Posted on February 21, 2016 03:42:36
கடுமையான குளிர் காலம் கடந்து எப்போது கோடைகாலம் வரும் என்று நாங்கள் ஆவலாய் எதிர்பார்த்திருக்கிறோம். கோடைகாலத்திலும் சில நாட்கள் மிகவும் வறட்சியாக இருக்கும், அந்த நாட்களிலே அகோரமான வெப்பம் கொளுத்தி வீசும் போது, குளிர்மையான ஒரு மென்பானம் வறண்ட நாவிற்கு நல்ல இதமாக இருக்கும். அப்படியான ஒரு காலநிலையில் நீங்கள் ஒரு வீட்டிற்கு விருந்தாளியாக செல்லும் போது, மீன் வெடுக்கின் நாற்றமெடுக்கும் ஒரு டம்ளரில் அருமையான ஒரு மென்பானத்தை உங்களுக்கு வார்த்து வழங்கினால், அதை யார்தான் பருகுவார்கள்? இதை எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் ஒரு நல்ல உதாரணம் போல தோன்றவில்லை, நினைக்கவே அருவருப்பாக தோன்றுகின்றதல்லவா?
நாற்றமெடுக்கும் ஒரு பாத்திரத்தில் எவ்வளவு நறுமணம் வீசும் பானத்தை வார்த்து வழங்கினாலும், அந்த நாற்றம் நறுமணம் வீசும் பானங்களை கூட நாற்றமெடுக்கச் செய்துவிடும். இதே போன்றுதான் எம்முள்ளத்தில் ஒட்டிக்கொள்ளும் கசப்பும் அருவருப்பானது. இன்னுமொருவரைக் குறித்த கசப்பு எம்முள்ளத்தில் இருந்தால், அவ்வுள்ளத்தில் இருந்து எழும் துதியும் ஜெபமும் தேவனுக்கு உகந்த வாசனையாக இருக்கமாட்டாது. கசப்பும் வைராக்கியமும் இதயத்தில் குடி கொள்ளும் போது அவை எம் உடல் நலத்திற்கும் பங்கம் விளைவிக்கிறது. உங்கள்
ஆவியை இது முறியப்பண்ணும். மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும். (நீதி 17:22)
கசப்பை உள்ளத்தில் ஒட்டவிட்டால், அந்த கசப்பை எங்கள் உள்ளத்தில் உண்டாகிய பிசாசிற்கு வெற்றியும், கசப்பு உண்டான எங்களுக்கு தோல்வியுமாக போய்விடும். சிலர் கசப்பு வரும் போது வைராக்கியம் கொண்டு, நான் அந்த தெய்வத்திடம் போய் கசப்பூட்டியவர்களுக்கு எதிராக செய்வினை, தீவினை செய்வேன், அல்லது இழைக்கட்டி விடுவேன் என்று சபதம் கொள்கின்றார்கள். உண்மையான ஒரே தேவனிடம் இருந்து அசுத்தமான செய்வினை, தீவினையான காரியங்கள் ஒரு போது வருவதில்லை. பிசாசாகிய சாத்தானே கொல்லவும் அழிக்கவும் வருவான். உண்மையான பரிசுத்த ஒரே கர்த்தராகிய தேவன் தன்னை நம்பி வருகிறவர்களுக்கு நித்திய ஜீவனை கொடுக்கின்றார்.
• எங்கள் இருதயத்தில் கசப்பு இருக்குமாயின் எங்கள் ஆவிக்குரிய வளர்ச்சி தடைப்படுவதுடன் ஜெபத்திற்கு பதில் தாமதமாகும்.
எங்கள் மட்டற்ற குற்றங்களை கர்த்தராகிய தேவன் தீர்ப்புச்செய்யாமல் பொறுமையாக எங்களுக்கு மன்னிக்கிறதுபோல நாங்களும் மற்றவர்கள் எங்களுக்கு எதிராக செய்த குற்றங்களை மன்னிக்கவேண்டும். ஒருவேளை எங்களிடம் நன்மைகள் பெற்றவர்கள் கூட எங்களுக்கு தீமை செய்யாலாம், அவை மனதை அழுத்தும் மிகவும் துன்பமான சம்பவம். அவைகளையும் கர்த்தராகிய தேவனுக்குள் மன்னிக்க வேண்டும். தீமைசெய்து பாடநுபவிப்பதிலும், தேவனுக்கு சித்தமானால், நன்மை செய்து பாடநுபவிப்பதே மேன்மையாயிருக்கும். இதனால் தேவனுடைய ஆசீர்வாதங்கள் எங்களில் பெருகுவதுடன், பரலோக கைமாறு எங்களுக்கு மிகுதியாக இருக்கும். நாங்கள் மற்றவர்களுடைய குற்றங்களை மன்னிக்க தயவு காட்டாவிடத்தில் எப்படி எங்கள் வாழ்வில் தயவை வேண்டி நிற்க முடியும்?
• மற்றவர்களை மன்னிக்காமல் தேவனிடத்தில் தயவு வேண்டி நிற்கும் ஜெபத்திற்கு பதில் தாததமாகும்.
பாவங்களிலிருந்து மனந்திரும்பி, அவைகளை அறிக்கை பண்ணி விட்டு விடுகிறவர்கள் வாழ்வடைவார்கள் என்று பரிசுத்த வேதாகமம் சொல்கின்றது. ஆகவே எங்களில் பாவம் இருக்குமாயின் அவைகளை தேவ சமூகத்தில் அறிக்கை பண்ணி விட்டுவிட வேண்டும். இரக்கத்தில் ஐசுவரியம் உள்ள தேவன் தயவாய் அதை மன்னிப்பார்.
• எங்கள் பாவங்களை விட்டுவிடாமல் ஜெபிக்கும் ஜெபத்திற்கு பதில் தாமதமாகும்.
உள்ளத்தில் இருந்து கசப்பை நீக்குவதும், மற்றவர்கள் குற்றத்தை மன்னிப்பதும் மனிதனுக்கு சுலபமான காரியம் அல்ல. இது மனித முயற்சியில் ஒரு கடினமான காரியம். இந்த மேன்மையான காரியத்தை எங்கள் நாளாந்த வாழ்கையில் பழக்கப்படுத்திக் கொள்ள கர்;த்தராகிய தேவன் வழி அமைத்துக் கொடுத்திருக்கின்றார். எங்களுடைய உலகதேவைகளை ஜெபத்தில் வைக்குமுன், ஆத்துமாவையும், சரீர சுகத்தையும் கெடுக்கும் கசப்பும், மன்னிக்காத சுபாவமும் நீங்க கர்த்தராகிய தேவனிடத்தில் உண்மையான உள்ளத்தோடு நாங்கள் உறுதியான தீர்மானம் செய்ய வேண்டும். எங்கள் வெளியரங்கமான, மறைவான பாவங்களிலிருந்து விடுதலையாக வேண்டும். அப்பொழுது எல்லா புத்திக்குமெட்டாத தேவசமாதானம் உங்கள் இருதயங்களை ஆட்கொள்ளும்.
இப்படியான இருதயம் உடையவர்களை தேவன் விரும்புகிறார்! இப்படியானவர்களின் துதி தேவனுடைய சமூகத்தில் நறுமணமா யிருக்கும்! இப்படியாவர்களுடைய ஜெபம் தேவனக்கு பிரியமாயிருக்கும்!