எனக்கொரு வரம் வேண்டும்

Posted on February 27, 2016 16:34:34

பிறந்தநாள் பரிசாக உனக்கு என்ன வேண்டும் என்று பெற்றோர் பிள்ளைகளிடம் கேட்பதுண்டு. அதனால் பிள்ளைகள் மகிழ்வுறுவதுண்டு. நத்தார் (கிறிஸ்மஸ்) பரிசாக எனக்கு என்ன தரப்போகின்றீர்கள் என்று பிள்ளைகள் எதிர்பார்ப்போடு உரிமையாய் பெற்றோரிடம் கேட்பதுண்டு. இம்முறை திருமண நினைவு நாளன்று கணவர் எனக்கு எதை பரிசாக தரப்போகின்றார் என்று ஆவலோடு பார்த்திருக்கும் பெண்களுண்டு. எதிர்பார்ப்புகள் மனதின் விருப்பங்களாகும். அவை மனதின் இரகசிய வேண்டுதல்களாய் இருக்கின்றது. ஓருவர் அமைதியாக அமர்ந்திருந்து தனது மனதின் குரலை உற்றுக்கேட்டால் அங்கு எனக்கு ஓரு நன்மை வேண்டும், எனது விருப்பம் நிறைவேற வேண்டும், எனக்கொரு வரம் வேண்டும், ஆம் எனக்கொரு வரம் வேண்டும் என்று அடித்துக் கொள்வதை கேட்க முடியும்.  

 எனக்கொரு வரம் வேண்டும். அது என்ன வரம்? 


ஏரோது என்னும் இராஜா பாவம் நிறைந்த ஓர் வாழ்க்கையை வாழ்ந்து வந்தான். அவன் தனது சகோதரனான பிலிப்புவின் மனைவியை தனக்கு மனைவியாக வைத்துக் கொண்டான். அந்நாட்களில் யோவான்ஸ்நானன் என்ற தேவனுடைய தீர்க்கதரிசி ஏரோது இராஜாவை நோக்கி; நீர் செய்வது நியாயமல்ல அது பாவம் என்று சொன்னான். இதனால் ஏரோது இராஜா யோவான்ஸ்நானனை பிடித்து சிறையிலே வைத்தான். ஏரோதுடன் வாழும் அவன் சகோதரனின் மனைவியானவள் யோவான்ஸ்நானனை பற்றி மிகவும் எரிச்சலாயிருந்தாள். ஏரோதின் பிறந்த்த தினமன்று அவளது மகள் ஏரோது முன்பாக நடனமாடி அவனை மகிழ்வித்தாள். ஏரோது மிகவும் மகிழ்ந்து அவளை நோக்கி உனக்கு என்ன வேண்டுமோ கேள் அதை உனக்கு நிச்சயம் தருகின்றேன் என்று வாக்குப் பண்ணினான். அந்த சிறுமி அதை தனது தாய்க்கு  தெரிவித்தாள். அவள் தாயோ அவளிடம் நீ யோவான்ஸ்நானனின் தலையை தரும்படி கேள் என்றாள். தனது பாவமான வாழ்க்கைக்கு இடையூறாக இருந்ந நீதிமானைக் கொள்வதே அவள் தேவையாயிருந்தது. தீதான ஆசையும் பாவ செயலும் வேண்டும் வரமாகுமோ? 

இயேசுக்கிறிஸ்துவின் நாட்களிலே பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் மேல் கையை வைத்து அவர்களை ஆசீர்வதிக்கும்படி பிள்ளைகளை இயேசுவிடத்தில் கொண்டு வந்தார்கள். அவரும்  அவர்களை ஆசீர்;வதித்தார்;. இன்னும் பலர் தங்கள் பிள்ளைகள் மரணத்துக்கேதுவாக வியாதிப்பட்ட போது இயேசுவிடம் கண்ணீரோடு வந்து அவர்களுக்காய் வேண்டுதல் பண்ணினார்கள். அவரும் அவர்களை குணப்படுத்தினார். தங்கள் பிள்ளைகள் ஆசிர்வதிக்கப்பட வேண்டும் என்று விரும்பாத பெற்றோரில்லை. எல்லோரும் தம் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் குறித்து கரிசனையுள்ளவராகவே உள்ளனர். இன்று எனக்கொரு வரம் வேண்டும். அது என்ன வரம்? இவ்வுலகத்தின் வேஷம் கடந்து போகிறதே.

ஓருவன் உலக ஆஸ்த்தி உள்ளவனாயிருந்து சீர்கெட்டு வாழ்ந்தால் அவனை குறித்து பெற்றோர் பெருமைப்படுவார்களோ? இல்லை அப்படி பட்ட ஓரு வாழ்வை தம் பிள்ளைகளுக்கு விரும்பும் பெற்றோர் உண்டோ? புத்தியுள்ள ஸ்திரி தன் வீட்டைக் கட்டுகிறாள். தேவன் வீட்டைக் கட்டாவிட்டால் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா. புத்தியுள்ள ஸ்திரி தன் வீடு கட்டும்படி அதைக் கட்டுகின்ற தேவனைப் பற்றிக்கொள் கின்றாள். சர்வத்தையும் படைத்த தேவன் எங்கள் பரம பிதாவாய் இருக்கின்றார். இயேசுக்கிறிஸ்து இவ்விதமாய் சொன்னார். “உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா? ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும் போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?” (மத்தேயு 7)

 
தேவ பக்தியாய் வாழ்ந்த ஒரு இராஜா இப்படியாக பாடியுள்ளார். 

அவர்கள் (மனிதர்கள்) ஒரு நிமிஷத்தில் எவ்வளவு பாழாய்ப்போகிறார்கள்! பயங்கரங்களால் அழிந்து நிர்மூலமாகிறார்கள். பரலோகத்தில் உம்மை யல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை. என் மாம்சமும் என் இருதயமும் மாண்டுபோகிறது, தேவன் என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறார். (சங்கிதம் 73).

இவ்வுலக வாழ்க்கை முடிந்து போகும். ஆனால் நித்திய தேவன் என்றென்றும் பூலோகத்திலும் பரலோகத்திலும் எனது துணையாவார். இன்று எனக்கொரு வரம் வேண்டும். அது என்னவென்றால் இயேசுவே எனக்கு நீர் வேண்டும்.  

RECENT BLOGS