A TAMIL CHURCH IN TORONTO AREA

Posted on March 17, 2016 16:11:37

உள்ளான மனிதன் சஞ்சிகை

“உள்ளான மனிதன்” என்னும் மாதாந்த சஞ்சிகையூடாக உங்களுடன் தொடர்பு கொள்வதில் பெரு மகிழ்ச்சி! ஒரு சஞ்சிகைக்கு இருக்க வேண்டிய மொழி, இலக்கணம், தோற்றம் இவைகளை நாங்கள் கருத்தில் கொண்டிருந்தாலும், இந்த சஞ்சிகையின் முதன்மையான நோக்கம், தேவனுடைய ஆன்மீக விடுதலையைக் குறித்த கருப் பொருளை யாவரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் சுருக்கமாக இலகுவான தமிழ் நடையில் வாசகர்களுக்கு சமர்ப்பிப்பதாகும்.

இவ்வுலகிலே, ஒரு மனிதன் தன்னை யார் என்று மற்றவர்கள் சொல்ல விரும்புவதும், மற்றவர்கள் அவனை யார் என்று சொல்லுவதும், உண்மையிலேயே அந்த மனிதன் யார் என்பதும் வேறுபடலாம். மனிதனின்; தோற்றம், உலகிற்கு போடும் வேஷம் இவைகளை வைத்து ஒரு மனிதன் யார் என்பதை உண்மையிலேயே அறிந்து கொள்ள முடியாது.

“அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்று சொல்வார்கள், ஆனால் இக்கால கட்டத்திலே சில மனிதர்களுடைய வேஷத்தை நிதானித்தறிவது கடினமான காரியம். சில வேளைகளில், பொல்லாத வழிகளில் வாழ்பவர்கள் தங்கள் வெளிப்படையான செயல்களால், தங்கள் உள் தோற்றத்தின் உண்மையான சுயரூபத்தை காட்டிக்கொள்வார்கள். ஆனால், நல் வழி நடப்பவர்கள் போல் தோற்றமளிக்கும் சிலர், உண்மையிலேயே தங்கள் “உள்ளான மனிதன்” யார் என்று காட்டிக் கொள்வதில்லை. நாங்கள் எங்களை எப்படியாக பெயர் வைத்து வகையறுத்துக்கொண்டாலும், அகமாற்றம் அடையாத வாழ்கை ஒரு மாயமான வேஷம்!

ஒரு மனிதன் உலகிற்கு காண்பிக்கும் வெளி தோற்றமும், உள்ளான தோற்றமும் வெவ்வேறாக இருக்கலாம். எவை எப்படியாக இருந்தாலும் கர்த்தராகிய தேவனுக்கு மறைவான காரியம் ஒன்றுமில்லை. தேவன், மனிதனுடைய எல்லா வேஷத்தையும் ஒரு நாள் களையப்பண்ணுவார். “தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இரு புறமும் கருக்குள்ள எந்தப் பட்டய த்திலும் கருக்குள்ளதாயும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவு களையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது”. (எபிரெயர் 4:12)

எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்பட வேண்டிய காலம் இது. இந்த உலகத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்!

https://gtachurch.ca/im