புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 13, 2026)

ஆராய்ந்து உதவி செய்யுங்கள்?

மத்தேயு 5:45

நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த மனிதனொருவன் பல ஆண்டுகளாக ஊரிலுள்ள ஏழை எளியவர்களுக்கு தானதர்மங்களை செய்து வந்தான். ஊரில் இருந்த சனமூக நிலையத்திலுள்ளவர்கள், வருடாந்தம், அவனு க்கு நிதி திரட்ட உதவி செய்வதுண்டு. குறிப்பிட்ட வருடமொன்றிலே அவன், அங்கு சென்றிருந்த போது, அங்கு வந்திருந்த நிர்வாக உறு ப்பினர்களில் ஒருவன், அந்த மனித னைப் பார்த்து 'பாத்திரம் அறிந்து பிச்சையிடு' என்று கூறி, நிதி திரட்டலில் பங்கு பெற்றாமல் சென்று விட்டான். இன்று இப்படியாக சில விசுவாசிகளும் அவ்வப்போது கூறிக் கொள்கின்றார்கள். பாத்திரம் அறிந்து பிச்சையிடு என்பதன் பொருள் என்ன? 'இங்கு பாத்திரம் என்ற சொல் அவனது தகுதியை, நிலையைக் குறிக்கிறது. பிச்சை பெறுபவர் எத்தகையவன்? நல்லவனா? கெட்டவனா? வீண் விரயஞ்செய்பவனா? உண்மையிலேயே உடல் இய லாமையால் பிச்சை எடுக்கிறாரா? அல்லது பிச்சை பெறுபவர் பிச்சை எடுப்பதைத் தொழிலாகக் கொண்டுள்ளாரா?' என்று ஆராய்ந்து பார்த்தே பிச்சையிட வேண்டும் என்று இந்த பழமொழியை குறித்து விளக்கம் கொடுத்திருக்கின்றார்கள். ஆதலால், இனி தேவபிள்ளைகளாகிய நீங்கள், ஒவ்வொரு பிச்சைக் காரணைக் காணும் போது, முதல் போய் நான் இவன் உண்மையுள்ள, இவன் சம்பூரணமான பிச்சசைக் காரணா என்று ஆராய்ந்து அறிந்து கொண்ட பின் அவனுக்கு பிச்சை கொடுப்பேன் என்று கூற முடியுமா? சகலத்தையும் நிதானித்தறியும் வழிநடத்தும் ஆவியானவரை ஈவாக பெற்றுக் கொண்டு அருமையான சகோ தர சகோதரிகளே, உதவி செய்யாமல் இருப்பதற்கு காரணங்களை தேடுவதில் அதிக நேரத்தை செலவிடாமல், உண்மை மனதுடன் உதவி செய்ய நாடுங்கள். ஒருவேளை ஒருவன் அநியாயக்காரனாக இருந்து, உங்களை ஏமாற்ற முயற்சி செய்தால், ஆவியானவர் அதை உங்க ளுக்கு உணர்த்துவார். தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு எத்தனை நாட் களை இந்த பூமியிலே ஈவாக கொடுத்திருக்கின்றார்? எத்தனை நாட் களை நீங்கள் பிரயோஜனப் படுத்தியிருக்கின்றீர்கள்? எத்தனை நாட் களை விரயப்படுத்தியிருக்கின்றீர்கள்? உங்களுக்கு கொடுக்கப்பட்ட எல்லா பணத்தையும் நீங்கள் விரயப்படுத்தாமல் செலவு செய்திருக்கி ன்றீர்களா? தேவனாகிய கர்த்தர், பாத்திரம் அறிந்து பிச்சையிட்டால், நானும் நீங்களும் எங்கு இருப்போம் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

ஜெபம்:

தகுதியில்லா அடிமை என்னை அழைத்த தேவனே, நீர் என்மேல் வைத்த தயவு பெரியது. உம்முடைய இரக்கங்களினாலே நான் உயிர் பிழைத்திருக்கின்றேன் என்பதை உணரும் உள்ளத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நீதி 3:28