தியானம் (ஆவணி 03, 2025)
இருதயத்தை ஆராய்ந்து பாருங்கள்
2 கொரிந்தியர் 13:5
நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்;
மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால்;, உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னிபார். மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார். என்று மன்னிப்பபை குறித்த நிபந்தனையை ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். எனவே, ஒருவனுடைய குற்றத்தை மன்னிக்காமல் இருப்பது இன்னுமொரு குற்றமாக மாறிவிடுகின்றது. இரட்சிப்பு எங்கள் கிரியைகளினால் உண்டாவதில்லை. அது கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு உண்டாகின்றது. அது இலவசமானது. எனவே, மீட்பர் இயேசுவை விசுவாசிக்கும் போது, தாங்கள் மற்றவர்களை மன்னிக்காமல் இருக்கும் குற்றத்தையும் அவர் மன்னிப்பார். இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும் என்று சிலர் கூறிக் கொள்கின்றார்கள். இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும் என்பது மாறாத சத்தியம். யார் அந்த சுத்தரிகரிப்பை பெற்றுக் கொள்கின்றார்கள்? மீட்பர் இயேசுவை விசுவாசிக் கின்றவர்கள், மனந்திரும்பி தங்களுடைய பாவங்களை அறிக்கை யிடுகின்றார்கள். அவர்களுக்கு அவர் மன்னிக்கின்றார். கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டவனிடத்தில் தெய்வீக சுபாவத்திற்குரிய கனிகளும், கனி கொடுக்க வேண்டும் என்கின்ற வாஞ்சையும் காணப்படும். மனம் இரங்கி, மற்றவர்களுடைய குற்றங்களை மனப்பூர்வமாக மன்னிப்பது அந்தக் கனிகளிலே ஒன்று. விசுவசித்ததினாலே நான் இரட்சிப்பை பெற்றுக் கொண்டேன் என்று கூறும் மனிதனொருவன், என் குடும்பத்திற்கு குற்றம் செய்தவனை நான் மன்னிக்கவே மாட்டேன் என்று மனதை கடினப்படுத்திக் கொண்டு வாழ்ந்து வந்தால், அவன் கர்த்தர்பேரில் கொண்டிருக்கும் விசுவாசம் உண்மை யானதா என்ற கேள்விக்கு இடமுண்டாகும். அவனுடைய விசுவாசம் மாயமானதாக இருந்தால், அவன் உண்மையாக இரட்சிப்பை பெற்றுக் கொள்ளவில்லை. பிரியமானவர்களே, தேவன் எல்லா பாவங்களையும் மன்னிப்பார் என்று, பாவத்திலே வாழ்வது, பரிசுத்த வாழ்வு அல்ல. எனவே இரட்சிப்படைந்தேன் என்று கூறுபவனுக்கு கனி கொடுக்கும் வாழ்க்கை இன்றியமையாதது. மன்னிப்பை பெற்ற உங்களில் மன்னிக்க வேண்டும் என்கிற எண்ணம் உங்களில் வளர்ந்து பெருகுவதாக.
ஜெபம்:
மனம் இரங்கும் பரலோக தந்தையே, உம்முடைய பிள்ளையாகிய நான், மன்னிப்பதை சுபாவமாக கொண்டிருக்கும்படி, நாளுக்கு நாள் உமது சாயலிலே வளர்ந்து பெருகும்படி என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - மத்தேயு 7:14-15