புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 14, 2025)

'காரணமின்று பகைக்கின்றவர்கள்'

1 பேதுரு 3:17

தீமைசெய்து பாடநுபவிப்பதிலும், தேவனுக்குச் சித்தமானால், நன்மைசெய்து பாடநுபவிப்பதே மேன்மையாயிருக்கும்.


'என் சத்துருக்கள் வாழ்ந்து பலத்திருக்கினறார்கள். முகாந்திரமில்லாமல் என்னைப் பகைகின்றவர்கள் பெருகியிருக்கின்றார்கள்' என்று தேவ பக்தனாகிய தாவீது ராஜா, தன்னுடைய இக்கட்டான நிலைமையை, தான் நம்பியிருக்கும் தேவனாகிய கர்த்தருக்கு வெளிப்படுத்தும்படி, அதை குறித்து சங்கீதமாக பாடியிருக்கின்றார். நம்முடைய கர்த்தரும் இர ட்சகருமாகிய இயேசுவுக்கும் அப்படியே செய்தார்கள். அவர் நன்மை செய்கின்றவராய் சுற்றித் திருந்தார். அவர் மனித குலத்தை பாவ சாபத்த லிருந்து மீட்கும்படி பரலோகத்திலிருந்து தம்மைத் தாழ்த்தி, இந்த உல கத்திற்கு வந்தார். ஆனால், அக்காலாத்திலிருந்த அதிகாரிகளோ, முகாந்திரமில்லாமல் அவரை பகைத்தார்கள். தங்கள் அநியாயத்தை நியாயமாக்கும்படிக்கு பொய்சாட்சிகளை பிணைத்தார்கள். அன்று மட்டுமல்ல, இன்றும் அநேகர் காரணமின்றி குற்றம் சாட்டப்படுகின்றார்கள். நன்மைக்கு கைமாறாக தீமையை பிணைக்கின்றார்கள். இத்தகைய செயல்கள் விசுவாசிகளுக்கு மாத்திரமல்ல, இந்த உலகத்திலே வாழும் அவிவாசிகளுக்கும் நடைபெற்று வருகின்றது. ஆனால், அவிசுவாசிகள் காரணமின்றி குற்றம் சாட்டப்படும் போது, அவர்களுடைய பதிலடிகள் வேறுபட்டவைகளாக இருக்கும். ஒருவேளை அவர்களுடைய பதிலடிகள், இந்த உலக நீதிக்கு ஏற்புடையதாக இருக்கலாம். அவைகள் மனிதர்கள் மத்தியிலே அங்கீகாரம் பெற்றவைகளாக இருக்கலாம். ஆனால், ஆண்டவர் இயேசுவின் சீஷர்கள் என்று அழைக்கப்படுகி ன்றவர்கள் அவ்விதமாக உலகத்தாரைப் போல பதிலடிகளை கொடுக்க முடியாது. எஜமானனாவன் எப்படியோ அவருடைய சீஷர்கள் அப்படியே என்ற பிரகாரம், நாம் இந்த உலகத்திற்கு சீஷர்கள் அல்ல, மாறாக நாம் நம்முடைய எஜமானானாகிய ஆண்டவர் இயேசுவின் சீஷர்கள். பாடுகள் உபத்தரவங்கள் மத்தியிலும் தேவ நீதியை நிறை வேற்றுகின்றவர்களாக வாழ வேண்டும். அந்த இடுக்கமான சூழ்நிலை மிகவும் கடினமானது. ஆனால், அப்படிப்பட்ட சூழ்நிலைகளை ஜெயம் கொள்ளும்படிக்கு தேவ ஆவியானவர்தாமே நமக்கு துணை நிற்கின்றார். அவரே நமக்கு பெலன் கொடுகின்றார். சத்துவமில்லாதவனுக்கு சத்துவத்தை கொடுக்கின்றார். ஆதலால், நீங்கள் இடுக்கமான வாசலைவிட்டு விலகாமல் அதனூடாகச் செல்லுங்கள்.

ஜெபம்:

பரலோகத்திற்கு செல்லும் வழியை எனக்கு காட்டிய தேவனே, அந்த வழியிலே நான் பயணம் செய்யும்படிக்கு, எனக்கு வேண்டிய பெலனை தந்து என்னை உம்முடைய வழியிலே நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 6:33