தியானம் (வைகாசி 02, 2025)
பகைமையை வைத்திராதிருங்கள்
மத்தேயு 5:44
உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்;
'கர்த்தாவே, உம்மைப் பகைக்கிறவர்களை நான் பகையாமலும், உம க்கு விரோதமாய் எழும்புகின்றவர்களை அருவருக்காமலும் இருப்பேனோ? முழுப்பகையாய் அவர்களைப் பகைக்கிறேன், அவர்களை எனக்குப் பகைஞராக எண்ணுகிறேன்' (சங்கீதம் 139:21-22) என்று தாவீது ராஜா தன்னிடத்திலிருக்கும் தேவனைக் குறித்த வைராக்கியத்தை வெளிப்படுத்துகின்றார். அன்றிருந்த தேவ ஜனங்களில் சிலரும், இன்றிருக்கும் விசுவாச மார்க்கத்தாரில் சிலரும் இதை பரிசுத்த சினம் என்று வகையறுத்து இந்த வசனங்களை தவறான முறையிலே விளங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அப்படியாக பூர்வத்தாருக்கு போதித்துமிருக்கின்றார்கள். எவரைக் குறித்ததான, பகை, வன்மம், கசப்பு போன்றவற்றை தேவனுடைய ஜனங்கள் மனதிலே வைத்திருக்கும்படி தேவன் ஒருபோதும் எவருக்கும் கூறவில்லை. துன்மார்க்கன் தன் துன் மார்கத்திலே அழிந்து போவது தேவனுக்கு பிரியமான காரியமல்ல. நாம் அக்காலத்திலே இயேசுகிறிஸ்துவைச் சேராதவர்களும், இஸ்ரவேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியரும், நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவவனற்றவர்களுமாயிருந்தோம். நம்மக்கும் பரலோகத்திற்கும் இடையிலே பகையாக பிரிவினையின் நடுச்சுவர் இருந்தது. (எபேசியர் 2:12-13). தேவன் எங்களை வெறுத்துத் தள்ளவில்லை. அவர் எங்களை பகைஞராக கருதாமல், தம்முடைய பிள்ளைகளாகும்படி சித்தம் கொண்டார். ஒருவனும் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடைய வேண்டும் என்பதே பிதாவாகிய தேவனுடைய விரும்பமாக இருக்கின்றது. மனிதகுலம் பாவத்திலே அழிந்து போகாதபடிக்கு அவர் நீடிய பொறுமையுள்ளவராக இருக்கின்றார். இந்த உலகம் ஆண்டவராகிய இயேசுவை பகைத்தது. இன்றும் உலகத்தின் போக்கை நாடி, அதன் வழியிலே செல்பவர்கள் ஆண்டவராகிய இயேசுவையும், அவரைப் பின்பற்றுகின்றவர்களையும் பகைக்கின்றது. அன்று அவர் சிலுவையில் தொங்கும் போது, தன்னைத் துன்பப்படுத்துகின்றவர்களை மன்னிக்கும்படியாக பிதாவை வேண்டிக் கொண்டார். அவரைப் போலவே நாமும், இந்த உலகத்தின் போக்கிற்கு உடன்படாதவர்களாவும், அதன் போக்கிலே வாழும் மனிதர்களைக் குறித்த பகைமையை உள்ளத்திலே வைத்து வளர்க்காதபடிக்கும், அவர்களுடைய இரட்சிப்புக்காக பரிந்தி பேசி ஜெபிக்கின்றவர்ளாக காணப்பட வேண்டும்.
ஜெபம்:
ஒருவரும் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு உம்முடைய ஒரே குமாரனை அனுப்பிய தேவனே, மனிதகுலம் யாவும் உம்மை அறியவேண்டும் என்ற மனநிலையுடையவனாக இருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - 1 யோவான் 3:15