புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 27, 2026)

நிச்சயமாக பலன் உண்டு!

வெளிப்படுத்தல் 22:12

இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடே கூட வருகிறது.


அந்நாட்களிலே, சீஷர்கள் பெருகினபோது, பந்தி விசாரணைக்காக ஏழு பேர் நியமிக்கப்பட்டார்கள். அவர்களில் ஸ்தேவான் ஒருவனாக இருந்தான். அவன் தன் இளயதிலேயே இயேசு கிறிஸ்துவின் இரத்த சாட்சியாக கல்லெறிந்து கொல்லப்பட்டான். இந்த சம்பவத்தை பரிசுத்த வேதாகமத்திலே, அப்போஸ்தல நடபடிகள் 6ம் 7ம் அதிகாரங்களிலே வாசிக்கலாம். இன்று இப்படியான சம்பவமொன்று ஒரு விசுவாசிக்கு உண்டா னால், அவன் உற்றார் உறவினர், அய லவர்கள், ஊரார்கள் என்ன கூறுவார்கள்? தேவன், தேவன் என்று இருந் தானே, சின்ன வயதிலேயே அநியாயமாக மரித்துப் போனானே என்று கூறுவார்கள் அல்லவா? மரணம் என்பது துக்கத்தையும் துயரத்தையும் உண்டு பண்ணும். ஆனால், காலத்திற்கு முன்னாக கொல்லப்படுவது, ஒருவேளை உயிரோடிருக்கின்ற உறவினருக்கு அவமானத்தை உண்டு பண்ணும். ஸ்தேவான் காலத்திற்கு முன் மரித்ததால், அவனுடைய பலன் குறைந்து போயிற்றோ? அல்லது அவன் அடைய வேண்டிய ஆசீர்வாதத்தை அடைய மாட்டானோ? தேவனாகிய கர்த்தர் சிந்தப்பட்ட குற்றமற்ற இரத்தத்தைக் குறித்து விசாரியாமல் இருப்பாரோ? இரண்டு காரியங்களை அறிந்து கொள்ள வேண்டும். முதலாவது: 'என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக் கொள்ளுவான்;' என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். இரண்டாவது: 'ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறத ற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும், தமக்கு விரோ தமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான்.' எனவே, கர்த்தரால் உண்டாகும் பலன் நிச்சயம். கொஞ்சக் காலம் பாடநுபவகின்ற நீங்கள், தேவனால் உண்டாகும் பலனை நிச்சயமாக அடைந்து கொள்வீர்கள்.

ஜெபம்:

வாக்கு மாறாத தேவனே, துன்பங்கள் துயரங்கள் மத்தியிலும் நான் சோர்ந்து போகாமல், நற்கிரியைகளை நல்மனதுடன் செய்யும்படிக்கு உம் கிருபையினாலே பெலப்படுத்தி நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மாற்கு 10:30