Posted on March 28, 2016 02:50:38
யாரப்பா நீ? என்ற கேள்வியுடன் முதியவர் ஓருவர் மனிதர்களை சந்தித்தார். அவரிடத்தில் அமைதியும் பேச்சில் கெம்பீரமும் இருந்தது. அவர் ஒருவரைப் பார்த்து யாரப்பா நீ என்று கேட்டார். அதற்கு அவர் தான் ஒரு வைத்தியர் என்று சொன்னார். முதியவர் அவரை உற்றுப்பார்த்து, வைத்தியர்கள் அநேகர் இருக்கின்றார்கள், யாரப்பா நீ என்று கேட்டார். அதற்கு அந்த வைத்தியர் தனது பெயரை சொன்னார். அந்த முதியவர் அவரை நோக்கி இந்த பெயரிலும் அநேகர் இருக்கிறார்களே, நீ யாரென்று குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா என்று கேட்டார். அப்போது அந்த வைத்தியர் தான் இன்னாருடைய மகனென்றும், திருமணமாகி தனக்கு மனைவி பிள்ளைகள் உண்டு என்று விபரங்களைச் சொன்னார்.
அப்போது அந்த முதியவர் இது தனித்துவமான உனது அடையாளம். ஆயினும் அந்த அடையாளத்தைக் காத்துக் கொள்ளுகின்றாயா என்று கேட்டார்.
வைத்தியர் அந்த முதியவரை நோக்கி பார்த்தார். முதியவர் தனது கேள்வியை விளக்கிக் கூறினார்.
நீ உனது பெற்றோருக்கு மகனாகவே நடந்து கொள்கின்றாயா? அதற்காக என்ன செய்கின்றாய்?
உன் கடமைகளை உண்மையாய்ச்; செய்கிறாயா? அதற்காக என்ன செய்கின்றாய்?
உன் மனைவிக்கு உண்மையான கணவனாய் நடந்து, அன்புகூர்ந்து, உன் கடமைகளைச் செய்கின்றாயா?
உன் பிள்ளைகளுக்கு முன் மாதிரியாய், வழிகாட்டியான தகப்பனாய் இருக்கின்றாயா? அதற்காக என்ன செய்கின்றாய்?
இவை நீ உனது தனித்துவமான அடையாளத்தை காத்து வாழ்கின்றாயா இல்லையா என்பதை உனக்கு விளக்கும் என்றார்.
இந்த கேள்விகள் கணவனுக்கும், மனைவிக்கும், பிள்ளைகளுக்கும், பெற்றோருக்கும் பொருந்தும். எனது அடையாளத்தை நான் காத்துக் கொள்கின்றேனா? பல பெற்றோர் தமது வாழ்வில் உள்ள தவறுகளை ஓழுங்கு செய்யாது தமது பிள்ளைகள் ஒழுங்காய் நடக்க வேண்டும் என்று விரும்புகின்றார்கள்.
நண்டு தனது கண்கள் உள்ள பக்கமாய் நடப்பதில்லை. அதன் கண்களுக்கு வலது அல்லது இடது பக்கமாகவே அது நடக்கும். ஒருமுறை தாய் நண்டு தனது குட்டி நண்டைப் பார்த்து, மற்ற பிராணிகளைப்போல் உனக்கு நேராக நடக்க முடியாதா? கண்களுக்கு நேராய் நட என்று கண்டித்தது. குட்டி நண்டும் முயற்ச்சித்தது ஆனால் முடியவில்லை. தாய் நண்டோ மிகவும் கண்டிப்பாய் நீ நேராய் நடந்துதான் ஆகவேண்டும் என்று கூறிவிட்டது. இடைவிடாத முயற்ச்சிக்குப் பின்பு குட்டி நண்டு களைத்துப் போய் தனது தாய் நண்டைப் பார்த்து நான் முயற்ச்சி பண்ணினேன் என்னால் முடியவில்லை. நீதான் கொஞ்சம் நடந்து காட்டேன் என்று கேட்டது. இப்போது தாய் நண்டுக்கு என்ன சொல்ல முடியும்.
இயேசுக்கிறிஸ்து வெளிப்படுத்தல் விஷேசத்தில் 2:6 ல்:
“நான் வெறுக்கிற நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை நீயும் வெறுக்கிறாய், இது உன்னிடத்திலுண்டு.” என்று எபேசு சபையைக் குறித்து சொன்னார்.
நீ தவறென்று அந்த பழக்கங்களை வெறுக்கிறாய், ஆனாலும் அதை நீ செய்வதற்கும் இடம் கொடுக்கிறாய். “ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.” இந்த புது சிருஷ்டியானது “தன்னைச் சிருஷ்டித்தவருடைய (தேவனுடைய) சாயலுக்கொப்பாய் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனாகும்”. இது தேவனாலே மனிதனுக்கு கொடுக்கப்பட்ட ஈவாகும். இது எப்படி சாத்தியமாகும்?
தேவன் இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறார். அவர் மேய்ப்பனைப்போலத் தமது மந்தையை மேய்ப்பார், ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து, கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார். நம்மை அவர் அறிந்திருக்கின்றபடியால் அவர் எமக்கு என்ன உதவி தேவை என்பதை அறிந்திருக்கின்றார். தன்னிடத்தில் வருகிறவனை தான் புறம்பே தள்ளுவதில்லை என்று சொன்ன தேவன் உண்மையுள்ளவராயுள்ளார்.
இன்று உனது தேவை என்ன? இன்று உனது வாழ்க்கை மாற வேண்டும், வேண்டாத பாவ பழக்கங்களிலிருந்து விடுதலை வேண்டும், தேவனின் புது சிருஷ்டியாக, உனது வாழ்க்கை சரியான பாதையில் செல்லவேண்டும் என்று விரும்பினால், பாவங்களை மன்னிக்கும் இயேசுவே என் வாழ்வில் வாரும். என் பாவங்களை மன்னித்து என்னை புது சிருஷ்டியாக்கி உமது பாதையில் நடத்தும்; என்று கூறுவாயாக.
“இயேசுவே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறார்;”.