தியானம் (பங்குனி 31, 2026)
விசுவாசத்தின் நற்கிரியைகள்
எபிரெயர் 12:1
விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துதாமே, எப்படியாக தம்முடைய வாழ் க்கையின் நற்கிரியைகள் வழியாக பிதாவாகிய தேவனின் சித்தத்தை தம் வாழ்விலே சம்பூரணமாக நிறைவேற்றி முடித்தார் என்பதையும், நாமும் தம்மைப் போல மறுரூபமாகும்படிக்கு புதிதும் ஜீவனுமான வழியயை ஏற்படுத்தியிருக்கின்றார் என்பதைக் குறித்தும் நாம் கடந்த நாளிலே தியானித்தோம். எனவே, எங்களுடைய உள்ளான மனிதனானது நாளுக்கு நாள் புதிதாக்கப்பட வேண்டும். அந்த புதிதாக்குதல், எங்கள் வெளியரங்கமான கனிகளால் சாட்சிபகரப்பட வேண்டும். எங்களுக்கு முன்னோடிகளாக இருந்த, பழைய ஏற்பாட்டு முற்பிதாக்கள், நியாயாதிபதிகள், தீர்க்கதரிகள் மற்றும் ராஜாக்களும், புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்களும், எப்படியான விசுவாசத்தின் கிரியைகளால் நற்சாட்சி பெற்றார்கள் என்று எபிரெயர் 11ம் அதிகாரத்திலே நாம் வாசிக்கலாம். 'விசுவாசத்தினாலே அவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள், நீதியை நடப்பித்தார்கள், வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள், சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள், அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள், பட்டயக்கருக்குக்குத் தப்பினார்கள், பலவீனத்தில் பலன்கொண்டார்கள், யுத்தத்தில் வல்லவர்களானார்கள், அந்நியருடைய சேனைகளை முறியடித்தார்கள். ஸ்திரீகள் சாகக்கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடெழுந்திருக்கப் பெற்றார்கள்; வேறுசிலர் மேன்மையான உயிர்த்தெழுதலை அடையும்படிக்கு, விடுதலைபெறச் சம்மதியாமல், வாதிக்கப்பட்டார்கள். வேறு சிலர் நிந்தைகளையும் அடிகளையும் கட்டுகளையும் காவலையும் அநுபவித்தார்கள். கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சைபார் க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறி யாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக் கொண்டு திரிந்து, குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அநுபவித்தார்கள்;. உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை; அவர்கள் வனாந்தரங்களிலேயும் மலைகளிலேயும் குகைகளிலேயும் பூமியின் வெடிப்புகளிலேயும் சிதறுண்டு அலைந்தார்கள்.' பிரியமானவர்களே, பரிசுத்த வாரத்தை நினைகூரும் இந்த நாட்களிலே, அந்த சாட்சிகளின் வாழ்க்கை முறையைத் தியானித்து, நாமும் விசுவாசத்தின் கிரியைகளை வளர்ந்து பெருகுவோமாக.
ஜெபம்:
பாவ சாபத்திலிருந்து என்னை விடுதலையாக்கிய தேவனே, நான் உம்மிடமிருந்து பெற்றுக் கொண்ட சமாதானத்தை காத்துக் கொள்ளும்படிக்கு பிரகாசமுள்ள மனக் கண்களை தந்து என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - எபேசியர் 2:10