நல்ல பங்கு

Posted on March 17, 2016 16:03:14

நல்ல பங்கு எல்லா மனிதர்களும் விரும்பும் ஓன்று. கடைகளில் பொருட்களை வாங்கும் போது நலமானவற்றை தெரிந்து எடுக்கின்றோம். ஓரு வேளை தரமான பொருளை எடுக்கத் தவறினோம் என்று அறியும் போது கவலை கொள்கின்றோம். எனது பணம், எனது பிரயாசம் வீணாயிற்று என்று வருந்துகின்றோம். பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு பாடசாலையைத் தெரிவதிலும் நல்ல பாடசாலை எது என்று ஆராய்கின்றார்கள். யார் வகுப்பாசிரியர் என்பதிலும் கரிசனை செலுத்துகின்றார்கள். காரணம் நல்லபங்கு வேண்டும் என்பதே. பிள்ளைகளும், பெற்றோர்கள் தமது சொத்துக்களை பகிர்ந்து கொடுக்கும் வேளைகளில், அந்த சொத்துக்களில் உச்சிதமானவற்றிலும் தமக்கு பங்கு வேண்டும் என்று கேட்ப்பார்கள். நல்ல பங்கை எல்லோரும் அடைய விரும்புகின்றார்கள்.

பரிசுத்த வேதாகமத்திலே “தன் தாயின் கர்ப்பத்திலிருந்து நிர்வாணியாய் வந்தான், வந்ததுபோலவே நிர்வாணியாய்த் திரும்பப் போவான், அவன் தன் பிரயாசத்தினால் உண்டான பலனொன்றையும் தன் கையிலே எடுத்துக் கொண்டுபோவதில்லை. அவன் வந்தபிரகாரமே போகிறான், இதுவும் கொடுமையான தீங்கு, அவன் காற்றுக்குப் பிரயாசப்பட்டதினால் அவனுக்கு லாபம் என்ன?” (பிரசங்கி 5:15-16) என்று கூறப்பட்டுள்ளது. அப்படியானால், மனிதனின் பிரயாசம் பலனற்றதோ? ஓருவரின் பிரயாசத்தின் பலன் அவர் எதற்காக பிரயாசப்படுகின்றார், எப்படி பிரயாசப்படுகின்றார் என்பதில் தங்கியுள்ளது.

இந்த உலகத்திலிருந்து நாம் எதையும் எம்முடன் எடுத்துக் கொண்டுபோவதில்லை. மாறாக எமது சந்ததிக்கோ அல்லது வேறோருவருக்கு அவற்றை விட்டுச் செல்லுகின்றோம். அந்த பிரயாசத்தின் பலனானது இவ்வுலக வாழ்வுக்கு என்றே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பலர் இதற்கென்று மிகவும் பிரயாசப்படுகின்றார்கள். தீய வழிகளிலாகிலும் பணம் சம்பாதிப்போம் என்று வாழ்பவர்களும் இருக்கின்றர்கள். இன்னும் சிலர் சோம்பலினால் அல்லது நிர்விசாரத்தினால் எதுவுமே செய்யாதிருக்கின்றார்கள்.

ஓரு முறை இயேசுகிறிஸ்து ஒரு கிராமத்தில் பிரவேசித்தார். அங்கே மார்த்தாள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீ அவரைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டாள். அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள், அந்த மரியாள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள். மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, இயேசுவிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டுவந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் கவையில்லையா? எனக்கு உதவி செய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள்.

இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.

இயேசு, வீட்டு வேலைகள் செய்வது அவசியமற்றது என்று கூறவில்லை. மாறாக அந்த மார்த்தாள் என்ற பெண் எதைக் குறித்து அதிக கவலை கொண்டுள்ளாள் என்பதையும், பரலோக இராச்சியத்துக்கு என்று ஓருவர் படும் பிரயாசமானது ஓருபோதும் அவரை விட்டு எடுபடாத நல்ல பங்கு என்று விளக்கிக் கூறினார். மேலும் இவ்வுலக செல்வத்தைக்குறித்து “இவைகளையெல்லாம்  அஞ்ஞானிகள் (தேவனை அறியாதவர்கள்) நாடித்தேடுகிறார்கள், இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா (தேவன்) அறிந்திருக்கிறார். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.” என்று இயேசு கூறியுள்ளார்.

பிரியமான சகோதரனே, சகோதரியே!

வாழ்க்கையில் மிகவும் பிரயாசப்பட்டு இறுதியில், இவ்வுலக வாழ்க்கை முடித்து தேவனை சந்திக்கும் நாளிலே, உங்களிடத்தில் நல்ல பங்கு காணப்படாது இருக்குமானால் உங்கள் பிரயாசத்தால் உங்களுக்கு என்ன பலன்?

இன்று உனது வாழ்க்கை மாறவேண்டும், வேண்டாத பாவ பழக்கங்களிலிருந்து விடுதலை வேண்டும், நல்ல பங்கை உனது வாழ்வில் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினால், பாவியை நீதிமானாக்கின்ற இயேசுவே என் வாழ்வில் வாரும். என் பாவங்களை மன்னித்து எனக்கு பாவ பழக்கங்களிலிருந்து விடுதலை தாரும் என்று கூறுவாயாக.