சிறு நரிகள் (Small Foxes)

Posted on February 27, 2016 16:21:21

திராட்சச் செடி செழிமையாக வளர்ந்து வருகின்றது, கொடிகள் இசைவாய் படர்ந்து வளர்கின்றது, பார்வைக்கு பசுமையும் அழகுமாக காட்சியளிக்கின்றது. செடிக்கு தேவையான பசளை, போதிய தண்ணீரும், காலநிலையும் சாதகமாகவே இருக்கின்றது. பருவத்தில் பூத்து, காலத்தில் நன்றாய் பிஞ்சு பிடித்து, எக்குறையும் இல்லாத ஒரு நல்ல திராட்சை செடிகள் எப்படி இருக்க வேண்டுமோ அப்படியே இருக்கின்றது. நாவிற்கு இனிமையும், தோட்டக் காரனுக்கு நல்ல விளைச்சலும் தரக்கூடிய ஒரு பெரும்போகம், ஆனால் சடுதியில் பல செடிகளில் உள்ள பிஞ்சுகள் உலர்ந்து, இலைகள் வாட ஆரம்பித்து விட்டது. என்ன அதிர்ச்சி தோட்டக்காரனுக்கு, உயர்ரக செடியையல்லவோ வைத்தேன், தோட்டப் பக்கமாக போகின்றவர்கள் பார்த்து ரசிக்க கூடிய வகையில் இச்செடிகள் ஒரு பழுதுமில்லாமல் காட்சியளிக்கவில்லையா? இதற்கு நன்றாக வேலியடைக்கப்பட்டுத்தானே இருந்தது? எந்தப் பூச்சிகளோ வண்டுகளோ இவைகளை கெடுக்கவில்லையே?

சிறு நரி; சுமார் 1.5 இருந்து 3.5 இறாத்தல் எடையுள்ளதாயும் 8 அங்குல உயரமுள்ளதாயும், 10-16 அங்குல உடல் நீளமுள்ளதாயும் இருக்கும். தோற்றத்தில் சிறியதாயிருப்பதால் இவைகள் தோட்ட த்திற்குள் இலகுவாக புகுந்துவிடும் அத்துடன், இந்த சிறு நரிகளாலும், குழி நரிகளாலும் என்ன செய்ய முடியும் என்று யோசிக்க கூடிய அளவில் அதன் உடல் தோற்றம் தென்பட்டாலும் சிறு நரிகளும், குழி நரிகளும் திராட்சை தோட்டங்களை முற்றிலும் கெடுத்து விடக்கூடிய அளவிற்கு செயற்படக்கூடியவைகள்;

•கொடிகளையும் இலைகளையும் பற்களால் நறுக்கி விடும்

•திராட்சை தோட்டத்திலே அநேக குழிகளை தோண்டிவிடும்

•வேர்களை அறுத்துவிடும், 

•குழிகள் தோண்டிவிடுவதால் வேர்கள் கெட்டுப்போய்விடும்.

ஆரம்பத்தில் எல்லாம் நன்மையாகவும் சிறப்பாகவும் இருந்து வந்தது. ஆனால் செடிகள்; அவைகளின் முழுமையான பலனை காணும் நாட்கள் வருவதற்கு முன்னே, அழகாய் தோன்றின திராட்சை தோட்டத்தை இந்நரிகள் முற்றிலும் பாழாக்கிவிட்டதே!

இன்று அநேகருடைய வாழ்கை அதி சிறப்பாகவே ஆரம்பிக்கின்றது, ஒவ்வொரு காரியங்களும் அதின் நேரத்தில் நேர்த்தியாக நடைபெறுகின்றது, பூத்து குலுங்கி, பிஞ்சுபிடித்து, கனியாகும் காலம் வருமுன், அங்காங்கே விட்டு வைத்த சிறு நரிகளும், குழி நரிகளும் வாழ்கையை கெடுத்துவிடுகின்றது. வெளியரங்கமான துணிகரமான பாவங்கள் ஏதும் இல்லை, வாழ்கையை கெடுக்கும் கெட்ட பழக்கங்கள் ஏதும் இல்லை ஆனாலும் அங்காங்கே விட்டு வைத்த சின்ன காரியங்கள் வாழ்கையின் முழுமையான சமாதானத்தையும் சந்தோஷத்தையும் அடையமுடியாமல் தடைசெய்து விடுவது மட்டுமல்லாமல், குடும்பங்களில் பிளவுகளைகூட உண்டு பண்ணி விடுகின்றது. 

 “திராட்சத் தோட்டங்களைக் கெடுக்கின்ற குழி நரிகளையும் சிறு நரிகளையும் நமக்குப் பிடியுங்கள், நம்முடைய திராட்சைத் தோட்டங்கள் பூவும் பிஞ்சுமாயிருக்கின்றதே” (உன்னதப்பாட்டு 2:15)

கொஞ்சம் புளித்தமா எல்லாவற்றையும் புளிக்கவைப்பது போல, எங்கள் வாழ்கையில் இருக்கும் சின்ன காரியங்களை குறித்தும் அசண்டையாக இருக்கக்கூடாது, அளப்பெரிய பிரயாசத்தை ஒரு சின்னக்காரியம் முற்றிலும் கெடுத்துவிட விட்டுவிடுவான் ஏன்? என் வாழ்கையில் எது அந்தக் குழி நரி? எது அந்தச் சிறு நரி? இதை வாசித்துக் கொண்டிருக்கின்ற சகோதரனே சகோதரியே, அவை எது என்று உனக்கு நன்றாகவே தெரியும், அவை எது என்று உன் கர்த்தராகிய தேவனுக்கும் தெரியும். ஆகவே “இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில் உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள்” (எபிரெயர் 4:7)

இன்று உங்களை ஆராய்ந்து பாருங்கள்! உங்கள் பிரயாசத்தின் பலனை அடைமுடியாமல் இருப்பானேன்? இன்றே அந்த சிறு நரிகளையும், குழி நரிகளையும் போன்று உங்கள் வாழ்கையை கெடுக்கும் பழக்கங்களை விட்டுவிடுங்கள்.நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத் தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள் (2 பேதுரு 3:14). 

துன்மார்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனு~ன் பாக்கியவான். அவன் தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்; அவன் செய்வதெ ல்லாம் வாய்க்கும். (சங்கீதம் 1;:1-3)