தியானம் (ஆனி 29, 2025)
பரலோக ராஜ்யத்திற்குரியவர்கள்
மத்தேயு 7:21
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல்...
'தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.' (யோவான் 3:16) என்று பரிசுத்த வேதாகத்திலே வாசிக்கின்றோம். இது பிதாவாகிய தேவனின் அநாதி தீர்மானம். எந்த ஆத்துமாவும் பாதாளத்திலே அழிந்து போவது தேவ னுடைய சித்தமல்ல. வாழ்வு தரும் மெய்யான ஒளியாகிய கிறிஸ்து இயேசு இந்த உலகத்திற்கு வந்திருந்தும், அநேகர் மனம் இருளின் அதிகாரத்திற்குட்பட்டவைகளை வாஞ்சிக்கின் றது. அவர்களுடைய தீர்மானமே அவர்களுடைய ஆக்கினைக்கு காரணமாக இருக்கின்றது. கேட்டுக்கு போகின்ற வழி விசாலமாதாக இருப்பதால், அநேகர் அவ்வழியே பிரவேசிக்கின்றார்கள். அதன் முடிவோ அழிவு. எனவே, பிதாவாகிய தேவனின் சித்தம் செய்யும்படி நாடுங்கள். பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தப்படி செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்கிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளிலே அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளை துரத்தினோம் அல்லவா என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்கு சொல்லுவேன் என்று ஆண்டவராகிய இயேசு கூறியிரு க்கின்றார். பிரியமானவர்களே, இன்று பெரும் ஊழியம் என்று கருதப்படும், உலக த்தை கலக்கும் காரியங்களை ஒருவன் நடப்பிக்கலாம். தன் ஊழியங்களுக்கென்று பெரிதான ஸ்தாபனங்களை உருவாக்கலாம், ஆனால், அவன் வாழ்விலே பிதாவாகிய தேவனுடைய சித்தம் இல்லையென்றால் அதனால் அவனுக்கு பரலோகிலே பலன் இல்லை. நீங்கள் உலகத்தை கலக்கும் காரியங்களை செய்ய வேண்டும் என்று தேவன் கேட்கவில்லை ஆனால் தன்னுடைய சித்தத்தை செய்யும்படி உங்களை அழைத்திருக்கின்றார். அதற்கு தேவையான யாவற்றையும் மிகையாய் கொடுத்திருக்கின்றார். எனவே, பரலோகத்தின் ஒரே வழியாகிய ஆண்டவர் இயேசுவை பற்றிக் கொள்ளுங்கள். அவரே வாசல். அவரே ஜீவ அப்பம். அவரே செல்லும் வழிக்கு ஜீவ ஒளியாயிருக்கின்றார்.
ஜெபம்:
கிருபையும் இரக்கமும் நிறைந்த சர்வ வல்லமையுள்ள தேவனே, நீர் உண்டாக்கிய புதிதும் ஜீவனுமான மார்க்கத்தின் வழியாய் நான் செல்லும்படிக்கு எனக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்து வழிநட த்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - யோவான் 6:38