எப்போது?

Posted on March 11, 2016 02:52:47

ஓய்ந்திருக்கும் வேளைகளில் நினைவுகள் அவ்வப்போ ஒன்றோடொன்று இதமாய் மோதிக்கொள்வதுண்டு. பௌர்ணமி இரவில் முழு நிலவு வெளிச்சத்தில் முற்றத்திலிருந்து பேசிய நாட்களை நினைப்பதற்கு நன்றாயிருக்கும். இனி எப்போது அப்படி ஓரு நாள் வரும்? தென்றல் மென்மையாய் வீசுவதும் பூக்களின் வாசம் அதில் கலந்து வருவதும் பகலின் உஷ்ணத்துக்கு நட்ட ஈடு செய்வது போலிருந்ததை இப்போதும் நினைக்கலாம். பாய்ந்து ஓடி விளையாடிய நாட்களின் நினைவுகள் தானாகவே எம்மை சிரிக்க வைக்கும். இன்று கூட பாய்ந்து ஓட மனம் ஆயத்தமாயிருக்கலாம். ஆனால், அப்படி ஒரு நாள் வருமா? அது எப்போது வரும்? 

குழந்தை பருவ நினைவுகள், மற்றவர்கள் சொல்லக்கேட்ட குழந்தை பருவ சம்பவங்கள் மனிதர்கள்  கவலைகளை மறந்து பேசக்கூடியவை. அவை நினைவிற்கும் இன்பமானவை. பாடசாலை வாழ்க்கையும் பலதரப்பட்ட நினைவுகளை பதித்துள்ளது. நண்பர்களுடன் செலவழித்த நேரங்கள் முதற்கொண்டு ஆசிரியர்கள் வரையிலான சம்பவங்கள் பல நினைவலைகளை தோற்றுவிக்கும். பலருடைய வாழ்வில், சந்தோஷமான பாடசாலை நேரங்களை நினைத்தாலும் முடிவில், மனதில் ஒரு பாரம் ஏறிக்கொள்ளும். அது என்னவென்றால், அந்த பாடசாலை நாட்களை எனக்கு அதிக பிரயோசனமுள்ளதாய் பாவியாது போனேன். இன்று கஷ்டப்படுகின்றேன். எனக்கு படிப்பில் வழிகாட்ட ஓருவரும் இருக்கவில்லை. அல்லது எனக்கு போதிய பொருளாதார வசதியிருக்கவில்லை. இன்னும் பல காரணங்களும் காணப்படலாம். ஆயினும் இனி ஒரு சந்தர்ப்பம் வருமோ? ஒரு நாள் வருமா? அது எப்போது வரும்?

காலம் பொன்னானது. காலத்தை உனக்கு ஆதாயப்படுத்திக்கொள். காற்றுள்ள போதே தூற்றிக்கொள். சந்தர்ப்பத்தை நழுவவிடாதே. பழமொழிகள் பலவுண்டு. ஆனால் உன் செயலிலுண்டோ?

பரிசுத்த வேதாகமத்தில் மனிதவாழ்கையில் ஒருவரும் தவறக்கூடாத காரியத்தைக் குறித்து பின்வருமாறு சொல்லப்பட்டுள்ளது.

 “நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை, தீங்குநாட்கள் வராததற்குமுன்னும், எனக்குப் பிரியமானவைகளல்ல என்று நீ சொல்லும் வருஷங்கள் சேராததற்குமுன்னும், சூரியனும், வெளிச்சமும், சந்திரனும், நட்சத்திரங்களும், அந்தகாரப்படாத தற்குமுன்னும், மழைக்குப்பின் மேகங்கள் திரும்பத் திரும்ப வராததற்குமுன்னும், வீட்டுக் காவலாளிகள் தள்ளாடி, பெலசாலிகள் கூனிப்போய், ஏந்திரம் அரைக்கிறவர்கள் கொஞ்சமானதினால் ஓய்ந்து, பலகணிவழியாய்ப் பார்க்கிறவர்கள் இருண்டுபோகிறதற்குமுன்னும், ஏந்திர சத்தம் தாழ்ந்ததினால் தெருவாசலின் கதவுகள் அடைபட்டு, குருவியின் சத்தத்துக்கும் எழுந்திருக்கவேண்டியதாகி, கீதவாத்தியக் கன்னிகைகளெல்லாம் அடங்கிப்போகாததற்குமுன்னும், மேட்டுக்காக அச்சமுண்டாகி, வழியிலே பயங்கள் தோன்றி, வாதுமைமரம் பூப்பூத்து, வெட்டுக்கிளியும் பாரமாகி, பசித்தீபனமும் அற்றுப்போகாததற்கு முன்னும், மனுஷன் தன் நித்திய வீட்டுக்குப் போகிறதினாலே, துக்கங்கொண்டாடுகிறவர்கள் வீதியிலே திரியாததற்குமுன்னும், வெள்ளிக்கயிறு கட்டுவிட்டு, பொற்கிண்ணி நசுங்கி, ஊற்றின் அருகே சால் உடைந்து, துரவண்டையில் உருளை நொறுங்கி, இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவih உன் வாலிபப்பிராயத்திலே நினை.

மாயை மாயை, எல்லாம் மாயை என்று பிரசங்கி சொல்லுகிறான். மேலும், பிரசங்கி ஞானவானாயிருந்தபடியால், அவன் ஜனத்துக்கு அறிவைப்போதித்து, கவனமாய்க் கேட்டாராய்ந்து, அநேகம் நீதிமொழிகளைச் சேர்த்து எழுதினான். இதமான வார்த்தைகளைக் கண்டு பிடிக்கப் பிரசங்கி வகைதேடினான், எழுதின வாக்கியங்கள் செவ்வையும் சத்தியமுமானவைகள். ஞானிகளின் வாக்கியங்கள் தாற்றுக்கோல்கள்போலவும் சங்கத்தலைவர்களால் அறையப்பட்ட ஆணிகள்போலவும் இருக்கிறது, அவைகள் ஒரே மேய்ப்பனால் அளிக்கப்பட்டது. என் மகனே! இவைகளினாலே புத்தியடைவாயாக, அநேகம் புஸ்தகங்களை உண்டுபண்ணுகிறதற்கு முடிவில்லை, அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு. காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக,

 தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள், எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்.” (பிரசங்கி 12)

 இன்று நான் செய்யாவிடின் இனி எப்போது? தீங்குநாட்கள் எவை? பிரியமானவைகளல்லாத  வருஷங்கள் எவை? அந்தகாரம் உண்டாவது எப்போ? இருண்டுபோகும் நாட்கள் எது? துக்கங்கொண்டாடுகிறவர்கள் வீதியிலே திரியும் நாளேது? நீ அவற்றுக்கு காத்திருக்க வேண்டுமோ? உன்னை சீருஷ்டித்த தேவனை கனம் பண்ணி அவருக்கு கீழ்படிவது உன் மீது விழுந்த கடமையாயுள்ளது. காலங்களை விரயமாக்கி பின்னர் ஓரு நாள் வருமா? ஓரு சந்தர்ப்பம் கிடையாதோ என்று சொல்லும் நாள் வராதபடி, இன்றே தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்.