தியானம் (ஆவணி 23, 2026)
அழைத்த தேவன் உண்மையுள்ளவர்
ஏசாயா 43:1
பயப்படாதே உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்.
ஒரு தேசத்திலே வாழ்ந்து பல குடும்பங்கள், அந்த தேசத்தில் ஏற்பட்ட யுத்தத்தினால் பாதிக்கப்பட்டார்கள். தேசத்திலே பொருளாதரம் வீழ்ச்சி ஏற்பட்டதால், வேலையில்லா பிரச்சகைகள் அதிகமாயிற்று. வெளியே சென்று வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. சிலர் தங்கள் சொந்த வீடுகளைவிட்டு இடம் பெயர்ந்து செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள். வாழ்விலே பல நெருக்கங்களும், அசௌகரியங்களும் ஏற்பட்டிருந்தது. அவர்கள் கர் த்தரை அறியாதவர்களாக இருந்த போதும், அவர்களில் சிலர், வாழ்க் கையைக் குறித்து முறுமுறுப்பதைப் பார்க்கிலும், அந்த தேசத்தின் நிலைமைக்கு தங்களை பயிற்சிவித்துக் கொண்டார்கள். அவர்கள் ஏதோ ஒரு விதத்திலே போஷிக்கப்பட்டார் கள். இருக்கின்ற இடங்களிலே, பிள்ளைகளுக்கு கல்வி கற்றுக் கொடுத்தார்கள். அவர்கள் சூழ்நிலைகளை எப்படி தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதில் கருத்துள்ளவர்களாக இருந்தார்கள். கிறிஸ்துவுக்குள் அருமையான சகோதர சகோதரிகளே, இந்த உலகத்திலுள்ளவர்கள் கடினமான சூழ்நிலைகளிலே முறுமுறுக்காமல், காலத்தை ஆதயப்படுத்திக் கொள்கின்றார்கள். காரியம் அப்படியானால், கடினமான சூழ்நிலைகளில், தேவ பிள்ளைகள் எவ்வளவு அதிகமாக தெய்வீக பண்புகளை வெளிக்காட்ட வேண்டும்? அக்காலத்திலே, தேவ ஜனங்கள் வனாந்திர வழியாக வாக்களிக்கப்பட்ட தேசத்திற்கு சென்று கொண்டிருக்கும் போது, தேவனாகிய கர்த்தர் அவர்களோடு இருந்து, அவர்களுடைய தேவைகளை சந்தித்து வந்தார். அவரே அவர்களுக்கு பாதுகாப்பாக இருந்தார். எனினும், அநேகர் அவரை பரீட்சை பார்த்தார்கள். முறுமுறுக்கின்றவர்களாக மாறிப்போனார்கள். அதனால், அவர்களில் அநேகரின் யாத்திரை வனாந்திரத்தோடு முடிவடைந்து விட்டது. நாங்கள் அப்பயிராமல், எல்லா சமயங்களிலும் கர்த்தருக்குள் மனமகிழ்ச்சியாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் எங்களை விசாரிக்கின்றவர் வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமையுள்ள தேவன். அவர் வார்த்தையில் உண்மையுள்ளவர். அவர் சொன்னத்தை செய்து முடிப்பவர். 'நீ தண்ணீர்களைக் கடக்கும் போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது.' என்று தம்முடையவர்களுக்கு வாக்குரைத்திருக்கின்றார்.
ஜெபம்:
என்னை பெயர் சொல்லி அழைத்த, சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, எந்த சூழ்நிலையிலும் நீர் என்னோடிருக்கின்றீர் என்பதை உணர்ந்து செயற்பட கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - பிலிப்பியர் 4:11