Meaning of Christmas - கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

Posted on October 31, 2016 13:20:53

மார்கழி பிறந்தால் பலரும் கிறிஸ்மஸ் (நத்தார்) விடுமுறையை பற்றி பேசுவார்கள். ஏன் வர்த்தகர்கள் இதை ஐப்பசி, கார்த்திகை மாதங்களிலேயே விளம்பரப்படுத்த ஆரம்பித்துவிடுவார்கள். கிறிஸ்மஸ் (நத்தார்) எப்படி போகின்றது என்று கேட்டால் பரவலாக இன்று நத்தார் நாட்களில் வைக்கும் மரத்தையும் (Christmas Tree), நத்தார் தாத்தா வைப் (Santa Clause) பற்றியும், சிறுவர் பெரியோரிடையே பரிமாறும் பரிசுப் பொருட்களைபற்றியும், உல்லாசமாக பொருட் கொள்வனவு செய்தல் (Shopping), உல்லாசப் பயணம்  (Vacation) செல்லுதல், மேற்கத்தைய நாடுகளில் வெண்பனி கொட்டினால்  வெள்ளை நத்தார் (White Christmas) என்றும், குடும்ப ஒன்றுகூடலையும் இன்று அதிகமாக பேசிக் கொள்வார்கள். இவை யாவும் இயேசுக் கிறிஸ்துவின் (Jesus Christ) பிறப்பை கொண்டாடும் வண்ணமாக பிற்காலங்களில் சில மனிதர்களால் புகுத்தப்பட்ட காரியங்கள்,  ஆனால் காலப்போக்கில் மனிதர்கள் கருப்பொருளாகிய உலகின் மீட்பர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் முக்கியத்துவத்தை மறந்து, கொண்டாட்டத்திலும்,  இன்னும் பலர் களியாட்டத்திலும் அதிக கவனத்தைச் செலுத்துகின்றார்கள்.

கிறிஸ்மஸ் என்று கூறப்படும் இயேசுக் கிறிஸ்துவின் பிறப்பைக் குறித்த முக்கியத்துவம் என்ன?

ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். சூரியன், சந்திரன்,  நட்சத்திரங்கள்  உட்பட  ஆகாயவிரிவிலுள்ள     யாவையும், பூமியிலுள்ள யாவையும், சமுத்திரத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினார். எல்லா படைப்புக்களையும் ஆண்டு கொள்ள மனிதனை தமது சாயலில் உருவாக்கினார். ஆணும் பெண்ணுமாக, ஆதாமையும் ஏவாளையும் சிருஷ்டித்து, அவர்களை மகிமையினால் உடுத்தி, எந்த குறையுமில்லாதபடி நிறைவாக ஆசீர்வ தித்து, பாவமறியாத அவர்கள் மத்தியிலே தேவன் வாசம் செய்து வந்தார்.

தங்களுக்கிருந்த ஆதிமேன்மையை காத்துக்கொள்ளாமல் தேவனுடைய கட்டளையை மீறிய தேவ தூதர்கள் தேவனுடைய சமூகத்திலிருந்து தள்ளப்பட்டு கீழ்படியாத பிசாசுகளாக மாறினார்கள். ஆதாம் ஏவாள், தேவன் அவர்களுக்குக் கொடுத்த மேன்மையை மறந்து அந்த பிசாசிற்கு செவி கொடுத்து தேவனின் கட்டளையை மீறி, வஞ்சிக்கப்பட்டுப் போனார்கள்;. பாவமறியாது வாழ்ந்து வந்தவர்களின் இருதயத்திலே பிசாசினால் பாவத்தின் வித்து (பாவம் செய்யும் சுபாவம்) விதைக்கப் பட்டது. இதனால் அவர்கள் பாவிகளானார்கள்.

பாவம் இருக்கும் இடத்தில் பரிசுத்தமுள்ள தேவன் வாசம் செய்ய மாட்டார், அதேபோல தேவன் இருக்கும் இடத்தில் பாவம் வாசம் செய்ய முடியாது. பாவம் செய்யும் எந்த ஆத்துமாவும் சாகவேண் டியதாயிற்று. அதாவது, இவ்வுலகத்தில் தோன்றிய யாவரும் ஒரு நாள் மரிக்கத்தான் வேண்டும், இது முதலாம் மரணம். அதன் பின் பாவமுள்ள ஆத்துமாக்கள் நியாயம் தீர்க்கப்பட்டு நித்திய நரகத்திலே பங்கடைவார்கள், இது இரண்டாம் மரணம். பாவவித்துள்ள மனிதன் இவ்வுலத்தை விட்டு கடந்து சென்ற பின், அவன் ஆத்துமா பாவத்திலிருந்தபடியால் மோட்சம் செல்ல முடியாது. ஆகவே பாவம் செய்த ஆதாம் ஏவாளும், அவர்கள் வழி வந்த யாவரும் (ஜென்ம பாவத்தினால்) இரண்டாம் மரணமாகிய நித்திய நரகத்திலே பங்கடைய வேண்டியதாயிற்று.

இந்த பாவ வித்திலிருந்து, மனிதன் தன்னுடைய சுய முயற்சியினால் மீட்படைய முடியாது. தேவன் அன்புள்ளவராகையால் அவர்களை ஆக்கினைக்குள்ளாக நியாயம் தீர்க்காமல், நித்திய மரணத்திற்கு அதிகாரியாகிய பிசாசானவனை ஜெயித்து, பாவத்தில் இருந்து மனிதர்களை மீட்க ஒரு இரட்சகரை (மீட்பரை) அனுப்புவேன் என்று வாக்களித்தார். அப்படியாக தேவன் உரைத்த நாளில் எந்த வித மதமோ, வேறு எந்த வழிபாடுகளோ இருந்ததில்லை.

அந்நாளிலிருந்து மனிதர்கள் பாவத்தை பரிகரிக்க பலவிதமான பலிகளை செலுத்திவந்தார்கள். பாவ வித்து மனிதர்களுக்குள் இருந்த படியால் பிசாசானவன் அவர்கள் பலவிதமான மத வழிபாட்டு முறைகளுக்கும், பொல்லாத வழிகளுக்கும் இழுத்துச் சென்றான். (ஆதியாகமம் 6:5) தங்கள் கண்போன வழியில் சென்று, பல விதமான மத ங்களையும், கொள்கைகளையும் கோட்பாடுகளையும் உண்டாக்கினார்கள். தேவனுடைய சத்தத்திற்கு செவி கொடுப்பது பலருக்கு கடினமாக இருந்தது. தங்களை வருத்திக் கொள்வதாலும், தங்கள் செயல்முறைகளாலும் பரிசுத்தமடைய மனிதர்கள் முயன்றுகொண்டே இருந்தார்கள். தங்கள் சொந்த வழிகளில் சென்று, தங்கள் பரம்பரை பாரம்பரியத்தை முன்னோர்கள் போல நடப்பிப்பதால் தேவனிடம் சென்றுவிடலாம் என்று எண்ணிக்கொண்டார்கள்.

தேவன் தாம் வாக்களித்த மீட்பரை அனுப்புவதற்காக, தனக்கென்று கீழ்படிவுள்ள ஒரு கூட்ட ஜனத்தை எப்பொழுதும் வைத்திருந்தார், இவர்கள் இஸ்ரவேல் ஜனங்களுக்குள்ளே ஒரு சிறு கூட்டமாக யிருந்தார்கள். பாவம் செய்த ஆத்துமாவின் பாவ வித்து நிரந்தரமாக நீக்கப்பட்டு, நித்திய வாழ்வை மோட்சத்தில் அடைய ஆத்துமா சுத்தமாக்கப்படவேண்டும். மனிதன் பாவமன்னிப்பு அடையவேண்டும். பாவமன்னிப்பு அடைய குற்றமில்லாத இரத்தம் சிந்தப்படவேண்டும். மிருகங்கள் பறவைகள் மற்றும் நரர் பலி பாவமன்னிப்பை கொண்டுவர முடியாது. பாவமில்லாத பரிசுத்தமான இரத்தம் சிந்தாமல் பாவ மன்னிப்பில்லை. இந்த உலகில் பிறந்த எவரும் அல்லது எதுவும் பாவதிற்கு உட்பட்ட உயிராகவே இருந்தது. ஆகையால் பரிசுத்தமான இரத்தம் எவரிடமும் இருந்ததில்லை.

மனிதன் பாவத்தில் விழுந்த நாள் முதற்கொண்டு, வாக்களிக்கப்பட்ட மீட்பரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்த மீட்பரின் பிறப்பைப் பற்றி தீர்க்கதரிசிகள் முன்கூட்டியே உரைத்திருந்தார்கள். (ஏசாயா 9:1-7, ஏரேமியா 23:5) சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னதாக, தேவனால் வாக்களிக்கப்பட்ட அந்த மீட்பர், தேவ மைந்தனாக இவ்வுலகில் பிறந்தார். இவர் தேவ குமாரனானபடியால் இவருக்குள் பாவ வித்து இருக்கவில்லை, (லூக்கா 1:35) அதனால் இவருக்குள் பாவம் இருக்க முடிய வில்லை. (எபிரெயர் 4:15) மனிதர்கள் யாரும் இவருக்கு எதுவும் சொல்லிக் கொடு க்க வேண்டிய அவசியமும் இருந்ததில்லை,  (யோவான் 2:24,25) சொல்லிக் கொடு ப்பதற்கு பாவமில்லாத மனிதன் இயேசு விற்கு முன்னும், இவர் உலகில் இருந்த போதும், இவர் வந்து சென்ற பின்னும் உலகில் பிறந்ததில்லை. (ரோமர் 3:23). இனிமேல் பிறக்கப் போவதுமில்லை. இந்த பரிசுத்த பிள்ளையாகிய தேவ மைந்தன் கிறிஸ்துவாகிய இயேசுவின் பிறந்த நாளையே கிறிஸ்மஸ் (Christmas) என்று கூறுகின்றார்கள்.

உண்மையிலேயே இது ஒரு மகிழ்சியான நாள், நாங்கள் யாவரும் சந்தோஷத்தோடே கொண்டாட வேண்டிய நாள். இயேசுக் கிறிஸ்துவின் பிறப்பை தேவ தூதன் மந்தை மேய்ப்பவர்களுக்கு அறிவித்தபோது பரமசேனையின் திரள் அந்தத் தூதனோடு தோன்றி உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி துதித்தார்கள். (லூக்கா 2:14) ஏனென்றால் இது ஒரு நற்செய்தி! கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்காகத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார் என்று பரிசுத்;த வேதாகமம் கூறுகின்றது. (லூக்கா 2:11).

இந்த நாளை சந்தோஷமாக கொண்டாடுவதில் தவறில்லை, ஆனால்

அந்த கொண்டாட்டத்தின் மத்தியில் இயேசு கிறிஸ்துவே மையமாக இருக்கவேண்டும். தேவ சேனையின் மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் தேவனுக்கு மகிமையும், துதியும் செலுத்துவதாகவே இருந்தது. இன்று பலர் தங்களை சரீரத்தின் இச்சைகளை நிறைவேற்றும்  பொருட்டு குடித்து வெறித்து, ஆடிப்பாடி பலவிதமான களியாட்டங்களுடன் மெய் மறந்து இந்த நாளில் கொண்டாடுகின்றார்கள். தேவனுடைய பிறப்பின்; கொண்டாட்டம் மனிதனுடைய சரீர மகிழ்ச்சியை குறித்த விடயமல்ல. மனிதனின் ஆத்துமாவை நித்திய மரணத்திலிருந்து மீட்கும்படியாக இரட்சகர் பூமியிலே உதித்த நாள். தேவ திட்டமானது இயேசுவை விசுவாசிக்கிற எவரும் தன் பாவத்தில் மரிக்காமல் தன் ஆத்துமாவை கேட்டிற்கு காத்துக் கொள்வதாகும். (யோவான் 3:16)

ஆத்துமாவை மீட்க வந்த இயேசுக் கிறிஸ்துவின் பிறப்பை ஆத்துமாவை கெடுக்கும் எந்த ஒரு பழக்கத்தாலும் அல்லது ஆன்மீக வளர்ச்சியை தடைசெய்யக்கூடிய் காரணிகளாலும் கொண்டாட முடியாது. தேவன் பூமியிலே வந்த நாளை நாங்கள் நன்றியுள்ள இருதயத்தோடும்; பரிசுத்தத்தோடும் கொண்டாடவேண்டும் அவருடைய நாமத்திற்கு மகிமையும் கனமும் கொடுக்க வேண்டும்.

எந்த ஒரு காரியத்திற்கும் செயலுக்கும் முன்பாக “கிறிஸ்தவ” (Chrisrian)  என்ற பதத்தை போட்டால் யாவும் பரிசுத்தம் ஆகிவிடும் என நினைத்துவிடக்கூடாது. இந்த பதத்தை இன்று சுதந்திரமாக தங்கள் அபிலாசைகளை நிறைவேற்ற கிறிஸ்துவை அறியாதவரும், அவரை அறிய வேண்டிய பிரகாரம் அறியாதவரும் பாவித்து வருகின்றார்கள். ஒரு இணைய தளத்தை (Website) கிறிஸ்தவ தளம் (Christian Website) என்று தலையங்கம் இடுவதால் அது கிறிஸ்தவத்திற்குரியதாக மாறிவிடுவதில்லை. அந்த தளத்தின் உள்ளடக்கம் யாவும், பரிசுத்தமும் தேவனுக்கு ரியதுமாக இருக்க வேண்டும். ஒருவருக்கு கிறிஸ்தவ பெயரை அல்லது வேதாகமத்திலிருந்து ஒரு பெயரை வழங்குவதால் அவர் கிறிஸ்தவனாகவோ அல்லது பரிசுத்தவானாகவோ மாறிவிடுவதில்லை. இப்படியாக “கிறிஸ்தவ”  இசை (Christian Music), “கிறிஸ்தவ”  நடனம் (Christian Dance) “கிறிஸ்தவ”  ஜோடிப்பொருத்தம் (Christian Dating) “கிறிஸ்தவ”  வியாபாரம் (Christian Business), “கிறிஸ்தவ” கொண்டாட்டம் (Christian Party), “கிறிஸ்தவ”  பாடசாலை (Christian School) என்று பட்டியல் போகின்றது. இவை யாவும் பரிசுத்தமும் தேவனுடைய நாமத்திற்கு துதி கனம் மகிமையைக் கொண்டுவந்தால், அவை கிறிஸ்துவை உடையதாகும் - தேவன் தாமே இவை யாவையும் குறித்த காலத்திலே நியாயத்திலே நிறுத்துவார் அப்போது எது கோதுமை என்றும், எது கோதுமைக்குள் விளைந்த களைகள் (Weeds) என்றும் வெளிச்சமாகும்.

அதேபோல கிறிஸ்மஸ் கொண்டாட்டமும், கிறிஸ்துவிற்குரியதாக இருக்க வேண்டும் என்றால், அது பரிசுத்தமானதும், தேவனுக்கு கனத்தையும்;, மகிமையையும், துதியையும் செலுத்துவதாய் அமைய வேண்டும். எங்களுக்கு கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை எங்கள் துர்குணத்திற்கு மூடலாக பாவிக்க கூடாது. கிறிஸ்தவன் என்ற போர்வையில் எங்கள் இச்சைகளை நிறைவேற்றக் கூடாது.

கிறிஸ்து உலகில் பிறந்தார் என்பதை குறித்து யாரும் விவாதம் செய்வதில்லை. இதனை உறுதிப்படுத்த சரித்திரத்தை பற்றி பேசும்போது கிறிஸ்துவிற்கு முன் (கி.மு) அல்லது கிறிஸ்துவிற்கு பின் (கி.பி) என்று யாவரும் குறிப்பிடுவார்கள். பரவலாக மார்கழி 25ம் திகதியை இயேசுவின் பிறந்த தினம் என்று குறித்திருக்கின்றார்கள், சிலர் தை மாதம் முதற் கிழமையில் இந்த நாளை நியமித்து விசேஷிக்கினறார்கள்.

தேவ மைந்தன் இவ்வுலகில் இரட்சகராக வருவார் என உரைத்த போது, இஸ்ரவேலர் தங்களுடைய ராஜ்யத்தை இப்பூமியிலே இவர் நிலைப்படுத்துவார் என்பதைக் கருத்திற்கொண்டு பலரும் இந்த இரட்சகர்  பிரதியட்சமான ஒரு முக்கிய ஸ்தலத்தில் தோன்றுவார் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் இயேசுவோ, தாழ்மைக்கோலம் எடுத்து, ஒரு சதாரணமான குடும்பத்தில் பிறந்தார். அந்நாட்களிலே குடிமதிப்பு பதிவிற்காக இயேசுவின் தாயாகிய மரியாளும், யோசேப்பும்; கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகே முக்கு செல்ல வேண்டியிருந்தது. அவ்விட த்திலே சத்திரத்தில் (Lodge) பிரசவத்திற்கு இடமில்லாதிருந்ததால் இயேசு ஒரு மாட்டு தொழுவத்தில் (முன்னணையில்) பிறந்தார். (லூக்கா 2:7) இயேசு ராஜாதி ராஜா என்று முன்னுரைக்கப்பட்டபடியால், இவரை கொலை செய்ய எரோது என்னும் ராஜா திட்டமிட்டிருந்தான். இதனால் இயேசுவின் தாயாகிய மரியாளும், யோசேப்பும் இயேசுவை ஏரோதிற்கு தெரியாமல் எகிப்த்திற்கு கொண்டு சென்றிருந்தார்கள். (மத்தேயு 2:13-15) ஆகவே இயேசு குறிப்பாக இந்த நாளில் இந்த நேரத்தில் பிறந்தார் என்று யாரும் எழுதிவைத்ததில்லை. இதனால் சிலர் இந்நாளை தை மாத தொடக்கத்தில் இயேசுவின் பிறப்பை விசேஷித்திருக்கின்றார்கள்.

இயேசுவின் பிறப்பின் கருப்பொருள் அவர் பிறந்த நாளையோ, இடத்தையோ, அந்நாளை எப்படி கொண்டாட வேண்டும் என்கிற வாதத்திற்குரியதல்ல. மாறாக அவர் ஏன் பிறந்தார் என்பதை உணர்ந்து அந் நோக்கத்தை எங்கள் வாழ்க்கையில் நிறைவேற்ற வேண்டும்.

ஆகவே கிறிஸ்மஸ் என்பது, நத்தார் தாத்தாவை பற்றியதும், கிறிஸ்மஸ் மரத்தை வைத்து சோடித்து அதின் கீழ் பரிசுப் பொருட்களை வைப்பதற்காக அல்ல. கருப்பொருளை மறந்து இதை மட்டும் செய்தால், அது சொற்ப மனத்திருப்தியையும் அதிக பணச் செலவையும் உண்டு பண்ணும்.

இன்னும் சிலர் இந்த நாட்களில் அதிகபடியான தான தர்மங்களைச் செய்து ஏழைகளையும் ஒடுக்கப்ட்டவர்களையும் தாங்குவார்கள். இது நன்மையான காரியம். ஆனால் தேவனுடைய பிறப்பின் நோக்கம் எங்கள் ஒவ்வொருவரையும் குறித்ததாகும். அவர் இவ்வுலகிற்கு வந்த நோக் கத்தை உணர்ந்து. அவரின் வழியில் செல்ல அவர் சித்தம் செய்ய எங்களை அர்ப்பணிக்க வேண்டும். வெளிப்படையான தான தர்மங்கள், நற்கிரியைகளினால் மனிதன் பரிசுத்தமாக்கப்படுவதில்லை. ஆகவே இயேசுவிடம் எங்கள் வாழ்வை ஒப்புக் கொடுத்து, தேவ நியமங்களின்படி எல்லா நற்கிரிகைகள், தானதர்மங்களை அவருக்குள் செய்ய வேண்டும்.

இரட்சகராகிய இயேசுக் கிறிஸ்து இஸ்ரவேலருக்காக மாத்திரம் பிறந்தார் என்று சிலர் எண்ணம் கொள்கின்றார்கள். உலகதிற்கு ஒரு மீட்பரை அனுப்புவேன் என்று தேவன் தாமே முதன் முறையாக ஆதாம் ஏவளுக்கே கூறினார். அதில் குறிப்பாக ஒரு ஜாதியையோ, நாட்டையோ குறித்து; சொல்லவில்லை. காலங்கள் கடந்து சென்றபின் தன்னுடைய சித்தத்தை நிறைவேற்ற தனக்கென்று ஒரு சந்ததியை அவர் தெரிந்து கொண்டார். அந்த சந்ததி மட்டுமல்ல, யாவரும் மீட்படைய வேண்டு;ம் என்பது தேவனுடைய திட்டமாகும்.

தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுக்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார் (யோவான் 3:16) என்று இயேசு கூறினார். ஆகவே உண்மையான கிறிஸ்மஸின் நோக்கத்தை உணர்ந்து தேவனுக்கு மகிமையை செலுத்தி, பரிசுத்தத்தோடு இயேசு இவ்வுலகில் பிறந்த நாளை சிறப்பிப்போம்.