தியானம் (தை 17, 2026)
எதைக் குறித்து மேன்மை பாராட்டுவேன்?
கலாத்தியர் 6:14
நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங் குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக;
ஒரு விசுவாசியானவன் எப்படியாக இந்த உலகத்திலே வாழ வேண்டும் என்பதை குறித்து நம்முடைய ஆண்டவராகிய இயேசு தாமே வாழ்ந்து காட்டினார். எப்படியாக இயேசுவானவர் தேவகிருபையிலும், அதிகமதிகமாய் விருத்தியடைந்தார் என்பதைக் குறித்து கடந்து நாட்களிலே தியானித்தோம். ஆண்டவர் இயேசுதாமே, வெளியரங்கமாக தம்முடைய திருப்பணியை ஆரம்பிப்பதற்கு முன்குறித்த காலம் வந்தபோது, அவர் எல்லா நீதியும் நிறைவேற்ற வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்தார். அவரை பிசாசானவன் சோதிக்கும் போது: 'பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின் மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து: நீர் சாஷ;டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்.' காரியம் அப்படியாக இருந்தால், இந்த உலகத்தின் ராஜ்யங்களையும் அதன் மகிமையையும் வைத்து தேவ ஆசீர்வாதங்களை கணக்கிட முடியுமோ? ஆனால், இன்று சில விசுவா சிகள் கூட உலகத்தால் வரும் மகிமையை மேன்மை பாரட்டுகின் றார் கள். யோசேப்பு, தானியேல், எஸ்தர், நெகேமியா போன்ற மனிதர்களை தேவன்தாமே அந்நிய தேசத்திலே உயர்த்தினார். அவர்கள் தங்கள் உயர்வைக் குறித்து மேன்மைபாராட்டாமல், தேவன் எதற்காக தங்களை ஏற்டுத்தினாரோ, அந்தக் காரியம் நிறைவேறும்படி, தேவனுடைய வார்த் தைக்கு தங்களை ஒப்புக் கொடுத்தார்கள். அவர்கள் வழியாக தேவ சித்தம் நிறைவேறியது. தங்களுக்குண்டானவைகளை தேவ ராஜ்யத்தின் மேன்மைகாக செலவு செய்தார்கள். ஆனால், இன்று விசுவாசிகள் என்று அழைத்துக் கொள்ளும் சிலர், தங்கள் கல்வி, வேலை, ஆஸ் திகள், அந்தஸ்துக்களை குறித்து மேன்மைபாராட்டிக் கொள்கின்றார்கள். தங்கள் வாழ்க்கையில், தேவனுக்கென்று ஒரு பகுதியையும், தங்களு க்கென்று பெரும் பகுதியையும் வைத்துக் கொள்கின்றார்கள். பிரியமான வர்களே, நீங்கள் எந்த நிலையிலே இருந்தாலும், உங்கள் மேன்மை பாராட்டுதல் தேவனுக்கேற்ற கிரியைகளினாலே வெளிப்படுத்தப்பட வேண்டும். விசுவாசியானவன், ஆண்டவர் இயேசுவின் சிலுவையையும், அவரால் உண்டான கிருபையையும் தன்னுடைய கிரியைகள் வழியாக காண்பிக்க வேண்டும்.
ஜெபம்:
மேன்மையான ராஜ்யத்திற்காக என்னை அழைத்த தேவனே, உம்மோடு வாழ்வது எத்தனை பாக்கியம் என்பதை உணர்ந்து கொள்ளும் இருதயத்தைத் தந்து உம்முடைய வழியிலே என்னை நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - 2 கொரி 12:9-10