காற்றுள்ள போதே..

Posted on March 31, 2016 02:15:23

TAMIL CHRISTIAN ARTICLE, GRACE TABERNACLE CHURCH, TORONTO ONTARIO 

காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது பழமொழி. இதற்கொத்த பழமொழிகள் வேறு பாஷைகளிலும் உள்ளன. நல்ல சந்தர்ப்பங்களை நழுவவிடாது பயன்படுத்துவதின் அவசியத்தை மனிதர்கள் அறிந்துள்ளமையால் இத்தகைய பழமொழிகளை உண்டுபண்ணியுள்ளனர். ஓருவர் கூறிய ஒரு உண்மை சம்பவத்தை இங்கு குறிப்பிடுவது ஏற்றதாயிருக்கும்.

அவர் வேலை செய்த கம்பனியில் அவருக்கொரு நண்பன் இருந்தார். ஓரு நாள் இவர் தனது நண்பனுடன் அலுவலக வேலைகளைக் குறித்து பேசியபோது, ஓர் குறிப்பிட்ட வேலை மிகவும் கடினமானது என்று கூறினார். நண்பனோ அவரிடம், அது மிகவும் இலகுவான வேலை. அதன் செயல்முறையின் அடிப்படைகளை விளங்கிக்கொண்டால் அது மிகவும் இலகுவானதும் ஆர்வமாக செய்யக்கூடியதுமான வேலை. அது எனக்கு நன்றாகத் தெரியும். வேண்டுமானால் அதை நான் உமக்கு சொல்லித்தருகிறேன் என்றார். ஆனால் அவரோ நண்பனின் நல்ல உதவியை ஏற்க மனதில்லாமல் வீண்பெருமையுடன் அதை வேண்டாம் என்று தள்ளிவிட்டார்.

சில மாதங்கள் கடந்தன. அவருக்கு இம்முறை அந்த வேலையை செய்யும்படியும் அதை செய்து முடிப்பதற்கு காலவரையறையும் கொடுக்கப்பட்டது. அவருக்கோ அதை செய்யத் தெரியாது. அவருடைய அதிகாரி அவ்வேலையை அவரிடத்திலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளும் படியான பல முயற்ச்சிகளை அவர் எடுத்தார். ஆயினும் அவை பயன் தரவில்லை. நோயுற்றிருப்பதாக விடுமுறையும் எடுத்தார். அதுவும் பலனளிக்கவில்லை. அவர் தனது வேலையை முடித்து கொடுக்க வேண்டிய நாட்களோ சமீபித்துக் கொண்டே வந்தது. இப்போது அலுவலகத்தில் அவர் வெட்கப்படத் தொடங்கினார். அவரது வீண் பெருமைக்கு விலை கொடுக்கும் நேரமாயிருந்தது. இறுதியில், அலுவலகத்தில் மற்ற பிரிவிலே வேலை செய்யும் தன் நண்பனைத் தொடர்பு கொண்டு தனது தவறையும் அதனால் உண்டான அவமானங்களையும் கூறி உதவி கேட்டார். நண்பனும் வார விடுமுறைதினத்தில் கம்பனிக்கு சென்று அவ்வேலையை மிகவும் இலகுவாக செய்து கொடுத்தார். ஆனால் அவரோ அதைக் கற்றுக் கொள்ளவேயில்லை.

காலம் திரும்பி வருமோ? தவறவிடும் நல்ல சந்தர்ப்பங்களும் மீண்டும் வருமோ?

எருசலேமைக் குறித்து, ‘உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமா யிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது. உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு, உன்னை வளைந்து கொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி, உன்னையும் உன்னி லுள்ள உன் பிள்ளைகளையும் தihயாக்கிப்போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்குச் செய்யும் நாட்கள் உனக்கு வரும் என்றார்.’

அது அவர்கள் வாழ்வில் நடந்தேறியது.

தேவன் அன்புள்ளவர், அவர் பரிசுத்தர். அவர் நீதியாய் நியாயம் தீர்ப்பவர். தேவன் மனந் திரும்புகின்றவர்களிடத்தில் தயவைக்காட்டுகின்றார். மனம் திரும்பாமல் வாழ்பவர்களையோ அவர் நியாயத் தீர்ப்புக்கென்று நியமிக்கிறார். இன்றே இரட்சணிய நாள். இன்றே அநுகிரகத்தின் நாள். இன்றே விடுவித்து, இன்றே பாவங்களை மன்னித்து, இன்றே அநுக்கிரகம் செய்ய தேவன் ஆயத்தமாயுள்ளார்.

மனிதனுக்கு செவ்வையாகத் தோன்றும் வழிகள் உண்டு. அதன் முடிவோ மரணம். தேவனிடத்தில் ஒருவன் தன் வாழ்வை ஒப்படைக்கும் போது, அவனை அவர் கரம் பிடித்து நடத்துவார். மலைகள் விலகி னாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, வாக்கு பண்ணின தேவன் உன்மேல் மனதுருக்கம் உள்ளவராய் இருக்கின்றார்.

மேலும் அவர் உன் பிள்ளைகளெல்லோரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள், உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும் என்றும் வாக்கு பண்ணியுள்ளார்.
 
பிரியமான சகோதரனே, சகோதரியே! இந்த வாக்குத்தத்தங்களை சுதந்தரிக்க எம்மெல்லோரிலும் ஓரு தகுதி இருக்க வேண்டும். அத்தகுதி எம்மால் அல்ல, எமது தேவனாலே எமக்கு உண்டாகின்றது. இது தேவ கிருபை.

இன்று உனது வாழ்க்கை மாறவேண்டும், வேண்டாத பாவ பழக்கங்களிலிருந்து விடுதலை வேண்டும், தேவனுடைய கிருபையை பெற வேண்டும் என்று விரும்பினால், பாவங்களை மன்னிக்கும் இயேசுவே என் வாழ்வில் வாரும். என் பாவங்களை மன்னித்து எனக்கு பாவ பழக்கங்களிலிருந்து விடுதலை தாரும் என்று கூறுவாயாக.

கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின.

 “என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”