புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 27, 2025)

நன்மைகளின் பிதாவாகிய தேவன்

ரோமர் 8:28

...சகலமும் நன்மைக்கு ஏது வாக நடக்கிறதென்று அறிந் திருக்கிறோம்.


வாலிப பிராயத்திலுள்ள மாணவனொருவன், தன்னுடைய பதினெட்டாவது பிறந்த தினத்தை முன்னிட்டு, தனக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுக்கும்படி தன் தகப்பனானவரிடம் கேட்டுக் கொண்டான். தன்னுடைய வகுப்புகளுக்கு நேரத்திற்கு செல்வதற்கும், வார இறுதி நாட்களிலே அவன் பார்த்து வரும் பகுதி நேர வேலைக்கும் அந்த மோட்டார் சைக்கிள் பெரும் உதவியாக இருக்கும் என்பது அவனுடைய கருத்தாக இருந்தது. அந்த தகப்பனானவருக்கு, பொருளாதார ரீதியாக எந்த தடைகளும் இல்லாதிருந்த போதும், தன் மகனானவனை உண்மையாக நேசித்த படியினால், அனுடைய நன்மை கருதி, அதை வாங்கி கொடுப்பதற்கு மறுப்பு தெரிவித்தார். ஏனெனில், அவனுடைய எண்ணமும், வாலிபத்தின் பரபரப்பும், ஊரின் நெடுஞ்சாலையில் இருக்கும் பயங்கரங்களும், அவன் உயிருக்கு ஆபத்தை கொண்டு வரும் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தபடியால், மோட்டார் சைக்கிளை வாங்கி கொடுப்பதற்கு இது தகுந்த நேரமில்லை என்பதை நன் றாக அறிந்திருந்தார். மனிதர்களுடைய எண்ணப்படி, அவர்களுக்கு தேவை என்று அவர்கள் கூறிக் கொள்ளும் காரியங்கள் யாவும், ஒருவேளை அவர்களுக்கு நன்மையாக தோன்றினாலும், அவர்களுடைய வாழ்விற்கு அது தீமைகளை உண்டு பண்ணிவிடலாம். உன்னிடத்தில் கேட்கின்றவனுக்கு கொடு, உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகின்றவனுக்கு முகங் கோணாதே என்று ஆண்டவராகிய இயேசு கூறும் போது, அவர் நன்மை செய்வதற்கு தயக்கம் காண்பிக்காதே என்பதையே சுட்டிக் காட்டுகின்றார். முதலாவதாக, ஒருவன் நன்மை செய்வதற்குரிய பெலன் அவனி டத்தில் இருக்க வேண்டும். அந்த உதவி அதைப் பெற்றுக் கொள்பவனுடைய வாழ்விலே தீமையை உண்டாகும் என்று திட்டமாக அறிந்திருந்தால், அந்த உதவியை செய்யாதிருப்பதே அவனுக்கு நன் மையாக இருக்கும். தம்முடைய குமாரனென்று பாராமல், அவரையே நமக்காக கொடுத்தவர், சகல நன்மைகளையும் நமக்கு அருளிச் செய்வார். ஆனாலும், நாம் ஜெபத்திலே ஏறெடுக்கும் விண்ணப்பங்கள் எல்லாம், நாம் நினைத்த நேரத்தில் பெற்றுக் கொள்வதில்லை. தேவனாகிய கர்த்தர், நம்முடைய தேவை இன்னதென்றும், அதை நாம் பெற்றுக் கொள்ளும் சரியான நேரத்தையும் அறிந்திருக்கின்றார். எனவே, நாம் நன்மை செய்ய ஒருபோதும் தயங்கக்கூடாது. நம்முடைய கிரியைகள் மற்றவர்களுக்கு தீமையாக மாறாதபடிக்கு எச்சரிக்கையுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்.

ஜெபம்:

அன்பின் தேவனே, உம்முடைய தீர்மானத்தின்படி அழைக்கப்ப ட்டவர்களாய் உம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கேதுவாக நீர் செய்து முடிப்பமால் உமக்கு ஸ்தோத்திரம். இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 34:6