தியானம் (ஆடி 31, 2025)
எங்கள் பிதா பரலோகத்திலிருக்கின்றார்
மத்தேயு 6:13
ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென்,
கடந்த எட்டு வாரங்களாக நாம் கர்த்தர் கற்பித்து கொடுத்த மாதிரி ஜெபித்தின் கருப்பொருளை ஆராய்ந்து தியானித்து வருகின்றோம். அந்த ஜெபத்திலே ஏழு அம்சங்களில், முதல் மூன்றும், தேவனையும், அவருடைய ராஜ்யத்தையும், அவருடைய ஆளுகையையும் குறித்தவைகள். இவைகளையே நாம் முதலாவதாக நாடித் தேட வேண்டும். இவைகளே நம்முடைய ஆத்துமா வாஞ்சிக்ன வேண்டும். அடுத்த மூன்று அம்சங்களும், அனுதின ஆகாரம், மன்னிப்பு, பாதுகாப்பை பற்றிய நம்முடைய விண்ணப்ப ங்கள். இறுதியாக, ராஜ்யம், வல்லமை, மகிமை தேவனுடைய வைகள் என்பதை அறிக்கை செய்து அவர் ஒருவரே ஆராதனைக்குரியவர் என்பதை அறிக்கை செய்து துதிக்க வேண்டும். இது ஒவ்வொரு தேவ பிள்ளையின் விசுவாச அறிக்கையாக இருக்க வேண்டும். அப்படி அறிக்கை செய்யும் போது, இந்த உலகத்தினால் உண்டானவைகளைக் குறித்த பயம் விசுவாசியின் மனதைவிட்டு அகன்ற போகும். ராஜ்யம் அவருடையது, அவரே அதை ஆளுகை செய்கின்றார். எனவே வேறெந்த ஆளுகையையோ, அதரிகாரத்தையோ குறித்து பயம் நம்மில் இருக்க முடியாது. அவருடைய வல்லமைக்கு முன்பாக எவரும் நிற்க முடியாது. அவர் சர்வ வல்லமையுள்ள தேவன். நம் வாழ்க்கையிலே உண்டாகும் சவால்கள் அழுத்தங்கள் மத்தியிலே, நாம் சோர்ந்து போகாமல், தேவனுடைய ஆளுகைக்குள் சகலமும் கட்டுப்பட்டிருக்கின்றது. ஆத்துமாக்கள் பாதாளத்திலே அழிந்து போகாக்கூடாதது என்ப தற்காக அவர் நீடிய பொறுமையுள்ளவராக இருக்கின்றார் என்பதை அறிக்கை செய்கின்றோம். எனவே நம் வாழ்விலே தேவனைக் குறித்த சந்தேசத்திற்கு இடம் இருக்கக்கூடாது. நம்முடைய சரீரத்தை கொல்ல வல்லவர்களுக்கு நாம் பயப்படாமல், ஆத்துமாவையும் நரகத்திலே கொல்ல வல்லவர் ஒருவருக்கே பயப்பட வேண்டும். தேவ நாமம் மகி மைக்குரியது. என்றும் மாறாத மகிமை பொருந்தியமுது. ஆனால், அந்த மகிமையை நம் வாழ்விலே நாம் உயர்த்த வேண்டும். ஒரு விசுவாசியினுடைய செயற்பாடுகளின் வழியாக அவருடைய நாமம் தூஷிக்கப்படுவது, அந்த விசுவாசிக்கு நன்மையை உண்டாக்காது. எனவே, அவருடைய நாம் நம் வழியாக மகிமைப்பட வேண்டும். அப்பொழுது, நம் வாழ்விலே தீமைக்கு இடமிராது. சுயசித்த்திற்கு இடமிராது. இருளின் ராஜ்யம் ஆளுகை செய்யாது. பரலோத்தில் இருக்கின்ற பிதாவே நம்மை ஆளுகை செய்வார்.
ஜெபம்:
பரலோகத்திலே வீற்றிருக்கின்ற, சர்வ வல்லமையுள்ள தேவனே, உம் நாமத்தை உயர்த்தி துதிக்கும் ஆராதிக்கும் மேன்மையை உணர்ந்து கொள்ளும் இருதயத்தை எனக்கு தந்து என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - 1 தீமோ 6:15-16