எங்கே போகின்றேன்?

Posted on March 09, 2016 02:52:25

“நான் போயிட்டு வாரேன்;” என்னும் வார்த்தைகள் வயது வித்தியாசமின்றி எல்லோராலும் சொல்லப்படுகின்ற வார்த்தைகளாகும். சொல்லிவிட்டு புறப்படுதல் எல்லா மனிதர்களின் வாழ்விலும் மொழி, கலச்சார வேறுபாடின்றி கைக்கொள்ளப்படும் பண்பாகும். வீட்டினுள் உள்ளவர்களுக்கு போகுமிடத்தை சொல்லிப் போகுதல் ஓர் வழக்கமான செயலாகும். பிள்ளைகள் பெற்றோரிடத்திலும், பெற்றோர் பிள்ளைகளிடத்திலும் சொல்லிப் போவார்கள். சிலர் தாங்கள் புறப்படும் போது யாராகிலும் எங்கே போகின்றீர்கள் என்று கேட்பதை அபசகுனமாய் எண்ணுகிறார்கள். இன்னும் பலர் தங்கள் வாழ்க்கையைக் குறித்து பேசும் போது நான் எங்கே போகிறேன் என்று எனக்குத் தெரியாது என்பார்கள். வேறு சிலர் அதைப்பற்றி எனக்கு கவலையில்லை என்பார்கள். இதைப்பற்றி என்ன சொல்லுவோம். குறிக்கோள் இல்லாத மனித வாழ்வு பிடிபட்டு அழிக்கப்படுகின்ற புத்தியில்லாத மிருகத்துக்கு ஒப்பாகாதோ? 

வாழ்வில் இலட்ச்சியத்தை அடைய குறிக்கோள் இருக்க வேண்டும். அதை ஒருவர் எங்கே கற்றுக்கொள்ள முடியும்? யார்தான் அதை சொல்லிக்கொடுப்பார்கள்? அவர்களை நம்ப முடியுமா?  எண்ணங்களின் ஊற்றில் உழல்பவர்களுண்டு ஆனால் அவர்களின் வாழ்வில் இலட் சியம் எதுவும் காணப்படாது. மனிதர்களிடம் இயல்பாக இரக்க சுபாவம் உண்டு. மற்றவர்களுக்கு உண்டாகும் துன்பத்தைக் கண்டு கவலைப்படுவார்கள், உதவிகளையும் செய்வார்கள். இன்னும் சிலருடைய வாழ்க்கையில் துக்கப்படுவது ஓர் பொழுது போக்கு நிகழ்வாயுள்ளது. இவர்கள், தேடி துக்கமான கதைகளை படிப்பார்கள். பின்பு அக்கதாபாத்திரங்ளுக்காகத் துக்கப்படுவார்கள். துக்கமான திரைப்படங்களைப் பார்ப்பார்கள் பின்பு அழுவார்கள். அதைக் குறித்து பேசுவார்கள். இவர்கள் தங்களை இரக்க சுபாவமுள்ளவர்களென்று சொல்லுகின்றார்கள்.

உலகமானது இந்நாட்களில் இயேசுக்கிறிஸ்துவின் சிலுவைப்பாடுக ளையும் அதைத் தொடர்ந்து அவரது உயிர்த்தெழுதலையும் நினைவு கூறுகின்றது. அவரது மரணத்தை பெரிய வெள்ளி என்றும் அவரது உயிர்த்தெழுதலை உயிர்த்த ஞாயிறு என்றும் நினைவு கூறுகின்றது. இயேசு மனிதர்களின் பாவங்களை போக்கும் பாவநிவாரண பலியாக உலகிற்கு வந்தார். ‘மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார், நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது, அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம், கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.’ ஏசாயா 53:4-6 என்று அவரைக்குறித்து அவரது பிறப்பிற்கு 700 ஆண்டுகளுக்கு முன்னதாக தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது. 

இயேசுக்கிறிஸ்து எமது பாவங்களுக்காய் சிலுவை சுமந்தார். அது மிகவும் துன்பம் நிறைந்த காட்சி. பார்த்தவர்களை மட்டுமின்றி அதை கேட்பவர்களையும், நினைப்பவர்களையும் உறையச் செய்யும் அகோரக் காட்சி. அவர் சிலுவை சுமந்து சென்ற போது ‘திரள்கூட்டமான ஜனங்களும் அவருக்காகப் புலம்பி அழுகிற ஸ்திரீகளும் அவருக்குப் பின்சென்றார்கள். இயேசு அவர்கள் முகமாய்த் திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள். இதோ, மலடிகள் பாக்கியவதிகளென்றும், பிள்ளைபெறாத கர்ப்பங்களும் பால்கொடாத முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்றும் சொல்லப்படும் நாட்கள் வரும். அப்பொழுது மலைகளை நோக்கி: எங்கள்மேல் விழுங்களென்றும், குன்றுகளை நோக்கி: எங்களை மறைத்துக் கொள்ளுங்களென்றும் சொல்லத்தொடங்குவார்கள். பச்சைமரத்துக்கு இவைகளைச் செய்தால், பட்டமரத்துக்கு என்ன செய்யமாட்டார்கள் என்றார்.’ லூக்கா 23:27-31 இயேசு, அந்தத் துன்ப காட்சியைக் கண்டு சகிக்க முடியாமல் அழுதவர்களை நோக்கி ‘நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்’ என்றார். அவர்களோ தங்கள் நிலை அறியாதிருந்தார்கள். பிரியமான சகோதரனே சகோதரியே நீ எங்கே போகிறாய்? பிரியமான தகப்பனே தாயே நீ எங்கே போகிறாய்? உன் பிள்ளைகள் எங்கே போகிறார்கள்? இயேசு சொன்னார் ‘நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.’ யோவான் 14:6

RECENT BLOGS