புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 12, 2025)

நல்மனதோடு நற்செய்தி

பிலிப்பியர் 1:15

சிலர் பொறாமையினாலும் விரோதத்தினாலும், சிலர் நல் மனதினாலும் கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள்.


ஒரு தேசத்திலே வாழ்ந்து வந்த நலன் விரும்பு ஒருவர், பல ஆண்டுகளாக, ஊர் ஊராக சென்று, வறியவர்களுக்கும், திக்கற்றவர்களுக்கும் உதவும்படிக்கு பற்பல உதவித்திட்டங்களை முன்னெடுத்து வந்தார். ஏழை எளியவர்களும், திக்கற்றவர்களும் வாழ்வடைய வேண்டும் என்பதே அவருடைய ஒரே நோக்கமாக இருந்தது. அவர் ஒரு குறிப்பிட்ட ஊருக்கு சென்றுகொண்டிருக்கும் போது, அந்த ஊரிலுள்ளவர்களுக்கு உதவுவதற்கு தன்னிடம் போதிய பணமோ பொருளோ இல்லையே என்ற ஏக்கத்துடன் சென்று கொண்டிருந்தார். இந்த வேளையிலே, அந்த ஊரிலுள்ள சில அதிகாரிகள், அந்த நலன்விரும்பியை அப்படியே விட்டுவிட்டால், பெயரும் புகழும் அவனுக்கல்லோ சென்று விடும். ஜனங்கள் எங்களை ஒரு பொருட்டு என்று எண்ணாமற் போய் விடுவார்கள் என்று தங்களுக்குள் தீர்மானம் செய்து கொண்டு, பாரிய அளவிலே, அந்த ஊரிலுள்ள வறியவர்களுக்கும், திக்கற்வர்களுக்கும் உதவி செய்தார்கள். அதைக் கண்ட அந்த நலன் விரும்பி தன்னுடைய நோக்கம் நிறைவேறியதைக் கண்டு மிகவும் சந்தோஷப்பட்டார்கள். அந்த ஊரின் அதிகாரிகள், தங்களுடைய சுய இலாபத்தை அடைந்து கொண்டார்கள். ஏழை எளியவர்கள் மற்றறும் திக்கற்ற பிள்ளைகளின் முகங்கள் மலர்ந்துது. அதனால் அந்த நலன்விரும்பி மனத்திருப்தியடைந்தார். பிரியமான சகோதர சகோதரிகளே, தேவ ஊழியராகிய பவுல் என்பவர், கிறிஸ்துவின் சுவிசேஷத்தினிமித்தம், சிறையில் போடப்பட்டார். அவர் எங்கிருந்தாலும் என்ன நிலையிலிருந்தாலும், கிறிஸ்து அறிவிக்கப்பட வேண்டும் என்பதே அவருடை ஒரே நோக்கமாக இருந்தது, அதைக் கண்ட சிலரோ, பவுலின் மேல் பொறாமையடைந்து, எங்களுக்கும் கிறிஸ்துவை அறிவிக்க தெரியும், நாங்களும் அறிவிப்போம் என்று விரோதத்தினால் அதை செய்தார்கள். அதைக் கேள்விப்பட்ட தேவ ஊழியர், தான் செய்ய வேண்டிய காரியம் கைகூடுகின்றதே, கிறிஸ்துவின் நாமம் அறிவிக்கப்படுகின்றதே என்று எண்ணி சந்ததோஷப்பட்டார். வஞ்சகத்தினாலும், பொறாமையினாலும் கிரியைகளை நடப்பிக்கின்றவர்கள் அவர் இருதயம் விரும்புகின்றதை அடைந்து கொள்வார்கள். இயேசு கிறிஸ்துவின் நாமம் விருதாவாய் போவதில்லை. கருப்பொருளாவது, நீங்கள் தேவனிடதிலிருந்து அழியாத நற்பலனை பெறும்படிபோட்டி பொறாமைகளை விட்டு, ஏக சிந்தையோடும், இசை ந்த ஆத்துமாக்களாக, நல்மனதோடு கிறிஸ்துவை அறிவியுங்கள்.

ஜெபம்:

முடிவில்லாத ராஜ்யத்திற்காக என்னை அழைத்த தேவனே, இம்மைக்காக மாத்திரம் நான் உம்மை சேவிக்காதபடிக்கு, எப்போதும் நல் மனதோடு, உம்முடைய சேவையை செய்ய எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 2:1-3