தியானம் (ஆவணி 02, 2026)
பிரதான ஆசாரியரை நோக்கி பாருங்கள்
எபிரெயர் 4:15
எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.
இந்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்து, பிலிப்பிருக்கு தேவ ஊழியராகிய பவுல் எழுதின நிருபத்தின் கருப்பொருளை மையமான வைத்து, எங்கள் வாழ்க்கையை தேவ வார்த்தையின் வெளிச்சத்தில் தியானித்து வருகின்றோம். இரண்டாம் அதிகாரத் தின் ஆரம்பத்திலே விசுவாசிகள் ஏக சிந்தையள்ளவர்களாக இருக்க வேண்டும் என்றும், கிறிஸ்துவின் சிந்தையை தரித்துக் கொள்ள வேண்டும் என்பதையும் குறிப்பிட்டிருப்பதை காண லாம். 3ம் அதிகாரத்திலே இலக்கை நோக்கிய சிந்தை குறித்து வலியுறுத்தி கூறினார். மறுபடியும் 4ம் அதிகார த்திலே, கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்காக பிரயாசப்பட்டவர்கள் மத்தியிலே ஒரே சிந்தை இருக்க வேண்டும் என்று ஆலோசனை கூறியிரு க்கின்றார். கிறிஸ்துவின் சிந்தையைவிட்டு, விசுவாசிகள் வேறு சிந்தையாக இருக்கும் போது, அங்கே வாக்குவாதங்களும், கலகங்களும், குழப்பங்களும் உண்டாகும். அப்படியாகும்போது, விசுவாசிகள் சந்தோஷமாக இருக்க முடியாது. உங்களை விசாரிக்கின்ற தேவன் எல்லாவற்றையும் அறிந்திருக்கின்றார். உங்களுக்காக தன்னை தான் பலியாக ஒப்புக் கொடுத்தவர் உங்கள் நிலைமையை அறியாதிரு ப்பாரோ? எனவே உங்கள் சிந்தைகளை கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக காத்துக் கொள்ளுங்கள். உங்கள் பெலவீன நேரங்களிலே அவர் பெலன் தந்து நடத்துகின்றவராயிருக்கின்றார். 'வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக்கடவோம். நம்மு டைய பலவீன ங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார். ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.' உங்களை அழுத்தும் பாரங்களையும், உங்களைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிப்போடுங்கள். விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை கிறிஸ்துவை நோக்கிப் பாருங்கள். அவருடைய சிந்தையை தரித்தவர்களாக, உங்களுக்கு நியமித் திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடுங்கள்.
ஜெபம்:
என் சிந்தையை முன்அறிந்த தேவனே, வாதுக்கும் வழக்குக்கும் உரிய காரியங்களை என்னைவிட்டு அகற்றிவிடும்படி, எனக்கு பிரகாசமுள்ள மனக் கண்களை தந்து என்னை உம்முடைய வழியிலே நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - பிலிப்பியர் 4:8