புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 11, 2025)

ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை

நீதிமொழிகள் 25:11

ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்.


'காட்டுப்பன்றிகள் அவற்றின் கூர்மையான தந்தங்கள், சக்திவாய்ந்த கடிக்கும் ஆற்றல், ஆச்சரியப்படத்தக்க வலிமை மற்றும் வேகம் காரணமாக மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானவை. இயற்கையாகவே அவை தன்பாட்டில் இருந்தால், எவரையும் தாக்குவதில்லை. ஆனால், அவை அச்சுறுத்தப்பட்டதாக உணரும் போது அல்லது தப்பி ஓடுவதற்கு வழியில்லாமல் தடுத்து வைக்க முற்படும் போது, மனிதர்களை தாக்கும். அவைகள் மோதித்த தாக்குவதால், வெட்டுக்கள், துளைகள், எலும்பு முறிவுகள் மற்றும் ஆபத்தான இரத்த இழப்பு போன்ற கடுமையான காயங்களுக்கு வழிவகுக்கும்.' இதற்கு ஒப்பனையாகவே, 'உங் கள் முத்துகளைப் பன்றிகள் முன்போடாதேயுங்கள்;' என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். முத்துக்களைப் போன்ற தேவ வார்த்தைகளை, காலத்திற்கு முன்னதாகவோ, காட்டுபன்றிகள் போல மனநிலையுள்ளவர்களுக்கு அறிவுரையாக நீங்கள் கூறும் போது, அந்த வார்த்தைகளின் மேன்மைகளை அவர்கள் அறியாதபடியால், நித்திய ஜீவன் தரும் அவ்வார்த்தைகளை அவர்கள் கனவீனப்படுத்தி, உங்கள் வாழ்க்கைக்கும்; பாதகமான பாதிப்புக்களை உண்டாக்கி விடுவார்கள். 'பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துகளைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்.' என்ற வேத வார்த்தையை நன்கு அறிந்து கொள்ளும்படிக்கு இந்த ஒக்டோபர் மாதத்தின் 5ம் திகதியிலிருந்து 11ம் திகதிவரையிலான தியானங்களின் பதிவுகளை கேளுங்கள். 'ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்.' 'மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள்.' என்று பரிசுத்த வேதாகமத்திலே வாசிக்கின்றோம். எனவே, காலத்திற்கு முன்பு அதை மனக்கடினமுள்ளவர்களுக்கும், துன்மார்கத்திலிருப்பவர்களுக்கும் அறிவிப்ப முற்படுகின்றவர்கள் தாங்களும் தேவ வார்த்தைகளை அற்பமாண எண்ணுகின்றவர்களாக காணப்படுவார்கள். ஆதலால், தேவ ஆவியான வரின் வழிநடத்துதலோடு, தேவ வார்த்தைகளை ஏற்ற காலத்திதிலே, சரியான இடத்திலே, கூறப்பட வேண்டியவர்களுக்கு கூறுங்கள். அப்பொழுது அதை பேசுகின்றவர்களுக்கும் கேட்கின்றவர்களுக்கும் பிரயோஜனம் உண்டாகும்.

ஜெபம்:

அன்புள்ள பரலோக தகப்பனே, உம்முடைய விலை மதிக்க முடியாத வார்த்தைகளை தேவ ஆவியானவரின் வழிநடத்துதலோடு அறிவிக்கும்படி எனக்கு ஞானமுள்ள இருதத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 7:6