால், அதை பெற விரும்பினால் அவனை அழைக்கின்றார். அந்த அழைப்பை ஏற்பதே அவனுக்கு வேண்டிய தகுதியாயுள்ளது. பாதாள வழியானது பாவம்;, அசுத்தம், அக்கிரமம் நிறைந்த வழி. மெய்யான வழியோ நீதி, நியாயம், இரக்கம், அமைதி, சந்தோஷம் நிறைந்த வழி.

 “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன், என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது” என்று இயேசு அன்போடும் பரிவோடும் துன்பப்படுவோரையும் வருத்தபடுவோரையும் அழைக்கின்றார். அவரிடத்தில் கேட்பவர்களுக்கு ஆறுதலையும் விடுத லையும் கொடுத்தார். இரக்கங்களின் தேவன் சகலவிதமான ஆறுத ல்களின் தேவனுமாயிருக்கின்றார். உங்கள் வாழ்விலும் நன்மைகளை அருள்வாராக. இப்போதும் அதை பெற்றுக்கொள்ள விரும்பினால் ‘இயேசுவே எனக்கு இரங்கும். உமது உதவி எனக்கு வேண்டும்’ என்று சொல்லுங்கள். அவர் ஜெபத்தை கேட்கின்றவர் அவர், ஜெபத்திற்கு பதில் தருபவர்.