தியானம் (ஐப்பசி 30, 2025)
எதை குறித்து மேன்மை பாராட்டுவேன்
லூக்கா 18:14
ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.
நாம் தேவனுடைய சமுகத்திற்கு செல்லும் போது, மனத்தாழ்மையோடும், கீழ்படிவோடும் செல்ல வேண்டும். தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கின்றார். ஏனெனில் அது கிறிஸ்துவின் சிந்தைக்குரியதல்ல. மாறாக, பிசாசானவனே பெருமையுள்ளவனாக இரு க்கின்றான். தேவ சமுகத்திலே நாம் கிறிஸ்துவின் சிலுவையைக் குறி த்து மேன்மை பாராட்ட முடியும். தேவன் நம்மேல் பொழியும் கிருபையைக் குறித்து நாம் மேன்மை பாராட்ட முடியும். அதைத் தவிர நம்மிடத்தில் ஒன்றுமில்லை. நாம் எப்படிப்பட்ட கிரியைகளை நடப் பித்தாலும், அவைகளினாலே நாம் நீதிமான்களாகி விட முடியாது. இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும் படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன். பரிசேயன் நின்று: தேவனே! நான் பறிகாரர், அநியா யக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண் ணினான். ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான். அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்து கிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த் தப்படுவான் என்று ஆண்டவராகிய இயேசுதாமே, தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்கு றித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார். அதனால், உபவாசம், தசமபாகம் என்பவை அவசியமல்ல என்பது பொருளல்ல. அவைகளை நாம் தேவ வார்த்தைகளின்படி செய்ய வேண்டும். நாம் அவைகளை செய்வதினால், மனதிலே பெருமையடைந்தால், அதனால் என்ன பலன்? எனவே கிறிஸ்துவின் சிந்தையைத் தரித்தவர்களாக, மனத்தாழ்மை யோடும், கீழ்படிவோடும், தேவனிடத்டதிலே சேருவோம். அவன் மனதுருக்கமுள்ள தேவன். தம்மிடத்தில் சேருகின்றவர்களை புறம்பே தள்ளிட விடமாட்டார். உடைந்து உள்ளங்களை தேற்றிகின்றவர். எனவே விசுவாசத்திலே தளர்ந்து போகாமல் முன்னேறிச் செல்லுங்கள்.
ஜெபம்:
உள்ளந்தரியங்களை ஆராய்ந்தறிகின்ற தேவனே, என்னுடைய கிரியைகளை குறித்து நான் ஒருபோதும் பெருமையடையாதபடிக்கு பிரகாசமுள்ள மனக் கண்களை தந்து என்னை உம்முடைய வழியிலே நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - லூக்கா 18:1-8