Posted on March 17, 2016 14:58:49
மெய்யான நீதி, மெய்யான பரிசுத்தம் என்னும் வார்த்தைகள் பொய்யான நீதியும், பொய்யான பரிசுத்தமும் உண்டு என்பதை கூறுகின்றது.
பொய்யான நீதி என்பது அலங்கரிக்கப்பட்ட அநீதியாகும்.
பொய்யான பரிசுத்தம் என்பது அலங்கரிக்கப்பட்ட அசுத்தமுமாகும்.
இவற்றை மாயக்காரரின் வாழ்வில் காணமுடியும். சட்டத்தின் முன் யாவரும் சமம் என்பதை அறிந்திருக்கின்றோம், ஆயினும் அச்சட்டங்களை நடைமுறைப் படுத்துபவர்களிடத்தில் பாரபட்சம் காணப்படினின், சட்டத்தின் முன் யாவரும் சமம் என்பது எழுத்தளவிலே நின்றுவிடும். ‘கொள்கையளவில் ஏற்றுள்ளோம் நடைமுறைப்படுத்தும் சாத்தியம் இல்லை’ என்னும் பேச்சுக்குள் இவை அடங்கிவிடும்.
மெய்யான நீதியும் மெய்யான பரிசுத்தமும் மனிதனுக்கு தேவைதானா?
இவை ஓருவரிடத்தில் உண்டு அல்லது இல்லை என்று மற்றவரால் கூறமுடியுமா?
ஆண்டவராகிய இயேசு “நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு, பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்.” என்று ஜனங்களுக்கு பிரசங்கித்ததை மத்தேயு 7:3-5 வாசிக்கின்றோம். எனவே மற்றவர்களைக் குறித்து பேச முன் ஓவ்வொருவரும் தன் தன் வாழ்க்கையை ஆராய்வதே சிறந்தது.
மேலும் பரிசுத்த வேதாகமத்தில் ‘தாங்கள் அழுக்கற கழுவப்படாமலிருந்தும், தங்கள் பார்வைக்குச் சுத்தமாகத் தோன்றுகிற சந்ததி யாருமுண்டு.’ என்று நீதி 30:12இல் எழுதியுள்ளதை காண்கி றோம். இவர்கள் பொய்யான நீதியிலும் பொய்யான பரிசுத்தத்திலும் வாழ்பவர்கள்.
இயேசு சொன்னார் “இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனை தரிசிப்பார்கள்.” மெய்யான நீதியும் மெய்யான பரிசுத்தமும் மனிதனுக்கு அவசியமானவையே. இவைகளை தனது வாழ்வில் கொண்டிராதவன் தேவனுக்கு தூரமாயுள்ளான். அவன் பாவியாகவே வாழ்கின்றான். ஓருவன் மெய்யான நீதியையும் மெய்யான பரிசுத்தத்தையும் தன் வாழ்வில் விரும்புவானேயாகில், தேவன் அதை அவனுக்கு கொடுப்பவராயுள்ளார். மேலும் “முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.” என்று பரிசுத்த வேதாகமத்தில் எழுதியுள்ளது.
ஆகூர் என்னும் மனிதன் தேவனிடத்தில் செய்த ஜெபத்தை பரிசுத்த வேதாகமத்தில் காண்கிறோம்.
அவன் “இரண்டு மனு உம்மிடத்தில் கேட்கிறேன்: நான் மரிக்கும் பரியந்தமும் அவைகளை எனக்கு மறுக்காமல் தாரும். மாயையையும் பொய்வசனிப்பையும் எனக்குத் தூரப்படுத்தும்: தரித்திரத்தையும் ஐசுவரியத்தையும் எனக்குக் கொடாதிருப்பீராக. நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, கர்த்தர் யார் என்று சொல்லாத படிக்கும்: தரித்திரப் படுகிறதினால் திருடி, என் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காத படிக்கும், என் படியை எனக்கு அளந்து என்னைப் போஷித்தருளும்.” என்று ஜெபித்தான்.
உலகத்தின் வேஷம் கடந்து போகின்றது. வாழ் நாட்கள் விருதாவாய் போகின்றது. விரும்பப்படாத நாட்கள் என்னை நோக்கி வருகின்றது. எனது வாழ்வும் அதை நோக்கியே போகின்றது என்று உணருவாயாகில் காலத்தை பிரயோசனப் படுத்திக்கொள்.
இன்று உனது வாழ்க்கை மாறவேண்டும், வேண்டாத பாவ பழக்கங்களிலிருந்து விடுதலை வேண்டும், மெய்யான நீதியும் மெய்யான பரிசுத்தமும் உனது வாழ்வில் வேண்டும் என்று விரும்பினால், பாவியை நீதிமானாக்கின்ற இயேசுவே என் வாழ்வில் வாரும். என் பாவங்களை மன்னித்து எனக்கு பாவ பழக்கங்களிலிருந்து விடுதலை தாரும் என்று கூறுவாயாக.