புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 04, 2025)

பரம பிதா நடாத நாற்று

மத்தேயு 15:13

அவர் பிரதியுத்தரமாக: என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும்.


ஒரு ஊரிலே வாழ்ந்த மனிதனானவனொருவன், தன் வீட்டின் பிற்பு றத்திலே சிறிய காய்கறி தோட்டம் செய்தான். அதிலே சில வகையான காய்கறிகளின் விதைகளை விதைத்து, வளர்ந்து வரும் நாற்றுக்களை பராமரித்து வந்தான். அந்த நாற்றுக்களோடு, சில களைகளும் அந்த தோட்டத்திலே சிறிய நாற்றுக்களைப் போல வளர்ந்து வந்தது. அந்தக் களைகள் அந்த தோட்டத்திலே இருந்தததினால், அவைகளையும் அந்த தோட்டம் செய்யும் மனிதனின் பராமரிப்பை பெற்றுக் கொண் டது. குறித்த நேரத்திலே தண் ணீரும், ஏற்ற காலத்திலே பசளை யையும் பெற்றுக் கொண்டது. தோட்டத்தை சுற்றி போடப்பட்டி ருந்து பாதுகாப்பின் வேலியும், சிறிய விலங்குள் உட்செல்லாதபடிக்கு, மூடப்பட்டிருந்த கம்பி வளைகளும் அந்த களைகளுக்கும் பாதுகாப்பை கொடுத்தது. ஆனால், அந்த களைகளோ, அந்த தோட்டம் செய்யும் மனிதன் நட்ட நாற்றுக்கள் அல்ல. அவைகள் குறித்த காலத்திலே வேரோடு பிடுங்கப்பட்டு, அவ்விடத்திலிருந்து அகற்றப்படும். நம்முடைய பரமபிதாவானவர், தீயோர்மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையை பெய்யப்பண்ணுகின்றார். ஆனால், அவர்கள் யாவரும் குமாரனாகிய இயேசுவை விசுவசிப்பவர்கள் அல்ல. அநேகர் குமார னாகிய இயேசுவை மறுதலிக்கின்றார்கள். ஆலயத்திற்கு செல்கின் றவர்கள் யாவரும் இரட்சிப்படைந்தவர்களா? விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான், விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளகத் தீர்க்கப்படுவான் என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார் (மாற்கு 16:16). தேவ கிருபை என்றுமுள்ளது! ஆனால், அதை பெற்றுக் கொண்ட யாவரும், உண்மை மனதுடன் விசுவசிக்கின்றார்களா? காலத்திலே உண்டாகும் கனிகள் அதை வெளிப்படுத்தும். எனவே, ஒருவன் தன் இருதயத்திலே விசுவசிக்காமல், தேவ கிருபையைப் பற்றி மேன்மைபாராட்டி, இரட்சிப்பு இலவசம், நான் எப்படியும் பரலோகம் சென்று விடுவேன் என்று கூறுவனின் முடிவு தேவ குமாரானாகிய இயேசு கிறிஸ்து வெளிப்படும் போது உறுதி செய்யப்படும். ஆகையால், நீங்கள் உள்ளத்திலே விசுவாசித்திருந்தால், மனத்திரும்புதலுக்கேற்ற கனிகளை கொடுங்கள். பிதா உங்களுக்கு மன்னித்தது போல நீங்களும் உங்களுக்கு எதிராக குற்றம் செய்த வர்களை மன்னிக்க பழகும்படி, தூய ஆவியானவர் உங்களின் கிரியை செய்ய இடங்கொடுங்கள்.

ஜெபம்:

பெலவீனங்களிலே என்னை பெலப்படுத்துகின்ற தேவனே, நான் உம்மைப்போல மாறும்படிக்கு, உம் வார்த்தையிலே நிலைத்திருந்து கனி கொடுக்கும் உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபேசியர் 4:32