புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 10, 2025)

நாம் அந்நியர்களாக இருந்தோம்

2 பேதுரு 3:9

ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.


ஆதியிலே மனித குலத்தின் முதல் பெற்றோராகிய ஆதாம் ஏவாள் பாவம் செய்து, தேவ மகிமையை இழந்து நித்திய ஆக்கினைக்குள்ளானர்கள். அந்த சாபமானது அவர்கள் வழிதோன்றிய மனிதகுலத்தின்மேல் விழுந்தது. அந்த சாபத்திலிருந்து விடுதலையுண்டாக்கும்படிக்கு ஒரு மீட்பரை அனுப்புவேன் என்று தேவானாகிய கர்த்தர்தாமே வாக்களித்தார். அந்த வாக்குத்தத்தமானது, ஒரு குறிப்பிட்ட ஜனத்திற்குரியதல்ல, மாறாக, ஆதிப் பெற்றோரின் வழியான வந்த சந்த தியினர் யாவருக்கும் உடையதாகும். அந்த நாளிலிருந்து, ஜனங்கள் பகுதிபதியாக, பிரிந்து போய், தமக்கென்று மதங்களையும், வழிபாடுகளையும், மார்க்கங்களையும் தெரிந்து கொண்டார்கள். அப்படியாகவே நம்முடைய முன்னோர்களும், அத்தகைய வழிபாடுகளிலே அகப்பட்டு, மெய் யான தேவனை அறியாதவர்களாக வாழ்ந்து வந்தார்கள். தேவனாகிய கர்த்தர் ஆதியிலே கூறிய மீட்பின் வாக்குத்தத்தை நிறைவேற்றும்படிக்கு, ஒரு ஜனக்கூட்டத்தை பிரித்தெடுத்து, அவர்கள் வழியாக அந்த வாக்குத்தத்தை நிறைவேற்றினார். தமது வாக்குத்தத்தை நிறைவேற்றும்படி அவர் வேறு பிரித்த ஜனக்கூட்டமானது, தகுதியின் அடைப்படையில் தெரிந்தெடுக்கப்படவில்லை. மாறாக, தேவ கிருபையின்படியே அவர்களை தெரிந்தெடுத்தார். அந்த ஜனக்கூட்டத்தின் வழியாக மெசியாவாகிய இயேசு கிறிஸ்து வெளிப்பட்டார். அக்காலத்திலே, தேவனுக்கு பகைஞராகவும், பரலோக ராஜ்ய்திய்றகு அந்நியராகவும் இருந்த நம்மேல்; அவருடைய திவ்விய மீட்பு வெளிப்பட்டது. அந்த மீட்பானது நம்முடைய தகுதியின் அடிப்படையிலே அல்ல, மாறாக, தேவ கிருபையினால் உண்டானது. மீட்பைப் பெற்ற தம்முடையவர்களாகிய நம்மை, பரலோகம் சேர்க்கும்படி மறுபடியும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வருவார். ஆனாலும் அவர் ஏன் தாமதிக்கின்றார்? சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார். எனவே, நான் கர்த்தர் அறிந்தவன், நான் வேறு பிரிக்கப்பட்டவன் என்று அகந்தை கொள்ளாமலும், இதுவரைக்கும் கர்த்தரை அறியாதவர்களை, பாவிகள் என்று வெறுத்துத்த தள்ளாமலும், அவர்களுக்கும் தேவ கிருபை வெளிப்படு ம்படி நீடியபொறுமையோடும், அவர்களுக்காக ஜெபம் செய்யுங்கள்.

ஜெபம்:

அநாதி ஸ்நேகத்தால் என்னை நேசித்த தேவனே, உம்முடைய கிருபைக்காக ஸ்தோத்திரம். நான் பெற்றுக் கொண்ட மீட்ப்பை மற்றவர்களும் பெற்றுக் கொள்ளும்படி நீர் உம்முடைய கிருபையை பொழிந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ரோமர் 2:4