தியானம் (வைகாசி 11, 2025)
பரம பிதாவின் பிரியமான பிள்ளைகள்
மத்தேயு 5:48
ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணரா யிருக்கக்கடவீர்கள்.
'கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர். அவர் எப்பொழுதும் கடிந்துகொள்ளார்; என்றைக்கும் கோபங்கொண்டிரார். அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக் கட்டாமலும் இருக்கிறார். பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக் கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது. மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார். தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்.' (சங்கீதம் 103:8-13). ஆம் பிரியமான சகோதர சகோதரிகளே, நாம் நிற்பதும், நிர்மூலமாகாதிருப்பதும் கர்த்தருடைய கிருபையாக இருக்கின்றது. எனவே, மேன்மை பாராட்டுதல் ஒரு போதும் நம்மை குறித்தாக இருக்கக்கூடாது. நம்முடைய மேன்மைபாராட்டுதல் தேவ கிருபையை குறித்தாக இருக்கட்டும். இத்தகைய கிருபையையும் இரக்கத்தையும் பெற்ற தகுதியற்றவர்களாகிய நாம், எதிரிகள் என்று எவரையும் கருதாமலும், பகை, வன்மம், கசப்பு போன்றவை மனதிலே குடி கொள்ளாமலும் இருக்கும்படிகயாக இருதயத்தை காத்துக் கொள்ள வேண்டும். நாம் எதிரிகள் என்று கருதும் மனிதர்களுக்காக ஜெபிக்க வேண்டும். அவர்கள் குற்றங்களை மனதார மன்னிக்க பழகிக் கொள்ள வேண்டும். புறம்பே இருக்கின்றவர்களைப் போல நாமும்; முற்காலத்திலே இருந்தோம் என்பதை மறந்து போய்விடக்கூடாது. 'இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்கு புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்ப ண்ணுகிறார். உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன? ஆயக்காரரும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா? உங்கள் சகோதரரைமாத்திரம் வாழ்த்துவீர்களா னால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன? ஆயக்காரரும் அப்படிச்செய்கிறார்களல்லவா? ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்.' (மத்தேயு 5:45-48)
ஜெபம்:
பூரண சந்குணராயிருகின்ற பிதாவாகிய தேவனே, நானும் உம்மைப்போல இருக்கும்படிக்கு, நாளுக்கு நாள் என்னுடைய உள்ளான மனிதன் புதிபிக்ககப்படும்படிக்கு என்னை கரம் பிடித்து நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - 1 யோவான் 3:1