புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 14, 2026)

கிறிஸ்துவை மாதிரியாக கொண்டிருங்கள்

1 பேதுரு 2:19

ஒருவன் அநியாயமாய்ப் பாடுபட்டு உபத்திரவங்களைப் பொறுமையாய்ச் சகித்தால் அதுவே பிரீதியாயிருக்கும்.


பிலிப்பியருக்கு எழுதின நிரூபத்தில், இரண்டாம் அதிகாரத்திலுள்ள கடைசிப் பகுதியை நாம் தியானித்து வருகின்றோம். அந்த அதிகாரத்தின் ஆர ம்பத்திலே, ஐக்கியம், ஏக சிந்தை, ஏக அன்பு, இசைந்த ஆத்துமாக்களாக இருங்கள் என்று தேவ ஊழியராகிய பவுல் குறிப்பிட்டிருக்கி ன்றதை நாம் தியானித்தோம். ஏன் அப்படி இருக்க வேண்டும்? இந்த உலகத்திலுள்ளவர்கள் அப்படியாக ஏக சிந்தை, ஏகஅன்புள்ளவர்களாக இருப்பதினாலோ? இல்லை. நீங்கள் கோணலும் மாறுபாடுமான உலகத் திலே வாழ்ந்து வருகின்றோம். அப் படியானால், ஏன் நாம் ஐக்கியத் தோடு, ஏக சிந்தை, ஏக அன்பு, இசைந்த ஆத்துமாக்களாக இருக்க வேண்டும். நாம் கிறிஸ்துவின் நாளிலே, தேவ சித்தத்தை நிறைவேற்றினவர் களாகவும், மாசற்ற பிள்ளைகளாகவும் காணப்பட வேண்டும். அதன் பொருட்டு, கிறிஸ்துவின் சிந்தையை தரிக்க வேண்டும் என்பதை குறிப் பிட்டிருக்கின்றார். தேவ ஊழியராகிய பவுலின் நாட்களுக்கு முன்பாக வாழ்ந்த பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களை குறித்து கூறாமலும்;, பிரதான சீஷனாகிய பேதுருவை பற்றிக் கூறாமலும், கிறிஸ்துவை மாதிரியாக வைத்து, அவருடைய பாதச்சுவடுளை பின்பற்றும்படியாக கூறியிருக்கின்றார். இன்று சிலர், இந்த உலகத்திலே பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்து கர்த்தருக்குள் நித்திரையடைந்திருக்கும் பரிசுத்தவான்களை தங்களுக்கு மத்தியஸ்தராக ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். அப்படியாக ஏற்படுத்தினாலும், அந்த பரிசுத்தவான்கள் செய்தவைகளை பின்பற்றுவதில்லை. அவர்கள் எப்படி தங்கள் வாழ்க்கையை வாழ்ந்தார்கள்? அவர்கள் கிறிஸ்துவின் சிந்தையை தரித்துக் கொண்டார்கள். ஆனால் இன்று சபைகளிலே, சிலர் நான் பவுலை சேர்ந்தவனும், நான் பேதுருவை சேர்ந்தவனென்றும் தங்களுக்குள்ளே பிரிவினைகளை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். நாமோ, அப்படியிராமல், கிறிஸ்துவை மாதிரியாக கொண்டு வாழ வேண்டும். குழப்பத்தின் நாட்களிலே, பெற்றோர் எதை செய்து காண்பிக்கின்றார்களோ, பொதுவாக அதையே பிள்ளைகள் தங்கள் குழப்பத்தின் நாட்களிலே பின்பற்றுவார்கள். எனவே, உங்கள் வாழ்க்கையை ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள். விசுவாசிகளின் வாழ்க்கையானது தேவனுக்கு உகந்த காணிக்கiயாக காணப்பட வேண்டும். கடந்த கால தவறுகளிலே நிலைநிற்காமல், கிறிஸ்துவின் சுபாவங்கள் நாளுக்கு நாள் பெருகும்படி முன்னேறிச் செல்லுங்கள். சத்திய ஆவியானவர் உதவி செய்வார்.

ஜெபம்:

நித்திய வாழ்விற்கென்று என்னை அழைத்த தேவனே, நான் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்த்து உமக்கு முன்பாக பிரியமுள்ள ஆத்துமாவாக காணப்பட என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 12:16