தியானம் (ஆவணி 02, 2025)
இரசிப்பு கனிகளால் உறுதிசெய்யப்படும்
லூக்கா 6:44
அந்தந்த மரம் அதனதன் கனியினால் அறியப்படும்;
இரட்சிப்பு இலவசம். அது தேவ ஈவு. மீட்பர் இயேசுவை விசுவாசிக்கும் போது, அவர் சகல பாவங்களையும் மன்னிக்கின்றார். இரட்சிப்படைந்தவர்களுக்கு எப்படியும் நித்திய ஜீவனை கொடுப்பார் என்று வேத வாக்கியங்கள் கூறுகின்றது. உண்மையான ஒருவன் மனம் திரும்பனான என்பது யாருக்கு தெரியும்? ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த மனிதனொருவன், விசுவாசியாக இருந்த ஒரு பெண்ணை விரும்பியதால், அவளை பின்தொடரும்படி, அவள் செல்லும் ஆலயத்திற்கு சென்றான். நாளடைவிலே தன்னுடைய விருப் பத்தை அவளுக்கு தெரிவித்தாள். அதற்கு அவள்: தன் பெற்றோர் விசுவாச மார்க்கதிலில்லாதவர்களை திருமணம் செய்ய அனுமதிக்க மாட்டார்கள் என்று கூறினாள். அதனால், அவன் ஞானஸ்நானம் பெறும்படிக்கு, வேதப்படிப்பு வகுப்புகளுக்கு சென்று, ஞானஸ்நானத்தை பெற்று, தவறாமல் ஆலயத்திலே நடக்கும் ஆராத னைகளுக்கு செல்ல ஆரம்பித்தான். தானதர்மங்களை செய்து, தசமபாக காணிக்கை போன்றவற்றில் உண்மையாக இருந்து வந்தான். அதைக் கண்டு கொண்ட அந்த பெண்ணின் பெற்றோர் தங்கள் குடும்பதில் ஏற்றுக் கொண்டார்கள். திருமணம் நடந்து பல வருடங்களுக்கு பின்னர், குடும்பத்திலே பிரச்சனைகள் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் குற்றம் சாற்ற தொடங்கினார்கள். இப்படியாக மாதங்கள் கடந்து சென்ற பின்னர், அந்த பெண்ணின் பெற்றோர், அந்த மனிதனை நோக்கி: நீ இப்படியெல்லாம் செய்து வருகின்றாய். நீ தேவனுக்கு பயப்படுவதில்லையா என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதனானவன்: அவர்களை நோக்கி, எனக்கு இவற்றிலே நம்பிக்கையில்லை. நான் உங்கள் மகளை திருமணம் செய்து கொள்ளும்படி உங்கள் அனுமதியை பெற்றுக் கொள்ளும் படிக்காகவே ஆலயத்திற்கு சென்றேன் என்று கூறினான். ஆம் பிரியமான சகோதர சகோதரிகளே, விலை மதிக்க முடியாத இரட்சிப்பை தேவன் நமக்கு இலவசமாக கொடுத்திருக்கின்றார். கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு மனிதர்கள் இரட்சிப்படைகின்றார்கள். ஆனால், அவர்கள் உண்மையாக விசுவாசித்தார்களா அல்லது சுய இலாபத் திற்காக இரட்சிக்கப்பட்டவர்கள் போல தங்களை காண்பிக்கின்றார்களா என்பது அவர்கள் தங்கள் வாழ்க்கையிலே காண்பிக்கும் கனிகளால் அறியப்படும். ஏனெனில், பரமபிதா நடாத நாற்றுக்களும் உண்டு. சத்துருவானவன் போட்ட நாற்றுக்களைப் போன்றவர்களும் உண்டு. அறுப்பு காலத்தில் யாவும் வெளிப்படும்.
ஜெபம்:
இருதயங்களை ஆராய்ந்து அறிகின்ற தேவனே, நான் நல்ல கனிகளை கொடுக்கும் மரத்தைப் போல நான் இருக்கும்படிக்கு, உண்மையுள்ள இருதயத்தோடு உம்மைபற்றி கொள்ள கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - மத்தேயு 7:16-18