புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 11, 2026)

பொல்லாத வேலையாட்கள்

மத்தேயு 7:21

பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த் தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.


என்னோடு சேர்க்காதவன் சிதறடிக்கின்றான் என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். ஆண்டவர் இயேசுவோடு சேர்க்கும் உண் மையும் உத்தமமுமான வேலையாட்கள் இருக்கின்றார்கள். அதே வேளையிலே, ஆண்டவர் இயேசுவைவிட்டு பிரித்து, தங்களோடு தக்கவைக்க முயற்சி செய்யும் பொல்லாத வேலையாட்களும் இருக்கின்றார்கள். கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள். அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக் கொண்டு உங்களிடத்தில் வருவார்கள். உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள். அவர்களு டைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள் என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். இவர்கள் தங்கள் மாம்ச இச்சையை நிறைவேற்றும்படி மந்தைகளை பட்சிக்கின்ற ஓநாய்களுக்கு ஒத்திருக்கின்றார்கள். பரலோகத்திலே உங்கள் பொக்கிஷங்களை சேர்த்து வையுங்கள் என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். ஆனால், இவர்களோ, இந்த பூவுலகத்திலே பொக்கிஷங்களை தங்களுக்கென்று சேர்த்து வைக்கின்றவர்களாக காணப்படுவார்கள். ஜீவனுக்கு போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கின்றது. எனவே இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள் என்று ஆண்டவர் இயேசு கூறியிருக்கின்றார். ஆனால், பொல்லாத வேலையாட்களோ, கேட்டுக்கு போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது: அதின் வழியாய் விசுவாசிகளை பிரவேசிக்கிக்க பண்ணுகின்றார்கள். நீங்கள் இந்த பிரபஞ்சத்திற்கு ஒத்தவேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கமாக உங்கள் மனம் புதிதாகிறதிலே மறுரூபமாகுங்கள் என்று வேதம் கூறியிருக்க, இவர்கள் ஜனங்களை கவரும்படிக்கு உலகத்தின் நடை, உடை, பாவனைளை சபைக்குள் கொண்டு வருகின்றார்கள். பிதாவாகிய தேவனின் சித்தத்தை செய்யாமல், தங்கள் சொந்த கனவுகளை பின்பற்றும்படி பிரசங்கிக்கின்றார்கள். பிதாவின் சித்தத்தை செய்யாதவர்களை நோக்கி: நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன் என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார்.

ஜெபம்:

பரலோக பிதாவே, இந்த பிரபஞ்சத்தின்மேல் ஆசை வைத்து நான் பின்னிட்டு திரும்பாமல், உம்முடைய திருச்சித்தத்தை என் வாழ்விலே நிறைவேற்றி முடிக்க எனக்கு பெலன் தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 37:1-2