புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 18, 2025)

பெற்றோருக்கு பிரியமான பிள்ளை யார்?

மத்தேயு 6:7

அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்;


பொதுவாக, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் தேவைகளை மட்டுமல்ல, அவர்களுடைய விரும்பங்களையும் பூர்த்தி செய்யும்படிக்கு எண்ணமுள்ளவர்களாக இருந்து, தங்களால் முடிந்த யாவற்றையும் செய்து கொடுகின்றார்கள். ஒருவேளை பிள்ளைகளில் ஒருவன் கீழ்படிவற்றவனாக இருந்தாலும், பெற்றோர் அவனை ஆகாதவன் என்று தள்ளிவிடுவது அவர்களுக்கு தூரமான செயலாக இருக்கின்றது அல்லவா? காரியம் இப்படியாக இருக் கும் போது, உங்கள் பிள்ளைகளில் ஒருவன், தன் தேவைகளை பெற்றோரகிய நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும் என்று உங்களை புகழ்ந்து, உங்கள் பிரயாசங்களை பாராட்டி, உங்களுக்கு பெரிதான கட்டுரையொன்றை எழுதினால் அதைக் குறித்து பெருமிதம் கொள்வீர்கள் அல்லவா? நாட்கள் கடந்து செல்லும் போது, அவன் உங்கள் வார்த்தைகளுக்கு செவிகொடாமல் வாழ்ந்து கொண்டு, தன் தேவைகள் சந்திக்கப்பட வேண்டும் என்பதற்காக, உங்கள் செவியில் நல்வார்த்தைகள் வந்து எட்டும்படி, உங்கள் உற்றார் உறவினர் மத்தியில், அவன் உங்களுக்கு எப்போதும் புகழ்மாலை சூடிக் கொண்டிருந்தால் அவனைக் குறித்து உங்கள் மனம் எப்படியாக இருக்கும்? காலங்கள் கடந்து செல்லும் போது, வாழ்க்கையில் மாற்றம் இல்லாதவனாய், அதே கட்டுரையை உங்களுக்கு எழுதி, அதே புகழ்மாலையை அவன் உங்களுக்கு சூடிக் கொண்டிருந்தால், அவனைக் குறித்து நீங்கள் பிரியமாக இருப்பீர்களோ? அருமையான சகோதர சகோதரிகளே, நம்முடைய பரம பிதா நம் தேவைகள் இன்னதென்பதை அறிந்திருக்கின்றார். 'ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மைய hனவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?' (மத் 7:11). சிலர் கருத்தற்ற அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். எனவே, நம்முடைய நன்றிகளும், விண்ணப்பங்கள் சடங்காச்சாரமும், முகஸ்துதியுமாக இருக்காமல், தேவனோடு உறவு கொள்வதை மேன்மையான எண்ணிக் கொள்ள வேண்டும். அவைஇதயபூர்வமாக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாக இருக் கின்றார்.

ஜெபம்:

என் தேவைகளை அறிந்த அன்புள்ள பரலோக பிதாவே, நான் உம்மோடு உறவுகொள்வதையே மேன்மைப்படுத்தி, உம்மை அறிகின்ற அறிவிலே வளர நீர் எனக்கு தேவ ஞானத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 66:18