தியானம் (வைகாசி 12, 2025)
தானதர்மங்களின் நோக்கங்கள்
மத்தேயு 6:1
மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
இந்த உலகிலே, பரவலாக அநேகர் தானதர்மங்களை செய்து வருகின்றார்கள். திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரித்து வருகின்றார்கள். உலகின் பொருளாதார அளவுகோலின்பப, சில இடங்களிலே, கர்த்தரை அறிந்தவர்கள் கர்த்தரை அறியாதவர்களைவிட அதிகமாக செய்கின்றார்கள். வேறு சில இடங்களிலே கர்த்தரை அறிந்தவர்களைவிட அறியாதவர்கள் அதிகமாக செய்கின்றார்கள். ஆனால், தானதர்மங்களை செய்வதன் நோக் கம் என்னவென்பதை அவரவர் தங்கள் இருதயத்தை ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும். சிலர் மன இரக்கமுள்ளவர்களாக எப்போதும் ஏழை எளியவர்களுக்கு உதவி வரு கின்றார்கள். இன்னும் சிலர் தங்கள் பெயரும் நன்கொடையாளர் பட்டியலில் வரவேண்டும் என்ற ஆசையுடையவர்களாக செய்து வருகின்றார் கள். சில நாடுகளிலே, மிகையான உள்ளாட்டு வரியிலிந்து தப்பித்துக் கொள்ளும்படிக்கும், தாங்கள் செய்துவரும் வியாபாரம் பிரபல்யமாக வேண்டும் என்றும், இன்னும் சிலர் பற்பல காரணங்களுக்காக அன்னதானங்களை வழங்குகின்றார்கள். ஒருவன் தன் மனதிலே என்ன நோக்கத்தை வைத்து, தானதர்மங்களை செய்து வருகின்றானோ, அவன் அதை அடைந்து கொள்வான். சிலர் அழிந்து போகும் இந்த உலகத்தின் மேன்மைக்காகவும், சிலர் அழியாத பரலோக மேன்மைகாகவும் கிரியைகளை நடப்பிக்கின்றார்கள். உலகத்தின் எதையும் அடைந்து கொள்ளவேண்டும் என்றால், உலகத்தின் அதிபதியின் விருப்பப்படி காரிய ங்கள் நடப்பிக்கப்பட வேண்டும். அந்த அதிபதியானவன், அவைகளை அங்கீகரிக்க வேண்டும். அது போலவே, பரலோகத்தின் மேன்மைக்காக பிரயாசப்படுகின்றவனின், பிரயாசங்கள் பரலோத்தின் பிதாவாகிய தேவனாகிய கர்த்தர் முன்னிலையில் அவை ஏற்புடையவைகளாக காணப்பட வேண்டும். பிரியமான சகோதர சகோதரிகளே,'திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயி ருக்கிறது.' எனவே, தானதர்மங்களை நாம் செய்ய வேண்டும். அந்த தானதர்மங்களை செய்ய முன்னதாக உங்கள் இருதயத்தின் எண்ண ங்கள் தேவனுக்கு முன்பாக ஏற்புடையதாக இருக்கட்டும்.
ஜெபம்:
மன இரக்கமும் உருக்கமுமுள்ள தேவனே, இந்த உலகத்திற்கு பிரியமாக நான் நடக்க வேண்டும் என்பதற்காக தானதர்மங்களை செய்யாமல், உமக்கு பிரியமாக இருக்கும்படி கிரியைகளை நடப்பிக்க உதவி செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - லூக்கா 21:1-4