புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 08, 2025)

நம் நிலைமையை நன்றாய் அறிந்தவர்...

1 பேதுரு 5:7

அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர் மேல் வைத்துவிடுங்கள்.


ஒரு தாயானவள் குறிப்பிட்ட அலுவலாக வெளியே செல்ல வேண்டியிருந்ததால், தன் குழந்தையை பராமரிக்கும்படிக்கு வீட்டிலிருந்தவர்களிடம் கூறிவிட்டு சென்றிருந்தால். சொற்ப நேரம் கழித்து, அக்குழந்தையானது அழ ஆரம்பித்துவிட்டது. குழந்தையின் அழுகையை நிறுத்தும்படிக்கு, அக்கிருந்தவர்கள் பற்பல காரியங்களை செய்தார்கள். குழந்தையின் கவனத்தை மாற்றுவற்கு, குழந்தைக்கு பல விளையாட்டுப் பொருட்களை கொடுத்தார்கள். ஆனால், குழந் தையோ, இன்னும் அதிகமாக அழுது கொண்டிருந்தது. மதிய வேளையிலே தாயானவள், வீடு திரும்பியதும், தன் குழந்தையின் அழுகை இன்னதென்று அறிந்து, தன் குழந்தையின் தேவை இன்னதென்று அறிந்து, தன் குழந்தையை ஆற்றித் தேற்றினாள். தன் குழந்தையை அறிந்த தாயானவள், குழந்தையின் அழுகையின் காரணம் இன்தென்று அறிந்திருக்கின்றாள். உலகிலே வாழும் எல்லா மனிதர்களுக்கும் தேவைகள் உண்டு. பேசமுடியாத மழலை தன் தேவையை அழுகையின் வழியாக வெளிக்காட்டுகின்றது. ஆனால், மனிதர்களோ, தங்கள் தேவைகளை குறித்து கவலையடைந்து, அவைகளை சந்திக்கும்படிக்கு அதிகதிகமாக பிரயாசப்படுகின்றார்கள். சில வேளைகளிலே அந்த பிரயாசங்களுக்கு ஓய்வில்லாமல் போய்விடுகின்றது. அதனால், மன அழுத்தமடைந்து, அதிருப்தியோடு வாழ்ந்து வருகின்றார்கள். அக்குழந்தையை தேற்றும்படி பலர் முயற்சி செய்தது போலவே, இந்த உலகின் தத்துவங்களும், ஆலோசனைகளும் இருக்கின்றது. அவைகளில் சில மனிதர்களுடைய கவனத்தை அவர்களுடைய தேவைகளிலிருந்து வேறிடத்திற்கு திருப்பிவிடுகின்றது. ஆனால், தேவைகளோ சந்திக்கப்படவில்லை. அதை சந்திப்பதற்கு வழியும் தெரிவதில்லை. தேவைகளோடு இன்னும் அதிக பாரத்தை தங்கள் மேல் ஏற்றிவிடுகின்றார்கள். தாயானவள் தன் பிள்ளையை அறிந்திருக்கின்றது போல, நம்முடைய பரம பிதாவும் நம் தேவை இன்னதென்று நன்கு அறிந்திருக்கின்றார். ஒரு வேளை தாயானவள் தன் குழந்தையை மறந்து போனாலும் அவர் மறந்து போவதில்லை. தம்முடைய வார்த்தையின் வழியான நம் தேவை இன்னதென்றும், அதை அடைந்து கொள்ளும் வழி இன்னதென்றும் நமக்கு கற்றுக் கொடுகின்றார். எனவே, அவருடைய வாழ்வு தரும் வார்த்தையை வாசித்து தியானியுங்கள், அத்தோடு விட்டுவிடா மல், தியானித்தவைகளை வாழ்க்கையிலே நடைமுறைப் படுத்துங்கள்.

ஜெபம்:

என் நிலைமையை நன்றாய் அறிந்த தேவனே, மனதின் யோசனைகளின்படி நடவமலும், உலக ஆலோசனைகளை பற்றிக் கொள்ளாமலும், உம் வார்த்தையில் நிலைத்திருக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏசாயா 45:1-6