தியானம் (ஐப்பசி 19, 2025)
நம்முடைய வேண்டுதல்கள் என்ன?
யாக்கோபு 1:17
நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது
ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த தகப்பனானவர், தன் குமாரனை அதிகமாக நேசித்து வந்தான். அவன் குழந்தையாக இருந்த நாட்களிலே அவனுக்கு தேவையானவற்றையும், நேரம் தாமதிக்காமல் அவனுக்கு வாங்கிக் கொடுத்தார். அவன் வளர்ந்து பாடசாலைக்கு செல்லும் நாட்களிலே, இந்த உலகத்தோடுள்ள தொடர்புகள் அவனுக்கு ஏற்பட்டது. பற்பல விதமாக பிள்ளைகளை பாடசாலைகளிலே தினமும் சந்தித்து பேசி, அவர்களோடு ஓடி விளையாடி வந்தான். அந்தத் தொடர்புகளி னாலே அவன் மனதிலே ஆசைகள் தோன்றியது. மற்றய மாணவர்களிடமிருக்கும் பொருட்கள் சிலவற்றை பார்த்து ஆசைப்பட்டான். அந்த ஆசைகளை வந்து தன் தகப்பனானவரிடம் தெரிவித்தான். அவன் கண் கண்ட பொருட்கள் எல்லாவற்றையும் தனக்கு வாங்கி கொடுக்கும்படி கேட்டுக் கொண்டான். ஆனால், அவனுடைய தகப்பனானவர், அவனை அதிகமாக நேசித்ததால், அவன் வேண்டிக் கொண்ட எல்லாவற்றையும் அவனுக்கு வேண்டிக் கொடுக்கவில்லை. ஏனெனில், அவற்றுள் சில பொருட்கள், அவன் வாழ்விலே அவன் அடைய வேண்டிய இலக்கை அடைந்து கொள்வதற்கு தடையாக இருக்கும் என்றும், இன்னும் சில அவன் மனதின் யோசனைகளை தவறான வழிக்கு கொண்டு செல்லும் என்பதை நன்றாக அறிந்திருந்தார். அந்த சின்ன வயதிலே பையன், தன் தகப்பனானவருடைய முடிவைக் குறித்து திருப்தியாக இருக்கவில்லை. ஆனால், அவன் வளர்ந்து பெரியவனானபோது, தகப்பனானவர் ஏன் தனக்கு சில காரியங்களை தடை செய்தார் என்பதை நன்றாக அறிந்து உணர்ந்து கொண்டான். தேவனுடைய பிள்ளைகள் என்று அழைக்கப் படும் பாக்கியம் பெற்ற அருமையான சகோதர சகோதரிகளே, இந்த உலகத்தின் பிதாக்கள், தங்கள் பிள்ளைகள் வேண்டிக் கொள்ளும் போது, தீமையானவைகளை தடைசெய்து, நன்மையானவைகளையே தங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்க அறிந்திருக்கும் போது, தம் ஒரே பேறான குமாரனையே நமக்காக கொடுத்து, நம்மீது அன்புகூர்ந்து நம்முடைய பரம பிதா, நன்மையாகவைகளையே நமக்கு தருவது அதிக நிச்சயமாயிருக்கின்றது. அப்படியானால், நம் வாழ்விற்கு தீமை யான வைகளை நமக்கு தடை செய்வதும் அதிக நிச்சியமாக இருக்கும் அல்லவோ!
ஜெபம்:
நன்மைகளின் ஊற்றாகிய என் பிதாவாகிய தேவனே, என் வாழ்விற்கு நீர் எப்போதும் நன்மையானதையே செய்வீர் என்ற நம்பிக்கையிலே நான் அசையாது நிலைத்திருக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - மத்தேயு 7:11