தியானம் (ஐப்பசி 18, 2025)
தளர்ந்து போகாமல் வேண்டுதல் செய்யுங்கள்
மத்தேயு 7:8
ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.
'நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதா வானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்;'. 'நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன்.' 'நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.' 'என் நாமத்தினால் நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன். 'நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவி கொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம். நாம் எதைக் கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம்.' . 'தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?' இப்படியான பரிசுத்த வேதாகமத்திலே வேண்டுதல்களை குறித்தும், பிதவாகிய தேவன் தாமே, தம்முடைய பிள்ளைகளுக்கு அருளும் நன்மையான ஈவுகளை குறித்த அநேக உறுதியான வாரத்தைகள் உண்டு. எனவே, நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், உங்களை விசாரிக்கின்ற பரம பிதா உங்களுக்கு இருப்பதால், உங்கள் இருதயத் திலுள்ளவைகளை அவரிடத்திலே தெரியப்படுத்துங்கள். உங்கள் மனக்கிலேசங்களை அவர் அறிந்திருக்கின்றார். நாட்கள் கடந்து செல்கின்றது என்று சோர்ந்து போய்விடாதிருங்கள். எனவே, விசுவாசத்திலே தளர்ந்து போய்விடாதிருங்கள். காரியங்களை உங்கள் கரத்திலே எடுத்துக் கொண்டு, மாம்சத்திலே கிரியைகளை நடப்பித்து, இன்னும் அநேக நோவுகளை வரவித்துக் கொள்ளாதபடிக்கு, இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள். கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்;. ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும் என்று ஆண்வராகிய இயேசு கூறியிருக்கின்றார்.
ஜெபம்:
என்மீது அன்புகூர்ந்து உம்முடைய திருக்குமாரனை எனக்காக கொடுத்த தேவனே, எந்த ஒரு நன்மையையும் நீர் மறைத்து வைப்பதில், என்பதை உணர்ந்து உறுதியாய் இருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - ரோமர் 8:32