தியானம் (வைகாசி 07, 2025)
அறியாமையிலே வாழ்பவர்கள்
உபாகமம் 10:17
அவர் பட்சபாதம்பண்ணுகிற வரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல.
வேறு பிரிந்த வாழ்க்கை என்பது, பாவிகள் துரோகிகள் என்று மற்றவர்களை ஒடுக்கி, தள்ளி, புறம்போக்காக வாழும் வாழ்க்கையல்ல என்பதை இந்த நாட்களிலே தியானித்து வருகின்றோம். மாறாக அவர்கள் வாழும் சமுதாயத்தின் மத்தியிலே நாம் வாழ்ந்தாலும் அல்லது அவர்கள் நாம் வாழும் சமுதாயத்தில் இருந்தாலும், நாம் நம்மை கறைப்படுத்திக் கொள்ளாமல், தேவ கிருபையை அவர்களுக்கு வெளிப்படுத்ததுகின்றவர்களாக, தேவனுக்கு பிரியமுள்ள வாழ்க்கை வாழ வேண் டும். பழைய ஏற்பாட்டு காலங்க ளிலே வாழ்ந்த மதத்தலைவர்கள், வேறுபிரிக்கபட்ட ஜனங்கள் என்பதன் கருபொருளை அறியாமல், தனக்கடுதவனை நேசிக்க வேண்டும் என்றும், தங்களைப் போலில்லாதவர்களை வெறுத்து தள்ளிவிட வேண் டும் என்ற போதனை கொண்டவர்ளாக காணப்பட்டார்கள். ஆதலால் ஆண்டவராகிய இயேசுதாமே 'உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப் பட்டிருக்கிறீர்கள்.' (மத்தேயு 5:43) என்று மலைப்பிரசங்கித்திலே கூறினார். அது தேவனுடைய கட்டளையல்ல, மாறாக, மதத்தலைவர்கள் அப்படியாக போதனை செய்து வந்தார்கள். தேவ ஊழியராகிய மோசே வழியாக நியாயப்பிரமாண விதிகளை கொடுக்கும் போது, தேவனாகிய கர்த்தர்தாமே அவர்களை நோக்கி: 'உங்கள் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார்; அவர் பட்சபாதம்பண்ணுகிற வரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல. அவர் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் நியாயஞ்செய்கிறவரும், அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு அன்னவஸ்திரம் கொடுக்கிறவருமாய் இருக்கிறார். நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தபடியால், அந்நியரைச் சிநேகிப்பீர்களாக.' என்று அந்நியர்களை எப்படியாக நடத்த வேண்டும் என்று குறிப்பாக கூறியிருக்கின்றார். (உபாகமம் 10:17-19). மேலும், 'சகோதர சிநேகம் நிலைத்திருக்கக்கடவது. அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித் ததுண்டு.' (எபிரெயர் 13:1-2) என்று எபிரெயருக்கு எழுத்தின நிருபத்திலே வாசிக்கின்றோம். எனவே, நம்முடையவர்களை மாத்திரம் சிநேகிப்போம் என்ற எண்ணத்தை முற்றாக தள்ளிவிட்டு, தெய்வீக சுபாவங்களை மற்றவர்களுக்கும் காண்பியுங்கள்.
ஜெபம்:
பட்டசபாதம் இல்லாமல் கிருபையை பொழிகின்ற பரலோக தேவனே, எல்லையற்ற தெய்வீக அன்பை நான் மற்றவர்களுக்கும் காண்பிக்கும்படி, உணர்வுள்ள இருதயத்தை எனக்கு தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - கலா 6:9