தியானம் (ஆவணி 25, 2025)
ஐசுவரியத்தின் பெருக்கம்
சங்கீதம் 62:10
ஐசுவரியம் விருத்தியானால் இருதயத்தை அதின் மேல் வைக்காதேயுங்கள்.
தேவ கற்பனைகளை கைகொண்டு வருகின்றேன் என்று எண்ணிக் கொள்ளும் ஒரு விசுவாசியானவன், தன் பொக்கிஷத்தை எங்கே சேர்த்து வைக்கின்றான் என்பதை அவன் தேவ வார்த்தையின் வெளிச்சத்திலே ஆராய்ந்து அறிந்து கொள்வது மிகவும் அவசியமானது. ஒரு சமயம், தன் சிறுவயதிலிருந்து தேவ கற்பனைகளை கைகொண்டு வந்த தலைவன் ஒருவன் ஆண்டவர் இயேசுவினிடத்தில் வந்தான். அவ னுக்கு இந்த உலகத்தின் பொக்கிஷங்கள் மிகுதியாக இருந்தும், பரலோக பொக்கிஷமாகிய நித்திய ஜீவனை அடைய வேண்டும் என்ற வாஞ்சையுள்ளவனாக இருந்தான். அவன் சிறு வயதுமுதல் தேவ கற்பனைகளை கைகொண்டு வந்த சன்மார்கனாக இருந்தான். அவன் ஒரு தலைவனாக இருந்தும் மனத்தாழ்மையுள்ளவனாக இருந்ததால், ஆண்டவர் இயேசுவை தேடி வந்தான். இன்னும் என்னிடத்தில் என்ன குறை இருக்கின்றது என்று கேட்டான். அவனிடத்தல் அன்பு கூர்ந்த ஆண்டவராகிய இயேசுதாமே, அவனிடத்திலே ஒரு குறையை கண்டார். அவனுக்கு திரளான பொக்கிஷம் இந்த பூமியிலே இருந்தது. ஆனால், அவனுக்கு பரலோகத்திலே பொக்கிஷம் தேவை என்பதை அவனுக்கு சுட்டிக் காட்டும்படி, நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்கு கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்கு பொக்கிஷம் உண்டாயிருக்கும், பின்பு நீ என்னைப் பின்வற்றிவா என்றார். அவனோ, மிகுந்த ஐசுவரியமுள்ளவனாயிருந்தபடியால், எதை யும் கூறாமல், சற்றும் சிந்திக்காமல், துக்கத்தோடே திரும்பிப் போய்விட்டான். பிரியமானவர்களே, பரலோகத்திற்கு செல்ல வேண்டும் என்ற வாஞ்சையை கொண்டிருந்த அந்த வாலிபன், அதற்கான வழிமுறையை அறிந்த போது ஏன் துக்கமடைந்தான்? அவனுக்கு பரலோகத்தில் பொக்கிஷம் இல்லாதிருந்தால், அவன் இருதயம் எங்கே இருந்தது? என்பதை சிந்தித்துப் பாருங்கள். அவன் அவ்விடம்விட்டு சென்ற பின்பு, ஆண்டவராகிய இயேசுதாமே, தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவான் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகி றேன். மேலும் ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். உங்களுடைய பொக்கிஷம் எங்கே இருக்கின்றது?
ஜெபம்:
சகலமும் அறிந்த தேவனே, மாயமான இந்த உலகத்தின் ஐசுவரியத்தின் மயக்கத்தில் அகப்பட்டு, பரலோக பொகிஷங்களை அற்பமாக்கிவிடாதபடிக்கு எனக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்த வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - கொலோ 3:5